காக்கிச் சட்டைக்குள்ளும் இன்னல்கள் இருக்கும்!

நூல் அறிமுகம்:

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் ஆன உறவு சொல்லி விளங்காது, சொல்லில் அடங்காது! மகளுக்கும் தந்தைக்கும் ஆன உறவு அபரிமிதமான அன்பின் வெளிப்பாடு.

பருவம் அடைந்ததும், தக்க தருணம் பார்த்து தாரம் என்னும் நிலைக்குச் சென்றாலும், மகளுக்கு தன் தந்தையிடம் மட்டும் தன் உரிமையும் குறைவதில்லை, உறவும் குறைவதில்லை, அன்னையிடம் கேட்டுக் கிடைக்காதவை எல்லாம் தந்தையிடம் சொன்னாலே கிடைத்துவிடும்.

உண்மை தான். மகள் அம்மாவிடம் கேட்பாள், தர மறுத்தால் உடன் அப்பாவிடம் கேட்டுப் பெற்றுக் கொள்வாள்.

பெரும்பாலான அப்பாக்கள் தன் மகளை தன் தாயாகவே பார்க்கின்றனர். தாய்க்கு தர முடியாததை, மகளை, தாயாக நினைத்துத் தந்து விடுகின்றனர்.

மகளின் கிறுக்கல்கள் கூட தந்தைக்கு மிகப்பெரிய கவிதை.

நம் பெற்றோர்கள் நமக்கு கற்றுத் தந்த பாடம் நம் வாழ்வில் அழியாமல் நினைவில் எப்போதும் இருக்கும்.

கட்டுப்பாடான காவல்துறையில் கடைநிலை ஊழியராக பணி பொறுப்பேற்று அனைவரிடமும் எளிதாய் பேசி எண்ணம் போல் வாழ்க்கை, எல்லாம் நன்மைக்கே என்ற சொல்லுக்கிணங்க வாழ்ந்த காவலர் தனுஷ்கோடி குறித்த நூல் அவரது மகள் எழுதிய நூல் இது.

காக்கிச்சட்டை அணிந்த காவல்துறையில் உள்ளவர்களின் இன்னல்களை, விடுப்பே இல்லாத துன்பத்தை, தேர்த்திருவிழாவில் கூட குடும்பத்துடன் கலந்து கொள்ள இயலாமல் பாதுகாப்பிற்கு சென்றுவிடும் காவல்துறையின் ஓய்வற்ற பணியினை கண்முன்னே கொண்டு வந்து விடுகிறார். இந்நூல் படிக்கும் அனைவருக்கும் காவல்துறையின் மீதான மதிப்பு கூடிவிடும்.

கவிதையும் கட்டுரையும் கலந்த நூல் சிறிய நூல் என்றாலும் பெரிய கருத்துக்களைக் கொண்ட நூல். அப்பா மகள் பாசத்தை நேசத்தை உணர்த்திடும் ஒப்பற்ற நூல்.

இதில் ஒரு வரி கூட மிகை எழுதவில்லை. வாழ்வில் நடந்த உண்மைகளை அப்படியே எழுதி இருப்பதால் படிக்கும் வாசகர்களும் அப்படியே ஒன்றிவிடுகிறோம்.

நூல் படிக்கும் வாசகர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரவர் அப்பா பற்றிய மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றது இந்நூல்.

இந்நூல் முழுவதும் தந்தையுடன் கழிந்த நேரங்கள் கொஞ்சம், காரணம் காக்கிச்சட்டைப் பணி. நேரம் வாய்ப்பதே இல்லை, வாய்த்த நேரத்தை, பொன்னான நேரமாகக் கருதி பொற்காலமாக போற்றியதைக் குறிப்பிட்டுள்ளார்.

 தந்தையுடன் நடந்த நிகழ்வுகளை பசுமரத்து ஆணி போல மனதில் பதிந்து வைத்து இருந்த காரணத்தால், தொகுத்து நூலாக்கி விட்டார். அனைத்து மகளுமே அவரவர் அப்பாவைப் பற்றி ஒரு நூல் எழுதுங்கள் என்ற வேண்டுகோளும் வைத்துள்ளார் நூலின் ஆசிரியர் முனைவர் தனுஷ்கோடி லாவண்யஷோபனா.

“காவல்துறை பணி என்பது பொதுமக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் செயல்படும் பணி என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இப்பணியில் இருப்பவர்கள் தன் குடும்பத்திற்காக செலவிடும் நேரங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். காவல்துறை பணியில் இருக்கும் குடும்பத்தில் வீட்டிற்குள் தான் உலகம் என்று கற்றுக் கொடுத்தவள் அம்மா.

உலகமே வீடாகலாம் என்ன கற்றுக் கொடுத்தவர் காக்கிச் சட்டை அப்பா என்கிறார் நூலாசிரியர்.

அனைவரும் விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் தாங்கள் ஊர்களுக்குச் சென்றபோது காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட இயலாது. மக்களின் பாதுகாப்பிற்காக குடும்பத்தை விட்டு தனியே நிற்பவர்கள் தான் காக்கிச் சட்டைக்காரர்கள்.

அது போன்று காவலர்களின் வீட்டில் விடுமுறை என்பதெல்லாம் நாட்கணக்கில் இருக்காது. மணிக்கணக்கில் தான் இருக்கும்.

காவல்துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் விருப்பப்படி பணி செய்ய முடியாது. சட்டத்தின் விருப்பப்படியே பணி செய்ய வேண்டும்.

தன்னை தவறாக தூற்றும் ஆர்ப்பாட்டத்திற்கும் தூற்றியவர்களின் காவலுக்காக தடியுடன் வருவார்கள் காக்கிச் சட்டைக்காரர்கள். அங்கே பல நேரங்களில் பழி வந்தாலும் இவர்களது பணி தொடரவே செய்யும்.

தினசரி பிரச்சனைகளே அதிகம் சந்திப்பதால் இவர்களுக்கு முதலில் முதுமை எட்டிப் பார்ப்பது காக்கித் தொப்பிக்குள் இருக்கும் தலைமுடி தான்.

இவர்களுக்கு பிறந்த நாளாக இருந்தாலும் புத்தாடை அணிவது காக்கி சட்டையாகத்தான் இருக்கும்.

சொந்தங்களின் இறப்புக்கு கூட அவர்கள் செல்லாவிட்டாலும் செல்ல முடியாது காக்கிச் சட்டைக்காரர்கள்.

பந்தம் இல்லாத இறப்புக்கு அனுதினமும் செல்வார்கள் பாதுகாப்புக்கு. குறிப்பாக சமுதாய பாதுகாப்பிற்கு.

தான் அப்பாவாகிவிட்ட செய்தியை கேட்ட பின்பு தான் காக்கிச்சட்டைக்
காரருக்கு விடுமுறையே கிடைக்கும்.

அதுவும் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்ற கண்டிசனோடு. குழந்தைகளுக்கு பணிவிடை செய்ய பாக்கியம் இவர்களுக்குக் கிடையாதாம்.

ஒரு காக்கிச் சட்டைக்காரரின் மிகப்பெரிய சாதனை என்பது ஏதாவது ஒரு நல்ல நாளில் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஒரு நேரம் உணவு உண்பது தான்.

தனது குழந்தையின் பிறந்தநாளுக்கு கூட கேக் வெட்டும் நேரத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்து செல்பவரே காக்கிச் சட்டைக்காரர்கள்.

காக்கிச்சட்டையும், காக்கி சட்டை அப்பாவும் தன் பிள்ளைக்கு கற்றுத் தந்த மிகப்பெரிய பாடம் காத்திருப்பதும், ஏமாற்றங்களை தாங்கிக் கொள்வது மட்டுமே.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு பாடத்தை கொடுப்பார்கள.

தனக்கு கிடைக்காத சந்தோஷங்கள் தன் பிள்ளைகளுக்கு தர வேண்டும் என்று எண்ணுவதும் அவர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதில் இந்திய பெற்றோருக்கு இணை எந்த நாட்டிலும் இல்லை.

ஒரு காவலரின் மகளுக்கு கிடைத்த மிகப் பெரிய அனுபவமே இந்த நூல்.

ஆகப் பெரும் பணி காவல்துறை பணி. அதிலும் சில என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட்களும், பல் பிடுங்கிகளும் உள்ளனர் என்பது நிஜம். ஆனால் ஒட்டுமொத்த கடைநிலை காவலர்களின் நிலையை வெட்ட வெளிச்சமாகிறது” எனக் கூறியுள்ளார் இந்த நூலில். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

******

நூல்: காக்கிச் சட்டை அப்பா
நூலாசிரியர் : முனைவர் தனுஷ்கோடி லாவண்யஷோபனா
விலை : ரூபாய் 50/-
வெளியீடு: குமரன் பதிப்பகம்
சென்னை – 600017.
தொடர்புக்கு : 044 24353742

You might also like