‘உன்னைத் தேடி’ அஜித்துக்கு தந்த நட்சத்திர அந்தஸ்து!

இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித்குமார். சில நூறு கோடிகள் வசூல் என்ற சாதனையைத் தொடுகிறது அவர் படங்களுக்கான வியாபாரம்.

இந்த உயரத்தை எட்டுவதற்கு ஆரம்பகாலத்தில் அவருக்கு உதவிகரமாக இருந்த படங்களில் ஒன்று, லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கிய ‘உன்னைத் தேடி’.

உண்மையைச் சொன்னால், அஜித் நடித்தவற்றில் குழந்தைகள், பெண்கள், பெரியோர்களுடன் குடும்பமாக ஒன்றுசேர்ந்து பார்க்கத்தக்கது என்ற பெருமையைப் பெற்ற படங்களில் குறிப்பிடத்தக்கது அந்த படம்.

தேடிச் சென்ற தயாரிப்பாளர்கள்!

‘அமராவதி’ மற்றும் ‘பிரேம புஸ்தகம்’ வழியாக அறிமுகமான அஜித்துக்கு முதல் ஹிட்டாக அமைந்தது, வசந்த் இயக்கிய ‘ஆசை’.

1996-ல் வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை ஆகிய சுமார் வெற்றிகளைப் பெற, அகத்தியனின் ‘காதல் கோட்டை’ அவரைப் பட்டிதொட்டியெங்கும் தெரியச் செய்தது.

தொடர்ந்து நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு படங்களை 1997-ம் ஆண்டில் தந்தார்.

அதற்கடுத்த ஆண்டு காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உயிரோடு உயிராக படங்களில் நடித்தார்.

1999 தைப்பொங்கல் திருநாளில் ரமேஷ் கண்ணா இயக்கிய ‘தொடரும்’ வெளியானது.

அப்படத்துடன் அர்ஜுனின் ‘சூரிய பார்வை’, பார்த்திபனின் ‘ஹவுஸ்ஃபுல்’, ராம.நாராயணனின் ‘மாயா’, பி.வாசுவின் ‘பொண்ணு வீட்டுக்காரன்’, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த ‘மன்னவரு சின்னவரு’ மற்றும் ஆதவன் என்று மொத்தம் 7 படங்கள் வெளியாகின. தொடரும் திரைப்படம் சுமார் வெற்றியாக அமைந்தது.

மேற்சொன்ன படங்களில் மைனர் மாப்பிள்ளை, நேசம், ராசி, பகைவன் போன்றவை அஜித்தை பி, சி செண்டர்களுக்கு அழைத்துச் சென்றது. உல்லாசம், காதல் மன்னன் படங்கள் இளையோரிடம் வரவேற்பைப் பெற்றன.

அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், தொடரும் போன்றவை பெண்களைக் கூட்டமாகத் திரையரங்குகளில் திரளச் செய்தன. இந்த வரவேற்பை மனக்கண்ணின் கணித்தே அந்த வாய்ப்புகளை ஒப்புக்கொண்டவர் அஜித்.

அது மட்டுமல்லாமல் சத்யராஜ், கார்த்திக் போன்ற பெரிய நடிகர்களின் ரசிகர்களைச் சென்றடைய, அவர்களுடன் இணைந்து நடிப்பது ஒரு வாய்ப்பாக அமையும் என்று கருதியவர்.

இதனைப் பேட்டிகளிலும் குறிப்பிட்டிருக்கிறார் அஜித்குமார். அவரது ஆரம்பகாலப் படங்களில் கவுண்டமணி, செந்தில் காமெடி இடம்பெற்றிருப்பதையும் அந்த வரிசையில் சேர்க்கலாம்.

அவ்வாறு அஜித் பகுத்துப் பிரித்த பட்டியலில், குடும்பமாகத் திரையரங்குக்கு வந்து கொண்டாடத்தக்கதாக அமைந்தது ‘உன்னைத் தேடி’.

அந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு அறுவைச் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் இருந்தார். அதனால் பல தயாரிப்பாளர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர்.

சிலர் அவரைத் தேடி வந்து கொடுத்த அட்வான்ஸை வாங்கிச் சென்றனர்.

ஒரு திரைப்படத்தில் அவருக்குப் பதிலாக இன்னொரு நாயகன் நடிப்பதாகவும் விளம்பரங்கள் வந்தன. அது போன்ற நிகழ்வுகள் அஜித்தை ஆத்திரமடையச் செய்தன.

அந்த காலகட்டத்தில், அஜித் ஒப்புக்கொண்ட படமே ‘உன்னைத் தேடி’. சாக்லேட் பாய் இமேஜை விடுத்து ஆக்‌ஷன் ஹீரோ ஆகத் துடித்த அஜித்துக்கு அந்தக் கதை முழுமையாகப் பிடிக்கவில்லை.

அதை மீறி, அவர் அந்த படத்தில் நடித்தார். அந்தக் கதைக்குச் சொந்தக்காரரான சிங்கம்புலியின் இயக்கத்தில், சில ஆண்டுகள் கழித்து ‘ரெட்’ படத்தில் நடித்தார்.

மூத்த நடிகர்களின் இருப்பு!

‘உன்னைத் தேடி’ படத்தில் சிவகுமார், ஜெய்கணேஷ், ராஜிவ், மௌலி மற்றும் ஸ்ரீவித்யா, மனோரமா, சத்யப்ரியா போன்ற மூத்த கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கரண், சுவாதி, வையாபுரி, விவேக் என்று பெரிய நடிப்பு பட்டாளமே அதில் இருந்தது.

ஸ்வேதா குன்னூர் என்பதே நாயகியாக நடித்த மாளவிகாவின் அசல் பெயர். இந்த படத்தில் அவர் ஏற்ற ‘மாளவிகா’ எனும் பாத்திரப் பெயரையே, அவருக்கும் சூட்டிவிட்டார் இயக்குனர் சுந்தர்.சி.

இந்த படத்தின் முன்பாதி முழுவதும் நியூசிலாந்தில் எடுக்கப்பட்டிருக்கும். மாளவிகாவும் அஜித்தும் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிப்பதாக, இதில் ஒரு காட்சிக் கோர்வை உண்டு.

அதில் முழுக்க இளமை தாண்டவமாடும். அந்தக் காட்சிகள் அனைத்தும், அப்படியே ஷாரூக் கான், கஜோலின் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’வின் பிரதிபலிப்பாகத் தெரியும்.

பின்பாதி திரைக்கதையோ, அப்படியே ‘காதலுக்கு மரியாதை’யின் சென்டிமெண்ட் வெர்ஷன் ஆக இருக்கும். ஆனாலும், இந்த படம் சில ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக மாறியது.

குறிப்பாக, அஜித்துக்கு தனிப்பட்ட முறையில் சில ரசிகர்களையும் ரசிகைகளையும் பெற்றுத் தந்தன இதன் பாடல்கள்.

ஒரு வெற்றிப்படம் என்றபோதும், இயக்குனர் சுந்தர்.சி உடன் அஜித் மீண்டும் இணையவில்லை. அதற்குக் காரணம், அவர்கள் இருவருக்கே வெளிச்சம்.

வாலிக்கு முன்பே..!

அஜித்துக்கு நட்சத்திர அந்தஸ்து தந்த படம் என்று ‘வாலி’யைக் குறிப்பிடலாம். அதற்கு முன்னரே, அவரை வெற்றிகரமான நாயகனாகக் காட்டியது ‘உன்னைத் தேடி’.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு, எழிலின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ வந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது.

விஜய்யை மிகப்பெரிய நட்சத்திரமாக மாற்றியிருந்தது. அந்த வகையில், இருவருக்குமான போட்டியைத் தொடங்கிவைத்த படங்கள் என்றும் அவ்விரண்டையும் குறிப்பிடலாம்.

‘உன்னைத் தேடி’யில் மொத்தம் 6 பாடல்கள். அவற்றில் ‘நீதானா நீதானா’, ‘நாளை காலை நேரில் வருவாளா’, ‘போறாளே’, ‘மாளவிகா மாளவிகா’ என்று 4 பாடல்களைப் பாடியிருந்தார் ஹரிஹரன்.

அனைத்துக்கும் அஜித் வாயசைத்திருந்தார். அஜித்தின் அறிமுகக் காட்சியோடு இணைந்திருந்த ‘காற்றாக வருவாளா’ பாடலுக்கு நவீன் குரல் இரவல் தந்திருந்தார்.

இது போக ‘ஒயிலா ஒயிலா’ என்று மனோ கோரஸ் உடன் பாடும் பாட்டொன்றும் இதில் உண்டு.

இருக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு ஈர்ப்பைத் தரும் வகையில் தேவா இசையமைத்த பாடல்கள் இருந்தன. அது, படத்திற்கான விசிட்டிங் கார்டாகவும் இருந்தது.

யு.கே.செந்தில்குமாரின் ‘கலர்ஃபுல்’ ஒளிப்பதிவு, பி.சாய்சுரேஷின் கட்டுக்கோப்பான படத்தொகுப்பு என்று பலரது உழைப்பு ஒன்றுசேர்ந்து இப்படத்தை சிறப்பான ‘எண்டர்டெயினர்’ ஆக்கின.

‘உன்னைத் தேடி’யை அடுத்து வந்த வாலி, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், நீ வருவாய் என, முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகியன மிகப்பெரிய அடையாளத்தை அவருக்குத் தந்தன.

தான் நடித்த படங்களை அஜித் திரும்பப் பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதில் ‘உன்னைத் தேடி’க்கு இடமுண்டா என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால், அந்த படத்தில் அவரது தோற்றமும் நடிப்பும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

அதற்குப் பின் வெளியான ‘சிட்டிசன்’, ‘வில்லன்’, வரலாறு’, ‘பில்லா’, ‘மங்காத்தா’, ‘வீரம்’, ‘விஸ்வாசம், ‘நேர்கொண்ட பார்வை’, ‘துணிவு’ என்று ஒவ்வொரு படத்திலும் மிகப்பெரிய வித்தியாசத்தை வெளிப்படுத்தியிருப்பது தெரிய வரும்.

அந்த வகையில், அவரது பிலிமோகிராஃபி வரைபடத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்று ‘உன்னைத் தேடி’யை நிச்சயம் குறிப்பிடலாம்!

– உதய் பாடகலிங்கம்

#உன்னைத்_தேடி #அஜித் #அஜித்குமார் #சுந்தர்_சி #காதல்_கோட்டை #சிட்டிசன் #வில்லன் #வரலாறு #பில்லா #மங்காத்தா #வீரம் #விஸ்வாசம் #நேர்கொண்ட_பார்வை #துணிவு #unnai_thedi #ajith #ajith_kumar #sundar_c #kadhal_kottai #citizen #villan #varalaru #billa #mangatha #veeram #vishvasam #ner_konda_parvai #thunivu

You might also like