‘மலைக்கோட்டை வாலிபன்’ – பிரமிப்பை அதிகப்படுத்துகிறதா?

ஆயிரத்தில் ஒருவன், மலைக்கள்ளன் போன்றதொரு அனுபவத்தைத் தரும் படங்களை இப்போது எடுத்தால் எப்படியிருக்கும்?

தற்போது திரையில் நாயகர்களுக்கு தரப்படும் ஹீரோயிச பில்டப்பும் கனகச்சிதமான காட்சியாக்கமும் அதில் கலந்தால் எப்படியிருக்கும்?

கடினமான களங்கள், கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகளைத் தவிர்த்து ரொம்பவே எளிமையானதொரு வடிவத்துக்குள் மொத்தப்படத்தையும் அடக்கினால் எப்படியிருக்கும்?

‘மலைக்கோட்டை வாலிபன்’ ஸ்கிரிப்படை, அப்படித் தன் மனதுக்குள் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெலிசேரி ஓடவிட்டுப் பார்த்தாரா என்று தெரியவில்லை. ஆனால், திரையில் அப்படியொரு அனுபவம்தான் நமக்குக் கிட்டுகிறது.

சரி, அதனால் நம் மனதில் குதூகலமும் கொண்டாட்டமும் விளைகிறதா?

எம்ஜிஆர் படக் கதை!

அம்பத்தூர் எனும் பகுதியைச் சேர்ந்த மலைக்கோட்டையைச் சார்ந்த ஒரு வாலிபன் (மோகன்லால்). அந்த ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்பது அவரது பெயரும் கூட.

ஆதரவு யாருமில்லாத அவரை அய்யனார் (ஹரீஷ் பேரடி) என்பவர் வளர்த்து ஆளாக்குகிறார். அந்த அய்யனாருக்கு ஒரு மகன். அவரது பெயர் சின்னப்பையன் (மனோஜ் மோசஸ்).

அய்யனார், சின்னப்பையன் உடன் ஒவ்வொரு ஊராகச் சென்று அங்கிருக்கும் ஜாம்பவனோடு மோதி வெற்றி காண்பதே மலைக்கோட்டை வாலிபனின் வழக்கம்.

அப்படி வெற்றி கண்டு திரும்பும்போது, ஓரிடத்தில் ரங்கபட்டினம் ரங்கராணியைக் (சோனாலி பெனோத்கர்) காண்கிறார்.

ரங்கராணி ஒரு நடனப் பெண்மணி. மேடையில் நடனமாடும் அவரிடம் சமதகன் (டேனிஷ் சேத்) என்பவர் அத்துமீறுகிறார்.

அவரை மலைக்கோட்டை வாலிபன் தடுக்க, இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதனால், காயத்தோடு சேர்ந்து அவமானத்தையும் பெறுகிறார் சமதகன்.

அதனை ஏற்க முடியாமல், மாங்கோட்டில் இருக்கும் மல்லனை வெற்றி கொண்டால் கழுதை மீது ஊர்வலம் செல்கிறேன் என்று சவால் விடுகிறார் சமதகன். மலைக்கோட்டை வாலிபனோ, அதற்குச் சரி என்று சொல்கிறார்.

மாங்கோட்டில் நடக்கும் யுத்தத்தில் மல்லனை வெல்கிறார் மலைக்கோட்டை வாலிபன். அதையடுத்து, பாதி தலைமுடி, மீசையை மழித்து அவமானத்திற்கு உள்ளாகிறார் சமதகன். அதன் தொடர்ச்சியாக, மலைக்கோட்டை வாலிபன் வாழ்வைச் சிதைக்காமல் விடமாட்டேன் என்று சபதமிடுகிறார்.

இந்த நிலையில், மாங்கோட்டில் வசிக்கும் சாமந்தி (கதா நந்தி) என்ற பெண் சின்னப்பையன் மீது காதல் கொள்கிறார். அய்யனார் அதனை எதிர்த்தாலும், மலைக்கோட்டை வாலிபன் ‘அது இயல்புதானே’ என்கிறார்.

அதனால், வேறு வழியில்லாமல் அப்பெண்ணையும் தங்களோடு ஊர் ஊராக அழைத்துச் செல்கிறார் அய்யனார்.

அம்பத்தூர் மலைக்கோட்டையில் ஆட்சி புரிந்துவரும் போர்த்துக்கீசிய ராஜா மற்றும் ராணியின் அக்கிரமத்தால் அங்குள்ளவர்கள் அடிமைகளாக வாழ்கின்றனர்.

அதுவே, மலைக்கோட்டை வாலிபன் பிறந்த ஊர். அதனை அடிமைத்தளையில் இருந்து மீட்டெடுப்பதற்காக, அந்த ராஜாவோடு நேருக்கு நேர் மோதத் தயாராகிறார் மலைக்கோட்டை வாலிபன்.

அந்த சம்பவமே அய்யனார், சின்னப்பையன் மீது அவர் வைத்திருக்கும் பற்றுதலை அறுத்தெறிகிறது. கூடவே, சமதகனின் பகையினால் தீராத பழியை ஏற்கவும் காரணமாகிறது.

அப்படி என்ன நிகழ்ந்தது? அதன்பிறகு, மலைக்கோட்டை வாலிபன் என்னவானார் என்று சொல்கிறது மீதிப்படம்.

‘ஒரு ஊர்ல ஒரு வீரன் இருந்தான்’ என்று சிறு வயதில் நிறைய கதைகள் கேட்டிருப்போம்; படித்திருப்போம்; பார்த்திருப்போம். அவ்வளவு ஏன், எம்ஜிஆர் நடித்த அரச படங்கள் பலவற்றைக் கண்டு ரசித்திருப்போம்.

அவற்றின் மொத்த வடிவமாக, அவற்றை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் மீண்டுமொரு முறை பார்க்கும் உற்சாகத்தை ஊட்டுகிறது ‘மலைக்கோட்டை வாலிபன்’. ஆனால், இதில் கதை என்ற வஸ்து மருந்துக்குக் கூட இல்லை என்பதுதான் பெருஞ்சோகம்.

நாயகன் ‘எண்ட்ரி’!

முரசறைந்து ஒரு வீரனின் வெற்றிப்பட்டியலை வாசித்து, அதன் முடிவில் ‘இந்த ஊரில் இருக்கும் ஒரு மாவீரனை அவர் ஜெயித்து சாய்க்கப் போகிறார்’ என்று சொல்வது பழங்கதையா, புதியதொன்றா? அப்படித்தான் இதில் நாயகன் மோகன்லாலின் ’எண்ட்ரி’ நிகழ்கிறது.

ஆனால், அதன் காட்சியாக்கம் பழைய படங்களில் இருப்பது போன்று இல்லை அந்த அனுபவம் தான் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தைப் பார்க்கச் செல்வதற்கான யுஎஸ்பி.

அந்த வகையில், காட்சியாக்கத்தில் வார்த்தைகளுக்குள் அடங்காத மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மது நீலகண்டன்.

வைட் ஷாட்கள், எக்ஸ்ட்ரீம் வைட் ஷாட்கள் என்றில்லாமல் சில நேரங்களில் குளோஸ் அப்களிலும் கூட நம்மை வசீகரிக்கிறது அவரது ஒளிப்பதிவு. திரைக்கதை ‘சொய்ங்க்’ என்று தளர்ந்திடும்போதெல்லாம் நம்மைத் தூங்கவிடாமல் தடுப்பதும் அதுவே.

பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசை இன்னொருவிதமான அற்புதத்தைக் கொட்டுகிறது.

குறிப்பிட்ட இடங்களில் மிகச்சில கருவிகளைப் பயன்படுத்தி, நம் மனதுக்குள் காட்சியாக்கம் தரும் பிரமாண்டத்தைப் பன்மடங்காக உருமாற்றியிருக்கிறார் அவர்.

‘ஏழிமலை கோட்டையிலே’, ‘ராக்கு’, ‘சப்னாமி’ பாடல்கள் குதூகலத்தை அருவியாகக் கொட்டுகிறது என்றால், ‘புன்னார காட்டிலே’, ’மடதார மிழியோரம்’ பாடல்கள் மெலடி மெட்டுகளாக வசீகரிக்கின்றன.

ஆனால், இரண்டாம் பாதியில் அவர் தந்திருக்கும் பின்னணி இசை ‘இது ஒரு ஸ்ஃபூப் படமோ’ என்று எண்ண வைக்கிறது.

முன்பாதியில் படத்தொகுப்பாளர் தீபு ஜோசப் காட்டியிருக்கும் கைவண்ணம் நம்மை அசத்துகிறது; மாறாக, பின்பாதியில் அவரது உழைப்பு நம்மை அயர்ச்சியில் ஆழ்த்துகிறது.

கோகுல் தாஸின் கலை வடிவமைப்பு கிட்டத்தட்ட ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் தோட்டா தரணி வெளிக்காட்டிய உழைப்பின் இன்னொரு பரிமாணமாகத் தோற்றம் தருகிறது.

ஆடை வடிவமைப்பு செய்த சுஜித் சுதாகரன், ரதீஷ் சமரவட்டம் இணையின் உழைப்பும் படம் முழுக்க வண்ணமயமாக இருப்பதற்கு ஒரு காரணம்.

இந்த படத்தின் ‘டிஐ’ பணி உண்மையிலேயே தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டத்தை நினைத்து நினைத்துப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

அதற்கேற்ப, ஒவ்வொரு பிரேமையும் மனக்கண்ணில் நிறுத்தி அசைபோட்டுப் பார்த்து, அவற்றை காட்சியாக்கத்தில் கொண்டுவர,ஒட்டுமொத்தப் படத்திலும் பல தொழில்நுட்பப் பணிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்த வகையில் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெலிசேரி.

அதேநேரத்தில், ‘இந்த படத்தை ஏன் பார்க்கிறோம்’ என்று நொந்துகொள்வதற்கும் அவரே காரணமாகியிருக்கிறார்.

லிஜோவின் ‘மேதைமை’ தேவையா?

குறிப்பிட்ட சில இயக்குனர்களின் படைப்புகளில் சில ‘ட்ரேட்மார்க்’ ஷாட்கள் மற்றும் காட்சிகளைக் காணலாம். அது, அவர்களது தனித்தன்மையாகவும் அமையும்.

மலையாளத் திரையுலகில் தனது படங்களின் கமர்ஷியல்தன்மை இன்னொருவிதமானது என்று தொடக்கம் முதலே வெளிக்காட்டி வருபவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெலிசேரி.

‘அங்கமாலி டயரீஸ்’, ‘ஏ மா யூ’ படங்களில் லிஜோவின் காட்சியாக்கம் புதுப்பாய்ச்சலை நிகழ்த்தின. அவரது படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகமாகத் தெரிந்தன.

அந்த வரிசையில், ‘மலைக்கோட்டை வாலிபன்’ படமும் நாம் பார்த்த நாயக சாகசப் படங்கள் மற்றும் அரச கதைகளில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டது.

கேலு மல்லன் எனும் பாத்திரத்தோடு மலைக்கோட்டை வாலிபன் மோதும் சண்டைக்காட்சி அதற்கொரு உதாரணம்.

அதுவே, பிற்பாடு படம் எந்த திசையில் செல்லும் என்பதற்கும் ஒரு சோறு பதமாக இருக்கும்.

அதையெல்லாம் மீறி, முன்பாதி தந்த குதூகலத்தைப் பின்பாதி கொஞ்சம் கூடத் தரவில்லை. தவிர, படத்தின் கதையும் சரி; காட்சியமைப்பும் சரி; கொஞ்சம் கூடப் புதிதாகத் தென்படவில்லை.

அதனால், ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தைப் பார்க்கப் பார்க்க அரச படங்களின் ‘ஸ்ஃபூப்’ என்றே தோன்றுகிறது.

அதேநேரத்தில், தான் பார்த்துப் பிரமித்த படங்களின் எண்ணக் குவியலாகவும் இதனை உருவாக்கியிருக்கிறார் லிஜோ. அந்த மேதைமைதான் இந்த படத்தின் தரத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது.

மோகன்லால் தனது வெற்றிக் கொண்டாட்டத்தை வெளிக்காட்ட ஒரு கல்வெட்டைப் பிடுங்கி வீசுவதாக ஒரு காட்சி உண்டு.

அந்த கல் விழுமிடத்தைப் பார்க்க ஆடு மேய்ப்பவர் செல்ல, அவர் உண்ணும் உணவை ஒரு ஆடு தின்னுவதாக ஒரு ‘ஷாட்’ இதிலுண்டு. அது போன்ற இடங்களே லிஜோ படங்களில் சாதாரண ரசிகர்கள் சிலாகிக்கும் முதல் அம்சம். அந்த தருணங்கள் இதில் மிகக்குறைவு.

மேலும், ‘ஒரு சண்டை, ஒரு பாட்டு, அப்புறம் கொஞ்சம் வசனம், திரும்பவும் அதே சண்டை பாட்டு வசனம் என்று திரைக்கதை செல்வதாக’க் குற்றம்சாட்டவும் இடம் தருகிறது இப்படம்.

காட்சியாக்கம் தரும் பிரமிப்பெல்லாம் அவர்களிடம் கொஞ்சம் கூட எடுபடாது. இது போதாதென்று லிஜோவின் ரசிகர்கள் ‘இதுதாண்டா ஷாட்’ என்று கத்திக் கதறி நம்மை ரொம்பவே சோதிப்பதும் நிகழ்கிறது.

அவற்றைத் தாண்டி, லிஜோவின் உலகத்தில் மலர்ந்த ஒரு ‘ஆக்‌ஷன் அட்வெஞ்சர்’ பார்க்க வேண்டுமென்பவர்களை இப்படம் நிச்சயம் பிரமிப்பில் ஆழ்த்தும்.

அதற்கேற்றவாறு மோகன்லால் உட்படப் பலரது கடும் உழைப்பு இதில் நிறைந்துள்ளது. அதற்குத் தயாராக இல்லாதவர்களுக்கு, மலைக்கோட்டை வாலிபன் ஒரு வெற்று புஸ்வாணம் தான்..!

– உதய் பாடகலிங்கம்

You might also like