லவ்வர் – உங்கள் காதலுக்கான கண்ணாடி!

காதல் ஜோடிகள் காதல் திரைப்படங்களைப் பார்ப்பது காலம்காலமாகத் தொடர்கிற ஒரு வழக்கம்தான். ஆனால், படத்தின் இடையிலேயே அந்த காதல் ஜோடிகள் ஒருவரையொருவர் திரும்பி முகம் பார்த்துக்கொள்வது அரிதானது.

காதலின் வலிமையும் கொண்டாட்டமும், எதிர்காலம் குறித்து அது உருவாக்கும் கனவுகளும் அதற்குக் காரணமாக இருக்கலாம்; சில நேரங்களில் காதல் குறித்த சில அடிப்படைக் கேள்விகளை பீறிட வைப்பதாகவும் அப்படம் அமையலாம்.

‘குட்நைட்’ மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்திருக்கிற மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரிப்ரியா, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிப்பில், புதுமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கியிருக்கும் ‘லவ்வர்’ திரைப்படம், மேற்சொன்னவற்றில் எந்த வகையறாவில் அடங்குகிறது?

வழக்கமான ‘காதல்’!

கல்லூரிக் காலத்தில் அருண் (மணிகண்டன்), திவ்யா (ஸ்ரீகௌரிப்ரியா) இடையே காதல் மலர்கிறது. ஆறாண்டுகளுக்கும் மேலாக அது தொடர்கிறது.

தனியாக ஒரு ‘கஃபே’ ஆரம்பிக்க வேண்டுமென்பது அருணின் ஆசை. அதற்காகப் பார்த்த வேலையை உதறிவிட்டுத் தாயிடம் (கீதா கைலாசம்) பன்னிரண்டு லட்சம் ரூபாய் பணம் பெறுகிறார். ஆனால், அந்த தொழிலைச் செய்ய முடியாமல் பணம் பறிபோகிறது.

அதன்பிறகு, அந்த ‘கஃபே’ ஆரம்பிப்பதைத் தவிர வேறெதுவும் அவர் மனதில் இருப்பதில்லை. டிசைனிங்கில் திறமை இருந்தாலும், அது தொடர்பான வேலையைச் செய்ய அருண் தயாராக இல்லை.

அந்த காலகட்டத்தில், அருணுக்குள் எழும் தாழ்வு மனப்பான்மையால் சில பிரச்சனைகள் எழுகின்றன.

கல்லூரிக் கால நண்பர்களைச் சந்திக்காமல் தவிர்க்கிறார். மீறிப் பார்த்தாலும், அந்த இடத்திலேயே கலாட்டாக்களை அரங்கேற்றுகிறார்.

அலுவலகத்தில் திவ்யாவோடு எந்த ஆண் நெருங்கிப் பழகினாலும், அதனைக் கடுமையாகச் சாடுகிறார். தனக்குத் தெரியாமல் காதலி எந்தக் காரியத்திலும் துளிகூட ஈடுபடக் கூடாது என்று நினைக்கிறார்.

அதனால், தினசரி வாழ்வின் மிகச்சாதாரண விஷயங்களுக்குக் கூட அருணிடம் பொய் சொல்லத் தொடங்குகிறார் திவ்யா. போலவே, திவ்யாவுக்காகத் தன்னைப் பலவகையில் மாற்றியதாகக் காட்டிக்கொண்டு உண்மையை மறைக்கிறார் அருண்.

வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல, இருவருக்குமான உறவு தொடர்ந்து வருகிறது. திவ்யாவின் அலுவலகத்தில் மதன் (கண்ணா ரவி) என்பவர் புதிதாகச் சேர்ந்ததும், அந்தக் கணம் வந்துவிடுகிறது.

ஒருகட்டத்தில், அருண் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணமான காதலை உதறத் தயாராகிறார் திவ்யா.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் சரிவைச் சந்திக்கிற அருணுக்குக் காதலியின் பிரிவைத் தாங்கவே முடிவதில்லை.

அதனைச் சரி செய்வதற்காக அருண் எடுக்கும் முயற்சி திவ்யாவின் விலகலை மேலும் அதிகமாக்குகிறது.

இருந்தாலும், விடாப்பிடியாக அதனைத் தொடர்கிறார் அருண்.

இறுதியில் என்னவானது என்பதோடு படம் முடிவடைகிறது.

‘புரிதல் இல்லா காதலைப் போல நரகம் எதுவுமில்லை’ என்று சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் பிரபுராம் வியாஸ்.

அதுவே, வழக்கமான ஒரு காதல் கதையில் சோகமான எபிசோடுகளை நாம் பார்க்கக் காரணமாகிறது.

மிகச்சில பாத்திரங்கள்!

திரையில் பல நூறு மனிதர்கள் நடமாட வேண்டும். பிரமாண்டத்தின் ஜொலிப்பு ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்பட வேண்டும்.

மனதைக் கிழிக்கும் வகையில் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்பது உட்பட கமர்ஷியல் சினிமாவுக்காகத் திரையுலகம் பின்பற்றும் பல விதிகளை மீறியிருக்கிறது இந்த ‘லவ்வர்’.

அதேநேரத்தில், தற்காலச் சூழலில் ஒரு காதலனும் காதலியும் எப்படியெல்லாம் சிந்திக்கின்றனர் என்று காட்டுகிறது.

‘நீ கரெக்டா பேசுறேன்னு சொல்லமாட்டேன், ஆனா நீ பேசுறதை என்னால புரிஞ்சிக்க முடியுது’, ‘இன்னொருத்தரை ஹர்ட் பண்ணிடுவேனோங்கற பயத்துனாலேயே என்னால இன்னொரு ரிலேஷன்ஷிப்புக்குள்ள போக முடியலை’,

’மச்சான் தங்கம்டா அந்த பொண்ணு, விட்டுறாதடா’, ‘எப்பம்மா உங்க வீட்டுல கல்யாணத்தைப் பத்தி பேசப் போற’, ‘யூ டிசர்வ்ஸ் மோர் பெட்டர்’ என்பது போன்ற வசனங்களே இந்த படத்தின் கதையோட்டத்தையும் அதன் ஆன்மாவையும் புரியவைத்து விடுகின்றன.

முதல் பாதி முழுக்க நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே எப்போது மோதல் வெடிக்கும் என்பதை நோக்கி நகர்கிறது. இரண்டாம் பாதியோ, நாயகியின் பிரிவை ஏற்க முடியாமல் நாயகன் தவிப்பதைக் காட்டுகிறது.

உண்மையில், பிரிவுக்கான விதை நாயகியின் மனதில் ஏற்கனவே முளைத்துவிட்டது என்பதைத் திரைக்கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார் இயக்குனர் பிரபுராம் வியாஸ்.

அதனால், சராசரியான மனிதர்கள் தானாக நாயகியின் பக்கம் சாய்ந்துவிடுகின்றனர்.

அதேநேரத்தில், நாயகனின் கோணங்கித்தனமான செய்கைகளை ரசித்து ஆராதிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் ‘தாங்களும் அப்படித்தான் நடந்து கொண்டோம், கொள்கிறோம் அல்லது நடந்து கொள்வோம்’ என்றெண்ணுவதன் பிரதிபலிப்பாகத் திகழ்கின்றனர்.

உளவியல்ரீதியாக இப்படம் எப்படிப்பட்ட தாக்கத்தைத் திரையரங்குகளில் உருவாக்கும் என்கிற இயக்குனரின் இந்தப் புரிதல்தான், இதன் பலமும் பலவீனமுமாக விளங்குகிறது.

மனமாற்றங்களைச் சொல்லப் பயணம் அவசியம் என்று நினைத்தோ என்னவோ, பின்பாதி முழுக்க கோகர்ணம் என்ற ஊரின் அழகைத் திரையில் காட்டியிருக்கிறார் பிரபுராம் வியாஸ்.

அதனை அழகுறப் படம்பிடித்திருக்கிறது ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு.

ராஜ்கமலின் தயாரிப்பு வடிவமைப்பு, படத்தின் அனைத்து பிரேம்களும் ஆழமிக்கதாக, அழகுற விளங்குவதாக, பாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை திரைக்கதைக்குப் பெரிதும் வலு சேர்த்திருக்கிறது.

படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள். அனைத்திலும் காதலே பேசுபொருள் என்பது இன்னொரு சிறப்பு. மீண்டும் மீண்டும் கேட்கையில் பிடிக்கலாம் எனும் ரகத்தில் இப்பாடல்கள் உள்ளன.

‘லவ்வர்’ திரைக்கதை முழுக்க நாயகனையும் நாயகியையுமே மையப்படுத்துகிறது.

நாயகியின் குடும்பத்தினரை இயக்குனர் திரையில் காட்டவில்லை. ஆனால், நாயகி மனதில் நாயகன் குறித்த பிம்பம் நொறுங்குவதற்கான ஒரு காரணமாக, நாயகனின் பெற்றோரை ஆளுக்கொரு திசையில் நிற்க வைத்திருக்கிறார்.

‘செமையா நடிச்சிருக்காருப்பா’ என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்குத் திரையில் ஒரு சாதாரண இளைஞராக வந்து போயிருக்கிறார் மணிகண்டன்.

விஜய் சேதுபதியின் இன்னொரு வடிவமாகத் தன்னை ரசிகர்களிடம் வெளிக்காட்ட முனைந்திருக்கிறார்.

நாயகி ஸ்ரீ கௌரிப்ரியா அழுவதை நாம் குளோஸ்அப்பில் பார்க்க வேண்டியிருக்கிறது. காட்சிரீதியாக, அது அழகாகவும் அமைந்திருக்கிறது என்பதுதான் நடிப்பில் அவர் காட்டியிருக்கும் சிரத்தைக்கான பாராட்டு!

நாயகியின் தோழிகளாக வரும் நிகிலா சங்கர், ஹரிணி இருவரில் முதலாமவரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துப் போகிறது. அதேநேரத்தில், ’இளவட்டங்கள்’ கழுவி ஊற்றாமலிருந்தால் ஆச்சர்யம் எனுமளவுக்கு உள்ளது ஹரிணியின் பாத்திரம்.

‘மச்சான் அப்புறம் டிண்டர்ல புரொபைல் ரெடி பண்ணிட்டியா’ என்று நாயகியிடம் சொல்லும் ஹரிஷ்குமார், நாயகனைப் பார்த்ததும் திக்கித் திணறுவார்.

அதே பாத்திரம் திரைக்கதையின் ஓரிடத்தில் நாயகனின் தோழமையாக மாறி நிற்கும் இடம், இயல்பு வாழ்வில் இப்படியும் சில மனிதர்கள் உண்டென்பதைக் காட்டும்.

இந்த படத்தில் அற்புதமான ‘சாக்லேட் பாய்’யாக தோன்றியிருக்கிறார் கண்ணா ரவி.

புஜபல பராக்கிரமங்கள் மிகுந்திருந்தாலும், அடிப்படையில் தன்னை ஒழுக்கவாதியாகக் கட்டமைத்துக் கொண்டுள்ள பாத்திரம் அவருடையது.

அதனை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பது, பல இளம் ரசிகைகளை அவருக்குப் பெற்று தரும்.

மணிகண்டனின் தாயாக வரும் கீதா கைலாசமும், தந்தையாக வரும் சரவணனும் மிக முக்கிய பாத்திரங்களாகத் திரைக்கதையில் தென்படுகின்றனர்.

நண்பர்களாக வருபவர்களில் பிண்டோ பாண்டு தவிர்த்து, நாயகனுடன் எந்நேரமும் சுற்றுபவராக வரும் நபர் கவனம் ஈர்க்கிறார்.

மாறாத ஈரம்!

ஸ்பாய்லர் என்றபோதும் இதனைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அதுவே இந்த படத்தை ஒரு ரசிகர் பார்த்தாக வேண்டும் என்பதற்கான காரணமாகவும் உள்ளது.

நல்லதொரு காதல் பிரிவைச் சந்தித்தபின்னும் ஈரம் மாறாமல் அப்படியே இருக்கும். பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் நல்ல அபிப்ராயமே, இருவரையும் இயக்கும். இதனை வார்த்தைகளாக அல்லாமல், ஒரு வாழ்க்கையாகத் திரையில் சொல்கிறது ‘லவ்வர்’.

நாயகனை உளவியல் பிரச்சனைகள் மிக்கவராகக் காட்டுகிறது இப்படம். உண்மையைச் சொன்னால், பழமைவாதத்தில் ஊறியவராக அவரை வெளிப்படுத்தியிருக்கிறது.

அதேநேரத்தில், நாயகி பொய் சொல்லிக்கொண்டு அவரது நண்பர்கள், தோழிகளுடன் சுற்றுவதை நியாயப்படுத்துகிறது.

அது பற்றி நாயகனுக்குள் கேள்வி முளைக்கும்போது, ‘நீ என்கிட்ட உண்மையைச் சொல்லியிருக்கணுமா வேண்டாமா’ என்பார் நாயகன்.

பதிலுக்கு ‘உண்மை சொல்லியிருந்தா நீ விட்ருப்பியா’ என்பார் நாயகி. அதற்கு, ‘பெர்மிஷன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார் நாயகன்.

உடனே ‘நான் ஏன் உன்கிட்ட பெர்மிஷன் கேட்கணும்’ என்று கத்துவார் நாயகி. ‘லவ்வர்’ படத்தின் மொத்தக் கதையும் இந்த உரையாடலுக்குள் அடங்கியிருக்கிறது.

இதுவே இந்த படத்தில் பார்வையாளர்கள் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. திரும்பத் திரும்ப ஒரேமாதிரியான காட்சிகள் வருவதாக நமக்குள் தோன்றச் செய்கிறது. ‘ச்சேய், இதெல்லாம் ஒரு பிரச்சனையா’ என்று நம்மைப் புலம்ப வைக்கிறது.

இதே மாதிரி எத்தனை ஜோடிகள் காதலோடு இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று பலவாறாக எண்ண வைக்கிறது.

நாயகன் தொழில் முதலீடுக்காக வாங்கிய பணம் பதினைந்து லட்சம் என்னவானது? அவரது பெற்றோருக்கு இடையே எப்போது விரிசல் விழுந்தது என்பது போன்ற சில கேள்விகளுக்குத் திரைக்கதையில் பதில்கள் இல்லை.

ஒருவேளை ‘டெலிடட் சீன்’களாக அவை பின்னர் வெளியாகலாம்.

‘காதலன், காதலி இருவரது சுதந்திரமும் அவரவர் சம்பந்தப்பட்டது’ என்பதாகப் படத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் பிரபுராம் வியாஸ்.

‘அது எப்படிங்க சரியா இருக்கும்’ என்று கேட்பவர்களுக்கு இந்த படம் ‘மொக்கையாக’த் தெரியும். ‘அதுதானே கரெக்ட்’ என்பவர்களுக்கு ‘லவ்வர்’ நிச்சயம் பிடித்துப் போகும்.

இந்த படத்தைக் காதலர்கள் ஜோடியாகச் சேர்ந்து பார்க்கும்போது நிச்சயம் இரண்டு விஷயங்கள் நிகழும். ஒன்று, காதல் பிணைப்பு மேலும் இறுக்கமாகும்.

இன்னொன்று, பிணைந்து கொண்டிருந்த கைகள் தானாகத் தளர்ந்து விடுபடும்.

எது உங்களுக்கானது என்று முன்கூட்டியே கணித்தால், இந்த படத்திற்குப் போகலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்துவிடலாம். அந்த வகையில், இந்த ‘லவ்வர்’ உங்கள் காதலுக்கான கண்ணாடி!

– உதய் பாடகலிங்கம்

You might also like