கடந்த ஆண்டு டிடி ரிட்டர்ன்ஸ் என்ற வெற்றிப்படம் தந்து ரசிகர்களைச் சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார் சந்தானம்.
ஆனால், அதன் தொடர்ச்சியாக வெளியான ‘கிக்’, ‘80ஸ் பில்டப்’ இரண்டுமே நம் பொறுமையை ரொம்பவே சோதிப்பதாக அமைந்தன.
கார்த்திக் யோகி இயக்கத்தில் தன் சகாக்கள் மாறன், சேஷு உடன் சந்தானம் நடித்துள்ள ‘வடக்குபட்டி ராமசாமி’ தற்போது வெளியாகியிருக்கிறது.
இயக்குனரின் முந்தைய படமான ‘டிக்கிலோனா’வில் கதைக்கரு அபாரமாக இருந்தபோதும் திரைக்கதை ‘சவசவ’ என்று அமைந்து நம்மைத் திக்குமுக்காட வைத்தது.
அதேநேரத்தில், அதில் நிழல்கள் ரவியின் பாத்திரம் தனித்துவமானதாக அமைந்திருந்தது.
மீண்டும் அந்த கூட்டணி ஒன்றாகக் களமிறங்கியதே ‘வடக்குபட்டி ராமசாமி’ மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்திருக்கிறதா?
தனியார் நிலத்தில் கோயில்!
வடக்குபட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர் பதின்ம வயதுச் சிறுவனான ராமசாமி. அவருக்குத் துணையாகத் தாய் மட்டுமே இருக்கிறார்.
இரவில் காட்டேரி ஊருக்குள் நடமாடுகிறது என்பது அவ்வூர் மக்களின் நம்பிக்கை.
ஒருநாள், நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் புகும் மர்ம உருவமொன்று ஆட்டைத் திருடிச் செல்கிறது. அதனைத் துரத்திச் செல்கின்றனர் ஊர் மக்கள் சிலர்.
அதேநேரத்தில், தங்க நகைகளைத் திருடிக் கொண்டுவரும் நபர் ஒருவர் ராமசாமியின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்.
அங்கிருக்கும் மண் பானைகளைப் பார்ப்பவர், அதிலொன்றை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். பானை உடையும் சத்தம் கேட்டு விழித்தெழும் ராமசாமி, அந்த நபரைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்.
பானையில் நகையை வைத்து ஓரிடத்தில் புதைக்கிறார் அந்த நபர். அந்த இடத்தில் ஒரு கல்லையும் வைக்கிறார். சில நிமிடங்கள் கழித்து, அங்கு வந்து சேர்கிறார் ராமசாமி.
அப்போது, மாட்டு வண்டியில் கோரமான உருவமொன்று தன்னை நோக்கி வருவதைக் காண்கிறார். கண்களை மூடிக் கொள்கிறார்.
திறந்து நோக்கும்போது, திருடன் வைத்த கல்லில் மோதி அந்த மாட்டுவண்டி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. அந்த மர்ம நபர் ஆற்றில் குதித்து மறைகிறார்.
அதன்பிறகு, தங்கநகைகள் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு கோயில் உருவாகிறது. அந்த நிலத்துக்குச் சொந்தக்காரரான ராமசாமி அதனை நிர்வகிக்கத் தொடங்குகிறார்.
உண்மையைச் சொன்னால், தாய் எவ்வளவோ சொல்லியும் கடவுள் மீது நம்பிக்கையற்றிருக்கும் ராமசாமி, அந்த நிகழ்வைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் தொடங்குகிறார். கோயில் பெயரில் ஒரு அறக்கட்டளையையும் தொடங்குகிறார்.
சில ஆண்டுகள் கழித்து, புதிதாக வரும் வட்டாட்சியர் (தமிழ்) ஒருவர் கோயில் சொத்துக்களை வைத்து நிறைய சம்பாதிக்கலாம்’ என்று ராமசாமி (சந்தானம்) மனதில் ஆசைத்தீயைப் பற்ற வைக்கிறார்.
ஆனால், யாருக்கு எவ்வளவு பங்கு என்று முடிவு செய்வதில் இருவருக்கும் தகராறு எழுகிறது. ’நானே தனியாக சம்பாதித்துக் கொள்கிறேன்’ என்று ராமசாமி நெஞ்சை நிமிர்த்த, ‘அது நடக்காமலிருக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்று வட்டாட்சியர் முஷ்டி முறுக்குகிறார்.
இருவரும் தங்களது பலத்தை வெளிப்படுத்துகின்றனர். அப்போது, வடக்குபட்டியில் செல்வாக்கோடு திகழும் இரண்டு மனிதர்களுக்கு இடையிலான ‘ஈகோ’ மோதலை அந்த வட்டாட்சியர் பயன்படுத்திக் கொள்கிறார். அதன் விளைவாக, அந்த கோயில் மூடி ‘சீல்’ வைக்கப்படுகிறது.
மீண்டும் கோயிலைத் திறக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார் ராமசாமி. அப்போது, ‘மெட்ராஸ் ஐ’ எனும் கண் நோய் குறித்து அவருக்குத் தெரிய வருகிறது.
அதனை ஊருக்குள் பரவ வைத்து, ‘கோயில் திறந்தால் மட்டுமே அது சரியாகும்’ என்று மக்களை நம்பவைக்கத் திட்டமிடுகிறார்.
அந்த முயற்சியில் வடக்குபட்டி ராமசாமி வெற்றி பெற்றாரா? அத்திட்டத்தை அறியும் வட்டாட்சியர் பதிலுக்கு என்ன செய்தார்?
முடிவில், என்ன நிகழ்ந்தது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
தனியார் நிலத்தில் கட்டப்பட்ட கோயில் என்ற விஷயத்தைக் கொண்டு படம் தொடங்கினாலும், மீதமுள்ள திரைக்கதையில் அது குறித்த விமர்சனங்கள் எதுவுமில்லை.
‘சாமி இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரியுற ராமசாமிதானே நீ’ என்ற வசனம் படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் உள்ளது.
பகுத்தறிவு மீது நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் அது எத்தகைய தாக்கத்தை எழுப்பும் என்று தெரிந்தும், அதனைப் படத்தில் புகுத்தியிருக்கிறார் இயக்குனர்.
‘கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், அதனை எதிர்ப்பவர்களை விட ஆன்மிகத்தை வைத்துப் பணம் சம்பாதிப்பவர்களும் பகுத்தறிவு பேசும் போர்வையில் பிரச்சனைகளை வளர்க்க முனைபவர்களுமே ஆபத்தானவர்கள்’ என்கிற தொனியில், கிளைமேக்ஸுக்கு முன்பாக ஒரு வசனம் உள்ளது.
அது போன்ற சில விஷயங்கள் இப்படம் பேசும் அரசியல் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல், வெறுமனே கிச்சுகிச்சு மூட்டி நம்மை வழியனுப்பி வைக்கிறது ‘வடக்குபட்டி ராமசாமி’.
சிரிப்புக்கு உத்தரவாதம்!
‘சிரிப்புக்கு உத்தரவாதமுண்டு எனும் வகையிலேயே தன் படங்கள் இருக்கும்’ என்ற உறுதியை ‘வடக்குபட்டி ராமசாமி’யில் மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார் சந்தானம். அவரது நடிப்பில் புதுமை இல்லை என்றபோதும், அந்த பாத்திரமாக மட்டுமே தென்படுவது மிகச்சிறப்பு.
மேகா ஆகாஷ் இதில் நாயகி. அந்தக்காலத்து பாரதி, காஞ்சனா போல ‘ஸ்டைலிங்’கில் மினுமினுக்கிறார். மற்றபடி, அவரது பாத்திரத்திற்குப் பெரிதாகக் கதையில் இடமில்லை.
மாறன், சேஷு இருவரும் வரும் காட்சிகள் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கின்றன. அதிலும், சேஷு பரதநாட்டியம் ஆடும் காட்சியில் தியேட்டரே இடம்வலமாக ஆடுகிறது.
இவர்கள் தவிர்த்து ஜான் விஜய், ரவிமரியா, பிரசாந்த், ஜாக்குலின், கூல் சுரேஷ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், செம்புலி ஜெகன் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
இவர்களில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஜெகன் பாத்திரங்கள் மட்டும் நேர்த்தியற்று உள்ளன.
ஒளிப்பதிவாளர் தீபக், கலை இயக்குனர் ராஜேஷ், ஆடை வடிவமைப்பாளர் தினேஷ் மனோகரன் கூட்டணியானது, இக்கதை 1974இல் நடைபெறுவதாகக் காட்டுவதற்குக் கடுமையாக உழைத்துள்ளது.
படத்தொகுப்பாளர் சிவா நந்தீஸ்வரன், எந்த இடத்திலும் கதை தடம்புரண்டுவிடாதவாறு கவனம் செலுத்தியிருக்கிறார்.
‘ஆப்ரக்கோ டாப்ராக்கோ’, ‘பரவுது’ என்று இரு பாடல்கள் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். அப்பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, நகைச்சுவையூட்டும் வகையிலேயே அமைந்துள்ளன.
திரையில் பழையன காட்டி நம்மை வேறொரு உலகுக்குக் கூட்டிச் செல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் யோகி.
அது, படம் பார்க்கும் கணத்தில் நம் மனதில் இருக்கும் கவலைகளைக் கரைத்துவிடுகிறது. மனம்விட்டுச் சிரிக்க வைக்கிறது.
நிச்சயமாக, அதுவே ‘வடக்குபட்டி ராமசாமி’யின் யுஎஸ்பி.
சில சங்கடங்கள்!
சென்னையைச் சேர்ந்தவர்களைப் பாதித்த ‘மெட்ராஸ் ஐ’ எனும் நோய், எவ்வாறு வடக்குபட்டியில் இருப்பவர்களைப் பாதிக்கிறது என்பதைச் சொல்லச் சில காட்சிகளைத் தந்திருக்கிறார் கார்த்திக் யோகி. அந்த காட்சிகளுக்கு தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது.
ஆனால், தன்பாலின ஈர்ப்பு குறித்த அசூயை உணர்வு கொண்டவர்களுக்கு அக்காட்சி அலர்ஜியை ஏற்படுத்தும். குழந்தைகளுடன் படம் பார்க்கச் செல்லும் பெற்றோர்கள் அக்காட்சியில் சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேபோல கூல் சுரேஷ் பேசும் வசவு வார்த்தைகளும், சென்னை வட்டாரத்தில் உதிர்க்கப்படும் மோசமானதொரு வார்த்தைக்கு ஈடான ஒரு ஒலியை மொட்டை ராஜேந்திரன் எழுப்புவதும் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியவை தான்.
அதுவும் ஒருவகை நகைச்சுவை என்றெண்ணுபவர்களுக்கு எந்தக் குறையும் தென்படாது.
இந்த படம் போலி ஆன்மிக நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அவற்றின் துணை கொண்டு மோசடியாகப் பணம் சம்பாதிப்பதைத் தவறு என்று விமர்சிக்கவில்லை.
கடவுள் நம்பிக்கையற்று இருப்பவர்கள் இந்த சமூகம் குறித்து எத்தகைய அக்கறையைக் கொண்டிருக்கின்றனர் என்பது பற்றிப் பேசவே இல்லை.
அது குறித்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு, ‘அதுக்குப் பதிலாதான் சிரிக்க வைக்கிறோமே’ என்பதாகவே இப்படம் அமைந்துள்ளது.
சமூக அக்கறை ஒரு திரைப்படத்தில் வெளிப்படுவது அவசியம் என்பவர்களுக்கு அதெல்லாமே சங்கடங்களைத் தரும் விஷயங்கள்.
அந்த சங்கடங்கள் பொருட்டல்ல என்பவர்களுக்கு ‘வடக்குபட்டி ராமசாமி’ நல்லதொரு பொழுதுபோக்காக அமையும்.
– உதய் பாடகலிங்கம்