சோழர்களின் பெருமையாக விளங்கும் ராஜராஜ சோழனின் சமாதி யாரும் கவனிப்பாரற்றுக் கிடப்பது பற்றி கவலையுடன் எழுதியிருக்கிறார் கவிஞர் கோ. வசந்தகுமாரன். அந்தப் பதிவு இங்கே..
எனது நண்பரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழச்சியில் கலந்துகொண்டுவிட்டு சீருந்தில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கித் திரும்பும் வழியில் உடையாளூர் என்ற செழிப்பான கிராமம் குறுக்கிட்டது.
சட்டென ஒரு பொறி தட்டியது. ராஜ ராஜ சோழன் சமாதி இந்த ஊரில் இருப்பதாக எப்போதோ படித்த ஞாபகம்.
ஓட்டுநர் பின்னையூர் செந்தில் தனக்கு அந்தத் திருத்தலம் தெரியுமென்று அழைத்துப்போனார்.
ஒரு வயற்காட்டில் சிறு குடிசை போன்ற அமைப்பில் தஞ்சை பெரியகோயிலைக் கட்டி உலகோரை வியக்கவைத்துக் கொண்டிருக்கும் ராஜராஜ சோழனின் சமாதி இருந்தது.
அந்த மண்ணில் கால் வைத்ததுமே தன்னிச்சையாக உடல் சிலிர்த்தது.
முடியாட்சியைக் குடியாட்சியாக நடத்திய ஒரு மாமன்னனின் சமாதி கவனிப்பாரற்று ஒரு குக்கிராமத்தின் வயற்காட்டில் ஒரு குடிலில் இருப்பதைக் கண்ணுற்றபோது இந்த தமிழ்ச் சமூகத்தின்மீது சட்டெனக் கோபம் வந்தது.
ஒரு பெரியவர் ஆரத்தி எடுத்து சூடமேற்றி திருநீரளித்து என்னையும் என்னோடிருந்த நண்பர்களையும் ஆராதித்தார்.
கலைப் பொக்கிசமாக நம் தமிழகத்தை மாற்றியமைத்த நம் மன்னர்களைவிட இந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த அரசியல்வாதிகள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் என்று நினைக்க நினைக்க மனம் ஆற்றாமையால் தவித்ததைத் தவிர்க்கமுடியவில்லை.
யாரைப் போற்றுவது/யாரைத் தூற்றுவது என்ற தராதரமறியாத நம்மவர்களை நினைத்து வெட்கப்பட்டவாறே தஞ்சை திரும்பிய என்னை கம்பீரமாக நிமிர்ந்து நின்று வரவேற்றது தஞ்சைப் பெரிய கோயில்.
வெண் கொற்றக் குடைக்கும், காளானுக்கும் வித்தியாசம் தெரியாத தமிழ்த் தலைமுறையை ராஜ ராஜனின் ஆன்மா மன்னிக்கட்டும்.