‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சீனுக்கு வந்தாலே போதும்’ என்று பேட்டி தரும் ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவைத்து, அவரை ஒரேயொரு காட்சியில் மட்டும் காட்டினால் என்ன நிகழும்?
அதை மனதில் கொண்டே, ரஜினியை கௌரவ வேடங்களில் நடிக்க வைக்கத் தயக்கம் காட்டுவது தமிழ் திரையுலகின் வழக்கம்.
அதையும் மீறி வள்ளி, குசேலன் போன்ற படங்களில் அவரது பாத்திரங்கள் கொஞ்சம் பெரிதாக்கப்பட்டிருந்தன. அந்த வரிசையில் இன்னுமொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘லால் சலாம்’.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா, செந்தில், விவேக் பிரசன்னா உட்படப் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினி வெறுமனே ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறாரா அல்லது அவரே திரைக்கதையின் மையமாக விளங்குகிறாரா?
எம்மதமும் சம்மதம்!
கடலூர் அருகேயுள்ள மூரார்பாத் எனும் கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த மொய்தீன், பம்பாய் சென்று துணி வியாபாரம் செய்து பெரிய வணிகராகத் திகழ்கிறார்.
பணிகளுக்கு நடுவே, அவ்வப்போது ஊருக்குப் போவதும் வருவதுமாக இருக்கிறார்.
ஊரில் அவருக்குச் சொந்தமான வீட்டில் நண்பர் (லிவிங்ஸ்டன்) குடும்பம் வசித்து வருகிறது.
அவரது மகன் திருநாவுக்கரசுவுக்கும் மொய்தீன் மகன் சம்சுதீனுக்கும் சிறு வயது முதலே ஆகாது.
வளர்ந்தபிறகும் கூட, அவர்களது மோதல் ஓய்வதாக இல்லை.
உள்ளூரில் பெரிய கிரிக்கெட் வீரராகத் திகழ்கிறார் திரு (விஷ்ணு விஷால்). எம்சிசி என்ற அணியின் கேப்டனாக இருக்கிறார். எல்லா போட்டிகளிலும் அவரது அணியே வெற்றி பெறுகிறது. அதேநேரத்தில், மொய்தீன் தொடங்கிய 3 ஸ்டார் அணி தோல்வியுறுகிறது.
இந்த அணிகளுக்கு இடையிலான ஈகோ மோதல் காரணமாக, ஒருமுறை 3 ஸ்டார் அணிக்காக ஆடப் பம்பாயில் இருந்து சம்சுதீன் வருகிறார். அந்த போட்டியில் எம்சிசி ஜெயிக்க, அடுத்ததாக ஒரு ஆட்டத்தில் அந்த அணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் சம்சுதீன்.
அதன்படியே, சந்தனக்கூடு திருவிழாவில் இரு அணிகளும் மோதும் போட்டிக்கு ஏற்பாடாகிறது. அதற்குள், ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு சம்சுதீன் தேர்வான தகவல் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது வர்ணனையாளர் இரு அணிகளும் மோதுவதை ‘இந்தியா – பாகிஸ்தான் மோதலாக’ உருவகப்படுத்துகிறார்.
திருவிழாவுக்கு வந்த மொய்தீன், அதனைக் கேட்டதும் அதிர்ந்து போகிறார். எங்கிருந்து இந்த விஷ வித்து முளைத்தது என்று அருகில் இருப்பவர்களிடம் கேட்கிறார்.
இந்த நிலையில், கிரிக்கெட் ஆட்டத்தில் ஏற்படும் சிறு பிரச்சனை இரு அணி வீரர்களுக்கு இடையிலான மோதலாகிறது.
அடுத்து, ஊரே இரண்டுபடுகிறது. அப்போது ஏற்படும் களேபரத்தில், சம்சுதீன் கையை வெட்டிவிடுகிறார் திரு.
துருப்பிடித்த இரும்பினால் ஏற்பட்ட காயம் என்பதால், சம்சுதீன் கையை வெட்டி எடுத்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். மகன் நாட்டுக்காக கிரிக்கெட் ஆட வேண்டுமென்று விரும்பிய மொய்தீனுக்கு, அது வருத்தம் தருகிறது.
அதன்பிறகு என்னவானது? மகன் கையை வெட்டிய திருவை மொய்தீன் பழி வாங்கினாரா என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘லால் சலாம்’.
இரு தரப்புக்கும் உதவுவதாக, மூணார் ரமேஷ் நடித்துள்ள மைக்கேல் பாத்திரம் திரைக்கதையில் இடம்பெறுகிறது. இதுவே, இக்கதையின் மீது ‘எம்மதமும் சம்மதம்’ என்ற ஸ்டிக்கரை ஒட்டுகிறது.
இக்கதையில் இரு பிரிவினருக்கும் இடையே மோதலை உருவாக்கும் அரசியல்வாதிகளாக கே.எஸ்.ரவிக்குமார், நந்தகுமார், விவேக் பிரசன்னா பாத்திரங்கள் காட்டப்படுகின்றன.
ஒரு கதை போதுமே!
‘தலைவர் நடிச்ச சீன் வந்துடுச்சா’ என்று கவுண்டரில் கேட்டபிறகு ‘டிக்கெட்’ எடுக்கும் கூட்டம் இன்னும் மிச்சமிருப்பதைக் காட்டுகிறது ‘லால் சலாம்’. ரஜினிகாந்தை போலவே அவர்களில் பலர் முதுமையால் தளர்ந்திருக்கலாம்.
ஆனால், அந்த ஆராதனையில் எந்தக் குறைவும் இருக்கக் கூடாது என்பதற்காகத் தன் நடிப்பில் மெனக்கெட்டிருக்கிறார் ரஜினி.
ஆனால், அவரது பாத்திரத்தை யதார்த்தமாகக் காட்டுவதா அல்லது ஹீரோயிசத்தை நிறைப்பதா என்பதில் நிறையவே தடுமாறியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
அவரது ஜோடியாக வரும் நிரோஷாவுக்கு இதில் தனியாக வசனங்கள் எதுவுமில்லை.
விக்ராந்த் இதில் ரஜினியின் மகனாக நடித்துள்ளார். அவர் பாத்திரத்தைச் செவ்வனே செய்திருக்கிறார்.
இந்த படத்தின் நாயகன் என்று விஷ்ணு விஷாலைத் தாராளமாகச் சொல்லலாம். அதனை நியாயப்படுத்தும்விதமாக, ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது ஜோடியாக வரும் அனந்திகாவுக்கு ஒரு பாடல், இரண்டொரு காட்சிகளே தரப்பட்டுள்ளன.
இந்தக் கதையில் ஜீவிதா – லிவிங்ஸ்டன் ஜோடிக்கு உரிய முக்கியத்துவம் தரத் தவறியிருக்கிறார் இயக்குனர்.
அவர்களது காட்சிகள் ‘டெலிட்’ செய்யப்பட்டிருப்பதை உணர்த்துகின்றன திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகள்.
தம்பி ராமையா, செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், நந்தகுமார், ஆதித்யா மேனன், பாண்டி ரவி, மூணார் ரமேஷ் என்று பலர் வந்துபோனாலும் எவருக்கும் பெரிதாக முக்கியத்துவம் இல்லை. தங்கதுரை அவ்வப்போது லேசாகச் சிரிக்க வைக்கிறார்.
‘சேதுபதி’ போலப் படம் முழுக்க வன்மத்தைக் காட்டியிருக்கிறார் விவேக் பிரசன்னா. அவரது மனைவியாகத் தான்யா வருகிறார்.
அந்த காட்சிகளைப் பார்த்தபோது, ‘காந்தாரா படம் ஐஸ்வர்யாவை ஹெவியா இன்ப்ளூயன்ஸ் பண்ணியிருக்கு’ என்றே சொல்லத் தோன்றுகிறது.
இவர்கள் போக, கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கும் கூட இதில் காட்சிகள் உண்டு.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி, கலரிஸ்ட் ரங்கா, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராமு தங்கராஜ், விஎஃப்எக்ஸ் குழுவினர் என்று பலர் இத்திரைப்படத்தைச் செறிவானதாகத் திரையில் காட்ட உழைத்திருக்கின்றனர்.
படத்தொகுப்பாளர் பிரவீன் பாஸ்கர் தயவு தாட்சண்யமின்றி இக்கதைக்குத் தேவையற்ற காட்சிகளை வெட்டியெறியத் தயங்கியிருக்கிறார். அது படத்தின் ஆன்மாவையே சிதைத்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘தேர் திருவிழா’, ‘ஏ புள்ள’ பாடல்கள் இனிக்கின்றன. திரைக்கதை முழுக்கப் பெரிதாக ஓட்டைகள் நிறைந்திருப்பதால், அவரது பின்னணி இசையால் அவற்றை முழுமையாகச் சரி செய்ய முடியவில்லை.
இதன் கதை வசனத்தை ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமியே எழுதியிருக்கிறார்.
மூத்த பாத்திரங்கள் உதிர்க்கும் வசனங்கள் நல்ல ‘பஞ்ச்’களாகவே இருக்கின்றன.
‘லால் சலாம்’ படத்தின் பலவீனமே, அதன் திரைக்கதை எதனை நோக்கிப் பயணிக்கிறது என்ற கேள்விக்கு விடையளிக்காததுதான்.
இந்தக் கதைக்கு ஏன் இப்படியொரு டைட்டில்? மொய்தீன் பம்பாயில் தொழில் தொடங்க எந்த வகையில் திருநாவுக்கரசு தந்தை காரணமாக இருந்தார்?
உள்ளூர் எம்.எல்.ஏ. மருமகனான மகாராஜ் திருவை மூர்க்கமாக எதிர்க்க என்ன காரணம் என்பது போன்ற பல கேள்விகளுக்குத் திரைக்கதையில் விடைகள் கிடைப்பதில்லை.
மத நல்லிணக்கத்தை கிரிக்கெட் ஆட்டத்தின் வழியே புகுத்த நினைத்ததில் தவறில்லை. ஆனால், அதை நோக்கிச் செல்லும் திரைக்கதை திருவிழாவில் தேரை வில்லன் தரப்பு எடுத்துச் சென்றபிறகு எங்கோ திசை மாறுகிறது.
அதனால், ‘எதுக்கு இத்தனை கதை’ என்ற எண்ணமே நம்மை அயர்வுற வைக்கிறது. அதீத உள்ளடக்கம் ஆபத்து என்று மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது இப்படம்.
அழ வைக்கிறதா?
செந்தில், தம்பி ராமையா, ரஜினிகாந்த், ஜீவிதா சம்பந்தப்பட்ட காட்சிகளில் பல நம்மை அழ வைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவை.
ஆனால், படக்குழு எதிர்பார்த்தது திரையரங்கில் நிகழவே இல்லை. காரணம், உணர்வுப்பூர்வமாக இக்கதை அவர்களைத் திரையோடு பிணைக்கவே இல்லை.
கோர்வையற்ற காட்சிகள், தெளிவற்ற பாத்திர வார்ப்பு, மேம்போக்கான வாழ்வியல் அம்சங்கள், இலக்கற்ற திரைக்கதை பயணம் என்று பல விஷயங்கள் ‘லால் சலாம்’ படத்தைக் கீழிறக்குகின்றன.
வெறுமனே ‘இந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்குக’ என்று முழக்கமிடுவதற்கு ஒரு திரைப்படம் தேவையில்லை.
அதையும் தாண்டி, பலவற்றை நாம் பேசியாக வேண்டும். அதனைப் பிரசார நெடியுடன் சொல்லியிருப்பதுதான் ‘லால் சலாமின்’ பலவீனம்.
அது மட்டுமல்லாமல், மிகமேம்போக்காக சமூக ஒற்றுமை குறித்துப் பேசுகிறது திரைக்கதை.
அதனைத் தொடக்கத்திலேயே சரிசெய்து சரியாகத் திட்டமிட்டிருந்தால், மிக நேர்த்தியானதொரு திரைப்படமாக ‘லால் சலாம்’ மாறியிருக்கும்.
தற்போது ரஜினியின் சுமார் படங்களில் ஒன்று என்ற முத்திரையை மட்டுமே பெற்றிருக்கிறது.
பொன்னியின் செல்வன், ஜெயிலர் படங்கள் தொடர்பான முன்னோட்ட நிகழ்வுகளில் ரஜினிகாந்த் பேசியது அவை குறித்த எதிர்பார்ப்பினைப் பூதாகரப்படுத்தின.
அந்த வரிசையில் ‘லால் சலாம்’ இடம்பெறாமல் போனது வருத்தத்திற்குரிய விஷயம்தான்!
– உதய் பாடகலிங்கம்