– எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
1995-ம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஒரு இரவில்தான் க.சீ.சிவகுமாரை சந்தித்தேன். ஏப்ரல் மாதம் இந்தியா டுடே நடத்திய அறிமுக எழுத்தாளர் போட்டியில் அவன் முதல் பரிசும், நான் இரண்டாம் பரிசும் வென்றிருந்தோம்.
நான் எனக்கான மகிழ்ச்சியில் இருக்க அவனோ என்னைத் தேடி முகவரி அறிந்து போஸ்ட்கார்ட் அனுப்பி இருந்தான்.
அதன் கடைசி வரிகள் ‘என் கதையைவிடவும் உங்கள் கதைதான் நன்றாக இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். நானும் அவ்வாறே.. என் சகாவின் வெற்றி என் வெற்றியுமாகிறது’.
இந்த அபூர்வ மனசுதான் சிவகுமார்.
சந்தித்த நொடியே நெருங்கிவிடுவான். தேடித் தேடி எல்லா ஊர்களிலும் நண்பர்களைச் சேர்த்தான். நண்பர்களை சேர்க்கிற பேராவலையும், ஆர்வத்தையும் பணத்தின் மீது கொண்டிருந்தால் கோடீஸ்வரனாகி இருப்பான்.
ஆனால் சிவகுமார் விரும்பியதெல்லாம் மகிழ்வான பொழுதுகள் மட்டுமே.
மகிழ்ந்திருக்கும் பொழுதுகளின் தொகுப்புதான் வாழ்க்கை என்று நம்பினான்.
எப்போதும் சிரித்திருக்க விரும்பிய குழந்தை மனசுக்காரனுக்கு வாழ்க்கை வேதனைகளைக் கொடுத்து வேடிக்கை பார்த்தபடியே இருந்தது.
அவற்றையும் எள்ளி நகையாடியவன் சிவா. இருபத்தைந்து வருடங்களாக பார்க்கும் போதெல்லாம் சிரிக்க வைத்தவன் நினைக்கும்போதெல்லாம் கலங்கவைத்துவிட்டான்.
சிவகுமாரின் கதைகளில் ததும்பும் நகைச்சுவைக்கு இணையாக அவலமும் வேதனையும் வெளிப்படும். பெரும்பாலும் தன் வாழ்வும், சூழலும் சார்ந்தே அவன் எழுதினான்.
சிவாவின் மொழியழகு அற்புதமானது. தனித்தன்மை கொண்டது. நகைச்சுவையும், அருந்தமிழ்ச் சொல்லாடல்களும் அவனது எழுத்தின் இயல்பு.
தனது ப்ளாக்கிற்கு ‘நள்ளெண் யாமம்’ என்று பெயர் வைத்திருந்தான். இன்டர்நெட்டை ‘ககன ஊடகம்’ என்று குறிப்பிட்டான்.
மெய்சிலிர்த்தது என்பதை உடலில் குளிர்ப்புள்ளிகள் தோன்றின என்று எழுதுவான். அவனது பிரதேசத்தின் தனித்தன்மையையும் பாடுகளையும் சிறப்பாக எழுதிய அவன், தனது தகுதிக்கேற்ப கொண்டாடப் படவில்லை என்பது வேதனையளிப்பது.
குறுஞ்செய்திகளைக் கடத்தும் ‘கோபுரம்’ எனும் சிறுகதையில் இறந்து போன நண்பனை கடைசியாய் உயிருடன் பார்த்த தருணத்தை சிவா எழுதுகிறான்.
“மரணமன்றிப் பிறிது நினைப்பொன்றை பரிசாகத் தராத கூற்றுவனின் அறைவாசல் காத்திருப்பு அன்றைக்கு உணரப்படாமல் போயிற்று. தழுவக் குழைகிற மகிழ்வில் மரணத்தின் நினைவின் நிழலும் எம்மைத் தீண்டுவதில்லை”
இப்படிப் பேசியவன் ஒரு பொங்கல் சமயத்தில் புத்தகத் திருவிழாவின்போது கையசைத்து விடைபெற்றான். சென்றவன் ஓரிரு வாரத்தில் அதனை நிரந்தர விடைபெறலாக மாற்றி விட்டான்.
அலட்சியமாக பேசுகிற, சிரிக்கிற, வேதனைகளைக் கூட அலட்சியமாக கடக்கிற சிவா, மரணத்தையும் அலட்சியத்தால், அலட்சியமாகவே அடைந்தான்.
ஆனால் அலட்சியப்படுத்திவிட முடியாத படைப்புகளையும், நினைவுகளையும் விட்டுப் போயிருக்கிறான்.
இன்று அவன் விடை பெற்ற தினம்
நன்றி: எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் பேஸ்புக் பதிவு
#க_சீ_சிவகுமார் #writer_Bhaskar_Sakthi #பாஸ்கர்_சக்தி #சிவா #எழுத்தாளர்_பாஸ்கர்_சக்தி #k_s_sivakumar