பெரியோர் என்றென்றும் பெரியோரே!

தந்தையுடனான அனுபவங்களைப் பகிர்ந்த சப்தரிஷி லா.ச.ரா!

நூல் அறிமுகம்:

லா.ச.ராமாமிருதம் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கருதப்பட்டவர்.

அவரது மகன் சப்தரிஷி லா.ச.ரா. தனது தந்தையைப் பற்றிய எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த ‘அப்பா.. அன்புள்ள அப்பா’ நூல்.

தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டவைகளைப் படிப்போர், மனம் கவரும் வகையில் அருமையான எழுத்து நடையில் சப்தரிஷி அவர்கள் அளித்திருக்கும் விதம் மிகவும் சிறப்பு.

அப்பா மீது பாசமும் விமர்சனமும் உள்ள பிள்ளைகள் வாழ்வியல் சம்பவங்களை இத்தனை அழகாக எழுத நினைத்தாலும் இந்த அளவுக்கு எழுத்தில் தர இயலுமா என கண்டிப்பாக ஐயம் எழும் வகையில் சப்தரிஷி அவர்கள் மூத்த எழுத்தாளரான தனது தந்தையுடனான வாழ்க்கை அனுபவங்களை மிகவும் அருமையாக தந்திருக்கும் படைப்பே இந்தப் புத்தகம்.

திருமதி லாசரா அவர்கள் தனது கணவரின் நூற்றாண்டு விழாவை ஒட்டிய நிகழ்வில் பேச்சு மிகவும் சிறப்பானது..

கதை எழுதும்போது நடுவில் தடை பட்டாலோ எழுதி நாட்களாகி விட்டாலோ எங்கே விட்டாரோ அங்கேயே துல்லியமாய் சர்வ சாதாரணமாய் ஆரம்பிப்பாராம்.

என்ன ஒரு அறிவாற்றல்.. வாசிக்கையிலேயே எழுத்தாளர் லா.ச.ராவை நினைத்து வியக்கத் தோன்றுகிறது.

முன்னுரை எழுதியிருக்கும் சாருநிவேதிதா குறிப்பிடுவது போல, இப்போதைய இளம் தலைமுறையினர் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு முன் இருந்த வாழ்வியல் மற்றும் இலக்கிய மதிப்பீடுகளைப் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும் என்பது மிகவும் உண்மை.

படைப்பாளர் வாழும்பொழுதே சரியான கௌரவப்படுத்துதல் என்பது அபூர்வமானது. அந்த வகையில் லா.ச.ரா விற்கு சாகித்ய அகாதெமி மிகவும் தாமதமாகவே விருது வழங்கியது.

அந்த விருதை பற்றிய கட்டுரையில் சப்தரிஷி எழுதும் அனுபவங்கள் மிகவும் நகைச்சுவை. தனக்கு விருது கிடைத்தது பற்றிய ஏற்புரையில் அவரது தந்தை இவ்வாறு கூறினாராம்.

“மெட்ராஸ்ல நிறைய பேர் ராமாமிருதத்துக்கு இந்த விருது லேட்டாய் கிடைச்சிருக்கு என்றார்கள்.. ‘லேட்’ ராமாமிருதத்துக்கு கிடைக்காமல் ராமாமிருதத்துக்கு லேட்டாய் கிடைத்ததற்கு நன்றி சொல்கிறேன்” என்றாராம்.

அப்பாவும் சினிமாவும் என்ற அத்தியாயத்தில் சினிமா குறித்த லா.ச.ராவின் அனுபவங்களை சப்தரிஷி விளக்கி இருக்கிறார்.

பென் கிங்ஸ்லி நடித்த ‘காந்தி’ படத்தை குறித்த லா.ச.ராவின் நுணுக்கமான அவதானிப்புகள் மிகவும் சிறப்பு. லா‌.ச.ரா ஆரம்பத்தில் வாகினி ஸ்டுடியோவில் டைப்பிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார்.

டென்ட் கொட்டாய் எனும் டூரிங் டாக்கீஸ் மணலை குவித்து அமர்ந்து எம்ஜிஆரின் ‘கலையரசி’ படம் பார்க்க மகன்கள் லா.ச.ராவை அழைத்துச் செல்லும் அனுபவங்களை விளக்கும் சப்தரிஷியின் எழுத்து நடை அபாரம்.

லா.ச.ராவின் தம்பி 83 வயதில் இறந்து போனதை பிள்ளைகள் அவரிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள். அவரும் எப்போதும் போல இயல்பாகவே இருக்கிறார். ஒரு விழாவில் ஜெயகாந்தனிடம் சப்தரிஷி அப்பா வந்திருக்கும் தகவலை சொல்லும் பொழுது நான் வந்து பார்க்கிறேன் என்கிறார்.

இயல்பாகவே சித்தப்பா எப்படி இருக்கிறார் என்று ஜெயகாந்தன் கேட்கும் பொழுது, சித்தப்பா இறந்து இரண்டு வருடமாகிவிட்டது நாங்கள் அப்பாவிற்கு சொல்லாமல் இருக்கிறோம் என்கிறார்.

அதற்கு ஜெயகாந்தன் அவருக்கு எல்லாம் தெரியும். தெரிந்தது போல் காட்டிக் கொண்டால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக அவரும் அவ்வாறே இருக்கிறார் என்கிறார்.

ஜெயகாந்தன் ஞானபீட விருது பெற்றதை வாழ்த்தும் லா.ச.ராவிடம் பதிலுக்கு அடக்கத்துடன் ஜே கே, “ஐயாவிற்கு கிடைத்திருக்க வேண்டியது எனக்கு கிடைத்து விட்டது” என்று பணிவாகக் கூறுகிறார்.

“கிடைத்தது உனக்கா, எனக்கா பேச்சு இல்லை. தமிழுக்கு 32 வருஷம் கிடைக்கல என்கிறவா வாயை அடைச்சாச்சு. அதுதான் இங்கு முக்கியம்” என்று பதிலுரைத்தார்.

‘பெரியோர் என்றென்றும் பெரியோரே’.

இந்தப் புத்தகத்தில் தனது தந்தையைப் பற்றி இயல்பான தின வாழ்க்கை நடவடிக்கைகளிலிருந்து, அவரது பழக்கவழக்கங்கள் அவரை சந்திக்க வருபவர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் என்று சப்தரிஷி விவரிப்பது அப்பா பையன் உறவை நாமும் அருகில் இருந்து லைவ்வாக காணச் செய்கிறது.

அப்பாவின் சினேகிதர்கள், அப்பாவின் காப்பி கட்டுரைகளில் நாம் காண்பது மிகவும் அரிய தகவல்கள் ‌.

தந்தையுடன் சில விஷயங்களில் முரண்பட்டாலும் பின்பு தீர்க்கமாக அவற்றின் நல்லவைகளை தான் உணர்ந்ததையும் சப்தரிஷி நேர்மையுடன் பதிவு செய்து உள்ளார்.

சின்ன சின்ன விஷயங்களில் கூட மிகவும் சிரத்தையுடன் இருக்கும் தந்தையைப் பற்றி மகன் எழுதி இருப்பவை ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய புதிய
தகவல்களாகவே இருக்கிறது.

மகன் தந்தைக்காற்றும் உதவி என்ற குறளுக்கேற்ப மிகவும் அருமையான அஞ்சலியை இந்நூலின் வாயிலாக செலுத்தியுள்ளார் அவரது மகன் சப்தரிஷி.

92 வருடங்கள் வாழ்ந்து கடந்த 2007-ல் மறைந்த லா.ச.ரா வின் இறுதி காலங்கள் அவர் குறித்த பதிவுகள் அருமையாக உள்ளது.

இறுதியாக, ‘என் அப்பா எனக்கு மகனாகவோ பேரனாகவோ அல்ல.. அப்பாவாகவே எனக்கு வேண்டும் ‘என சப்தரிஷி எழுதியதை வாசிக்கையில் அவருடன் சேர்ந்து நாமும் நெகிழ்கிறோம்.

***

நூல்: ‘அப்பா… அன்புள்ள அப்பா ‘
ஆசிரியர்: சப்தரிஷி லா.ச.ரா.
பக்கங்கள்: 205
விலை: ₹240
வெளியீடு: ஸீரோ டிகிரி பதிப்பகம்.

#appa_anbulla_appa_book_review #appa_anbulla_appa_book #எழுத்தாளர்_லா_ச_ரா #லா_ச_ராமாமிருதம் #சப்தரிஷி_லா_ச_ரா. #அப்பா_அன்புள்ள_அப்பா_நூல் #லா_ச_ரா_சப்தரிஷி

You might also like