இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந்தியாவிற்கு பெருமைச் சேர்க்கும் விதமாக பல்வேறு இந்திய விண்வெளிப் பயணத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது சந்திரனை ஆய்வு செய்யும் திட்டம்.
இதுவரை மூன்று விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியுள்ளது இஸ்ரோ. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
சந்திரயான் 1
சந்திரயான் 1 விண்கலம் 2008 அக்டோபர் 22-ல் நிலாவில் செலுத்தப்பட்டது. இதன் கடைசித் தொடர்பு 2009 ஆகஸ்ட் 28 முடிவுக்கு வந்தது.
இந்த விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலாப் பயணக்கலம் ஆகும்.
இப்பணித் திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். இதன் திட்ட மதிப்பீட்டுத் தொகை 386 கோடி ரூபாய் ஆகும்.
நிலா வட்டப்பாதையில் சுற்றிவரும் விண்கலத்தை உருவாக்குதல், வேதித் தனிமங்களுக்கான (மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான், கால்சியம், இரும்பு, யுரேனியம், தோரியம்) நிலப்படங்களை உருவாக்குவது தொடர்பான பல்வேறு நோக்கங்களுக்காக விண்ணில் சந்திரயான் 1 விண்கலமானது ஏவப்பட்டது.
சந்திரயான் 2
சந்திரயான் 2 விண்கலம், 2019, ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. செப்டம்பர் 6-ம் தேதி சந்திரயான் 2 நிலாவின் தென்முனை பகுதியில் தரையிறங்கியது.
இதன் முதன்மைக் குறிக்கோள் நிலா மேற்பரப்பின் உட்கூற்று வேறுபாடுகளை ஆய்வுச்செய்து படம் வரைதலும், நிலாவின் தண்ணீர் செறிவாக அமையும் இடங்களைக் கண்டறிதலும் ஆகும்.
இந்த திட்டத்தின் முனைவு இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த முத்தையா வனிதா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் செலவு ஒதுக்கீடு 9.78 பில்லியன் (ரூ.978 கோடி) ஆகும். இதில் 6 பில்லியன் விண்வெளி விண்கலனுக்கும், 3.75 பில்லியன் செயற்கைக்கோள் செலவுக்கும் ஒதுக்கப்பட்டது.
சந்திரயான் 3
சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த விண்கலம் 2023, ஜுலை 14-ம் தேதி அன்று விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 23-ம் தேதி நிலாவின் தென்முனையில் மான்சினசு, சிம்பேலியசு குழிகளுக்கிடையில் தரையிறங்கியது.
இதன் மூலம் நிலவின் தென்முனையில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இந்தப் பணியானது 2019-ல் சந்திராயன் 2 இல் ஏவப்பட்டதைப் போலவே விக்ரம் என்ற சந்திர லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற சந்திர ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த சந்திரயான் 3 விண்கலமானது நிலாவின் உட்கூற்றை நன்குப் புரிந்துக் கொள்ளுதலையும், நடைமுறைக்குப் பயன்படுத்துதலையும், மற்றும் நிலாத்தரையில் கிடைக்கும் வேதி இயல் தனிமங்களின் மீது களத்திலேயே அறிவியல் செயல்முறைகளை மேற்கொண்டு அவற்றின் நோக்கீடுகளைப் பதிவு செய்தலையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த விண்கலமானது ஆந்திரம் மாநிலத்தில் சென்னைக்கு 80 கி.மீ வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
இந்த விண்கலத்தின் மதிப்பு சுமார் 615 கோடி அல்லது 90 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.
இந்த சந்திரயான் 3 விண்கலத் திட்டத்திற்கும் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
சந்திரயான்-3 திட்ட இயக்குநராக பி.வீரமுத்துவேல், துணைத் திட்ட இயக்குநராக கல்பனாவும் பணியற்றினர்.
இந்த விண்கலமானது நிலாவின் தென்முனையில் முதல் தடவையாக கந்தகம் இருப்பதைக் கண்டுப்பிடித்துள்ளது.
சந்திரயான் 3 நிலநடுக்க அளவீடுகளை ஆகஸ்ட் 25 ஆம் நாளன்று வெளியிட்டது. சந்திரயான் 3 வெற்றிக்காக நரேந்திர மோடி நேரடியாகச் சென்று இஸ்ரோ அறிவியலாளர்கள் குழுவைப் பாராட்டினார்.
அதோடு இந்த விண்கலம் நிலாவின் தரையைத் தொட்ட இடத்துக்குச் சிவசக்திப் புள்ளி எனப் பெயரிட்டார். சந்திரயான் 3 ஆகஸ்ட் 23-ம் நாளன்று நிலாவின் தரையைத் தொட்டதற்காக அந்த நாளை தேசிய விண்வெளி நாளாகவும் அறிவித்தார்.
சிறப்பாக அதன் பணிகளைச் செய்த சந்திரயான்3, சந்திரனில் சூரியன் மறையத் தொடங்கியதால் லேண்டரும் ரோவரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டது.
ஆனால் நிலவில் உறைநிலை அதிகமாக இருப்பதால் லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சி அப்படியே இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும் நிலவின் தென் துருவத்தில் கால் வைத்த முதல் நாடு இந்தியா என்ற பெருமையை சந்திரயான் -3 பெற்றுத்தந்துள்ளது.
– மூ. நிவேதா, எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.