சிறந்த கல்விச் சேவைக்காக கவுரவிக்கப்பட்ட முனைவர் லதா ராஜேந்திரன்!

மக்கள் மனங்களில் வள்ளலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் கண்ட கனவின்படி அவர் வாழ்ந்த சென்னை ராமாவரம் தோட்டத்தில் 1989-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் தொடங்கப்பட்டது.

இந்தப் பள்ளியை பொறுப்புடன் கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டவர், எம்.ஜி.ஆர் – ஜானகி தம்பதியரின் வளர்ப்பு மகளான திருமதி லதா ராஜேந்திரன்.

வாஷிங்டனில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வி போதிப்பது பற்றிய சிறப்புப் பயிற்சி பெற்று தாயகம் திரும்பிய லதா அந்தப் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஆசிரியர்களுக்கான மன அழுத்தம் குறித்து எம்.பில். ஆய்வு செய்த திருமதி லதா, காது கேளாத குழந்தைகளிடம் இருக்கும் ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

ஏழு பேர்களுடன் தொடங்கிய இந்தப் பள்ளி இன்று பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளை ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டும் இல்லாமல் உயர்கல்வி வகுப்புகளும் கொண்ட பயிற்சி நிறுவனமாகத் திகழ்கிறது.

குழந்தைப் பருவத்தில் இருந்து தன்னை தூக்கி வளர்த்த எம்.ஜி.ஆரின் சமூக நலக் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கும் முனைவர் லதா ராஜேந்திரன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கல்வி நிறுவனத்தை கண்போல் காத்து, இங்கு பயிற்சி பெற்ற மாணவ மணிகள் அரசு நிறுவனங்களிலும் உயர் பொறுப்பில் இருப்பதைப் பார்த்து ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் சான்றாண்மை மிக்க தாயாகத் திகழ்கிறார்.

இந்தக் கல்வி நிறுவனத்தைப் பார்வையிட்ட முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர். அப்துல்கலாம், “வள்ளலாக வாழ்ந்த எம்.ஜி.ஆர்., தன் மறைவுக்குப் பிறகும் இந்த நிறுவனம் மூலம் வள்ளலாகவே வாழ்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பல நாடுகளில் உள்ள வாய்ப் பேச முடியாத காது கேளாதவர்களுக்காக நடத்தப்படுகிற எத்தனையோ பள்ளிகளைப் பார்த்திருக்கிறேன். இந்த அளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கக்கூடிய பள்ளியை நான் எங்கேயும் பார்க்கவில்லை.”

-இப்படிச் சொன்னவர் உலக சுகாதார நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த டாக்டர் ராஜேந்திரகுமார்.

இந்த சாதனைப் பயணத்திற்கு பாதை அமைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்றால், அந்தப் பாதையில் சாதனைப் பயணத்தை நிகழ்த்தி வருபவர், முனைவர் லதா ராஜேந்திரன் அவர்கள்.

சமூகவியலிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டங்கள், மனிதவள மேம்பாட்டுத் துறையில் முதுகலைப் பட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வியிலும் 2 எம்.எட். பட்டங்கள், ஆய்வுத் துறையில் ஆழ்ந்த கல்வியின் விளைவாகப் பெற்ற எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி., பட்டங்கள், காது கேளாதோருக்கான சிறப்புக் கல்வியாளர் எனும் தகுதி, வாஷிங்டன் கல்லாடெட் பல்கலைக்கழகம் உட்பட இரண்டு நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சிப் பட்டயங்கள்.

இவை தவிர கல்வி நிறுவனங்களிலும் சமூக நிறுவனங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு பொறுப்புகள் வகிக்கும் முனைவர் லதா ராஜேந்திரன், டாக்டர்.பத்மா சுப்ரமணியம் அவர்களிடம் முறையாக நடனப் பயிற்சியும் சீரங்கம் கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களிடம் கர்நாடக இசைப் பயிற்சியும் பெற்றவர்.

சுற்றிச் சுழன்று பணியாற்றும் இந்த வெற்றித் திருமகள் சுழற்சங்கத்திலும் முக்கியப் பொறுப்பு வகித்திருக்கிறார்.

இவருடைய கல்விச் சேவையின் வரலாற்றில் இரண்டாவது அத்தியாயமாக எழுந்ததுதான் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 1996-ல் 90 மாணவிகளுடன் தொடங்கிய இந்தக் கல்லூரி இன்று நான்காயிரம் மாணவிகளுடன் வெற்றிநடை போடுகிறது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறன் கொண்ட 100 மாணவிகள் வரை சேர்க்கப்படுகிறார்கள். மற்ற மாணவிகளுக்கு இணையாகப் போட்டியிட்டு வெற்றிபெறும் விதமாக வார்க்கப்படுகிறார்கள்.

இதனாலேயே முனைவர் லதா ராஜேந்திரன் அவர்களும் கல்லூரியை நிர்வகிக்கும் இவருடைய புதல்வர் முனைவர் குமார் ராஜேந்திரன் அவர்களும் நலிந்தோர் வாழ்வின் நம்பிக்கை தீபங்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

பொருளாதார அளவில் நலிவுற்றவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பயிலும் விதமாக குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியைத் தரும் கற்பகத்தருவான டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடவுள் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கம்.

ஆமாம். இந்த கல்லூரியையும் சேர்த்து சென்னையில் இரண்டு கலங்கரை விளக்கங்கள்!

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு மாநாடுகளில் கலந்துகொண்டு 15க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளை முனைவர் லதா ராஜேந்திரன் சமர்ப்பித்திருக்கிறார்.

பயிற்சி தருவது பல்கலைக்கழகமாக விளங்கினாலும்கூட புதியவற்றைக் கற்றறிய வேண்டும் என்னும் திறந்த மனம் கொண்ட சிறந்த பண்பினால், தமிழக அளவிலும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் 20-க்கும் மேற்பட்ட பயிலரங்குகளில் பங்கேற்றிருக்கிறார்.

அத்துடன் 1994ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளில் தொடங்கி ஆண்டுதோறும் கல்வியியல் கருத்தரங்குகளை தன்னுடைய கல்லூரி வளாகத்தில் கண்ணும் கருத்துமாய் நடத்தி வருகிறார்.

1973ஆம் ஆண்டு தன்னுடைய நாட்டிய அரங்கேற்றத்தின்போது தனக்குப் பிரியமான சேச்சாவின் விருப்பத்திற்கிணங்க, “வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற பாடலுக்கு நடனமாடினார்.

இவருடைய வெற்றி இன்றைய சரித்திரமாக ஒளி வீசுகிறது. தொண்டிலும் தர்ம உள்ளத்திலும் தோற்காத படையாக இவரும் இவருடைய வாரிசுகளும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நீட்சியாகவே காட்சி தருகிறார்கள்.

“நெஞ்சம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணம் ஆகும்” என்பது மக்கள் திலகம் நடித்த திரைப்படம் ஒன்றில் ஒலிக்கும் பாடல் வரிகள்.

நறுமணம் வீசும் நினைவுகள் மட்டுமின்றி நலம் தரும் செயல்களைத் தொடர்ந்து செய்வதே தன்னை உருவாக்கியவருக்கு செய்யும் அஞ்சலி என்னும் அர்ப்பணிப்பு உணர்வுடன், நலம் இல்லாதவர்களுக்கு கல்வி, நலிந்தவர்களுக்கு கல்வி” என்கிற அரிய சேவையை ஆற்றி வருகிறார் முனைவர் லதா ராஜேந்திரன்.

இந்த நிலையில், அவரது கல்விச் சேவையைப் பாராட்டும் விதமாக ‘டைம்ஸ் எஜுகேஷன் ஐகான்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த சிறப்புப் பள்ளி பிரிவில் மதிப்புமிக்க இந்த விருதைப் பெற்ற சாதனைக்காக முனைவர் லதா ராஜேந்திரன் அவர்களை மனதார வாழ்த்துகிறோம்.

You might also like