மலர் சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வருமானம்!

சக்சஸ் ஸ்டோரி: தொடர் – 5

கார்னேஷன் கொய்மலர் சாகுபடியை வெற்றிகரமாக செய்துவருகிறார் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல். எம்.எஸ்.சி. பட்டதாரி. கொடைக்கானல் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.

இங்கு அவரது தாத்தா காலத்திலிருந்து விவசாயம்தான் பாரம்பரியத் தொழில். மலைப் பூண்டு, கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு என மலையில் விளையும் காய்கறிகளைக் காலங்காலமாகப் பயிரிட்டு வந்தனர்.

நம்மிடம் பேசிய கதிர்வேல், “என் கல்லூரிப் படிப்புக்குப் பிறகு சென்னையில் இரண்டு ஆண்டுகள் இருந்தேன்.

பெங்களூருவில் கொய்மலர் விவசாயம் தொடர்புடைய தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அடுத்து சொந்த ஊருக்கு விவசாயம் செய்யத் திரும்பிவிட்டேன்.

2017 ஆம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கி பசுமைக்கூடாரம் எனப்படும் பாலி ஹவுஸ் போட்டு கொய் மலர் சாகுபடியைத் தொடங்கினோம்.

கார்னேஷன், ஜெர்பரா, ரோசஸ், அந்தூரியம், கிரிசாந்தமம் எனப் பலவகையான கொய் மலர்கள் உள்ளன.

எல்லாவற்றையும் அலசிப் பார்த்து, நாங்கள் கார்னேஷன் பயிரிடலாம் எனத் திட்டமிட்டோம்.

ஜெர்பரா மலர்கள்

தொடக்கத்தில் ஜெர்பரா பயிரிட்டோம். ஆனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. உடனே கார்னேஷன் மலர்களுக்கு மாறினோம்.

எங்களைப் போல 10-க்கும் அதிகமான விவசாயிகள் கொடைக்கானல் தாலூகாவில் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆயிரம் சதுர மீட்டரில் பசுமைக் கூடாரம் அமைத்து 20 ஆயிரம் கார்னேஷன் நாற்றுகளை நட்டோம்.

மேலும், விவசாயப் பரப்பை 4 ஆயிரம் சதுர மீட்டர் விரிவுபடுத்தலாம் எனத் திட்டமிட்டுவருகிறோம்.

18 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றோம். சொந்த பணத்தை ஒன்றரை லட்சம் ரூபாய் செலவழித்து நிலத்தைச் சமன் செய்தோம்.

மலைப் பகுதி என்பதால் விவசாய நிலங்கள் மேடு பள்ளமாக இருக்கும். மொத்தமாக எங்களுக்கு கார்னேஷன் பயிரிட 20 லட்சம் ரூபாய் செலவானது.

தோட்டக்கலைத்துறை மானியம்

தோட்டக்கலைத் துறை நிபுணர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்கி, கடன் மானியத்தை வழங்கினார்கள்.

கார்னேஷன் நாற்றுகளை ஆர்டர் செய்த 40 நாட்களில் நம்மிடம் கொடுத்து விடுவார்கள். மேட்டுப் பாத்திகள் அமைத்து நாற்றை நடவு செய்வோம்” என்று பொறுமையாக விளக்கினார்.

தரையிலிருந்து 30 செ.மீ. உயரத்தில் இந்த பாத்திகள் அமைக்கப்படுகின்றன. 15 செ.மீ. இடைவெளியில் ஒவ்வொரு நாற்றையும் நடுகிறார்கள். இரண்டு வரிசைகளுக்கு இடையில் 15 செ.மீ. இடைவெளி இருக்கும்.

5வது மாதத்தில் அறுவடை

நாற்றை நட்ட 5-வது மாதத்திலிருந்து அறுவடையைத் தொடங்கிவிடலாம்.

நட்ட பதினைந்து நாளில் நாலு கணுக்களை விட்டு நாற்றை உடைத்துவிடவேண்டும்.

பிறகு செடியில் அதிக கிளைகள் வெடித்து முளைக்கும்.

நாற்பது நாட்களுக்குப் பிறகு செயற்கை உரங்கள் தெளிக்கவேண்டும். ஒரு முறை நடப்படும் செடிகள் இரண்டு ஆண்டுகளுக்கு விளைச்சல் கொடுக்கும். பின்னர் அந்த செடிகளை அகற்றிவிட்டு புதிதாக நடவு செய்யவேண்டும்.

பூஞ்சானக்கொல்லி

மீண்டும் பேசும் கதிர்வேல், “எங்களுக்கு ஆண்டுக்கு கால் ஏக்கருக்கு ரூ. 20 லட்சம் வருமானம் வருகிறது. கார்நேசன் சாகுபடியைப் பொறுத்தவரை வாரத்துக்கு இரண்டு நாள் உரம் கொடுக்கவேண்டும்.

அதேபோல பூச்சிக்கொல்லி, பூஞ்சானக்கொல்லி மருந்துகளை தனித் தனியாக அடிக்கவேண்டும்.

கொய் மலர்களை அறுவடை செய்து 20 பூக்களாகக் கட்டி, பேக் செய்து பெங்களூரு சந்தைக்கு அனுப்பிவிடுகிறோம்.

இரு மாதங்கள் மட்டும் விலை குறைவாக இருக்கும். கார்னேஷன் மலர்கள் திருமண விழாக்கள், ஸ்டார் ஹோட்டல்களில் அலங்கார வேலைகளுக்குப் பயன்படுகிறது.

மொட்டாகவே பறிப்போம்

நாங்கள் ஸ்டான்டர்டு ரகத்தைப் பயிரிடுகிறோம். மஞ்சள், சிவப்பு, வெள்ளை, டார்க் பிங்க், லைட் பிங்க் போன்ற பலவகை வண்ணங்களில் மலர்கள் இருக்கின்றன. மலர்வதற்கு முன்பு மொட்டாகவே கட் செய்து அனுப்புகிறோம்.

பத்து நாட்கள் வைத்திருந்துகூட அவர்கள் விற்பனை செய்வார்கள். வாரத்தில் இரு நாட்கள் அறுவடை இருக்கும். மாதத்திற்கு பத்து நாட்கள் அறுவடை.

கார்னேஷன் மலர்களை அதிக வெப்பமான பகுதிகளில் பயிரிடமுடியாது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில்தான் சாகுபடி செய்யமுடியும்.

இதற்குக் குளிரான மிதமான பருவநிலை மிக அவசியம். தற்போதுதான் ஏற்காட்டில் பயிரிடும் முயற்சியில் ஒரு நண்பர் ஈடுபட்டுள்ளார்.

விவசாயிகளிடம் விழிப்புணர்வு

கோடைக்கானலில் பரவலாக கார்னேஷன் கொய்மலர் சாகுபடியைச் செய்யவேண்டும் என்பதற்காக விவசாய நண்பர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

கார்னேஷன் சாகுபடியில் பராமரிப்புதான் முக்கியம்.

கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் கால் ஏக்கருக்கு 22 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறமுடியும்” என்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

– எஸ். சங்கமி

#Carnation_AGRICULTURE #மலைப்பூண்டு #கேரட் #பீன்ஸ் #உருளைக்கிழங்கு #கார்னேஷன் #ஜெர்பரா #ரோசஸ் #அந்தூரியம்# கிரிசாந்தமம் #Carnation

You might also like