நம் தமிழ்நாடு நீண்ட கடல் பரப்பளவை கொண்டுள்ளது. அதாவது 1076 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மீன்பிடித் தொழிலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும். பண்டைய தமிழர்கள் மீன்பிடித் தொழிலில் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அதற்குச் சான்று கடல் கடந்து பரவிய தமிழர்களும், அவர்களின் பண்பாடும் ஆகும்.
தமிழக மீனவர்களின் சமூக அமைப்பு வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (பட்டினவர், பரவர், வலையர், கரையார், முக்குவர், செம்படவர், கடையர், திமிலர்)
மீனவர்களுக்கும் கடலுக்கும் உறவு மிக நெருக்கமானது. அதனால்தான் மீனவர்களை கடலின் நண்பன் என்கிறோம்.
மீன் பிடித்தல் என்பது மீன்கள் வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல் போன்ற பகுதிகளில் இருந்து மீன்களைப் பிடித்து அதை மனிதப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது ஆகும்.
18-ம் நூற்றாண்டில் இருந்து தான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன்பிடித் தொழிலில் கவனம் செலுத்தப்பட்டது. ஆதி காலத்தில் மீன்பிடித் தொழிலுக்காக அக்காலத்து மனிதர்கள் ஈட்டியைப் பயன்படுத்தினர்.
சிறிய வகை மீன்களைப் பிடிப்பதற்காக தூண்டிலும், பெரிய வகை மீன்களைப் பிடிப்பதற்காக வலையும் பயன்படுத்தப்பட்டது.
இன்றைய நடைமுறையில் பெண்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு மீன் பிடித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தான் தமிழகத்தின் முதன்மை மீன்பிடித் துறைமுகம் ஆகும். அதைத் தொடர்ந்து சென்னை மீன்பிடித் துறைமுகம் பெரிய துறைமுகமாக இருந்து வருகிறது.
இவற்றைத் தவிர பழையாறை, வாலி நோக்கம், குளச்சல், நாகப்பட்டினம் ஆகியவை சிறு மீன்பிடித் துறைமுகங்களும் தமிழகத்தில் உள்ளன.
ராமேஸ்வரம் துறைமுகம் மீன்பிடித்தலுக்கும், கடல்சார் தொழிலுக்கும் பெயர் பெற்றது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் பதப்படுத்தப்பட்டு நாட்டின் பல்வேறு இடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதெல்லாம் தமிழக மீனவர்களின் பெருமைகளாக ஒருபுறம் இருந்தாலும், மீனவ மக்கள் படும் துயரங்கள் நம்மையும் துயரக் கடலில் ஆழ்த்துகின்றன.
இலங்கை ராணுவப் படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்கள் இன்று வரை நடைபெற்று வருகின்றன.
இதற்குக் காரணம் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே உள்ள கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம்.
கச்சத்தீவு என்பது யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவாகும். இந்திய தீபகற்பத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள இந்தத் தீவு 1974 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனால், இந்திய அரசு ஒப்ப்புக் கொடுத்ததால் கச்சத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது.
இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வரை வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று மட்டும் அத்தீவில் உள்ளது.
1974 மற்றும் 1976-ம் ஆண்டு காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி இந்திய அரசுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்புதல் மூலம் கொடுத்தார்.
இந்த ஒப்பந்தங்களில் ஒப்பந்த தேதியில் இருந்து பத்து வருடங்களுக்கு இந்திய மீனவர்கள் தீவில் மீன் பிடிக்கவும், வலைகளைக் காய வைக்கவும், தீவுக்குச் சென்று வருவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டது.
ஆனாலும் 10 வருடங்களின் பின் இந்த அனுமதி இல்லாத நிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டி வருகிறது
இந்த ஒப்பந்தத்தத்தால் தமிழக மீனவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இன்று வரை தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். சுட்டுக் கொல்லப்படுகின்றனர். உடைமைகளும் படகுகளும் சேதப்படுத்தப்படுகின்றன. அவர்கள் பிடிக்கும் மீன்கள் கடலில் கொட்டப்படுகின்றன. அவர்களது அத்தனை நாள் உழைப்பு வீணடிக்கப்படுகிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவது தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மை.
அதனால் தான் கச்சத்தீவை மீட்டு, இந்தியாவின் பகுதியாக மீண்டும் ஒன்றிணைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதற்காகப் பல்வேறு கட்சித் தலைவர்களும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். பல அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று வரை, கச்சத்தீவை மீட்பது பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், இன்று வரை இந்தப் பிரச்சனைக்கானத் தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.
– மூ. நிவேதா, மாணவி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி.