தமிழ், தெலுங்கைக் காட்டிலும் இந்தி திரையுலகில் ஆக்ஷன் படத்திற்கான பட்ஜெட் மிக அதிகமிருக்கும். உலகம் முழுக்க சந்தைப்படுத்த முடியும் என்பதே அதற்கான காரணம்.
அதனை மட்டுமே மனதில் கொண்டு, சிறப்பான காட்சியாக்கத்தை உருவாக்கத் துடிப்பவர்களில் முதன்மையானவர் இயக்குனர் சித்தார்த் ராஜ் ஆனந்த்.
கடந்த ஆண்டு ஆயிரம் கோடி வசூலை அள்ளிய ‘பதான்’ மட்டுமல்லாமல் வார், பேங் பேங் போன்ற ஆக்ஷன் படங்களை இதற்கு முன் தந்திருக்கிறார்.
அப்படங்கள் தமிழிலும் சில தியேட்டர்களில் வெளியாகின; மிகச்சில ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் இன்னொன்றாக, அவர் இயக்கியிருக்கும் படமே ‘பைட்டர்’.
இப்படம் தமிழில் வெளியாகவில்லை. ஆனால், ஓடிடியில் கூடிய சீக்கிரம் இதன் ‘டப்பிங்’ வெர்ஷன் வருமென்று நம்பலாம். இது 3டி பதிப்பாகவும் வெளியாகியிருக்கிறது என்பது இன்னொரு சிறப்பம்சம்.
எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் திரையில் வழங்குகிறது இப்படம்?
விமானப்படையினரின் வாழ்க்கை!
‘தேஜாஸ்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் இந்திய விமானப் படையினரின் வாழ்க்கை காட்டப்பட்டுள்ளது.
‘பைட்டர்’ படத்திலும் மிக அருகில் சென்று நோக்கும் வகையில், திரையில் அந்த வாழ்க்கை சொல்லப்படவில்லை.
அதேநேரத்தில், ஒரு கமர்ஷியல் படத்தில் எந்த அளவுக்கு விமானப்படை தொடர்பான விவரங்களைச் சொல்ல முடியுமோ அதனைத் தந்திருக்கிறது இப்படம். அதுவே, இப்படத்தைக் காண்பதற்கான யுஎஸ்பியாகவும் அமைந்துள்ளது.
படத்தின் கதை இதுதான். ஸ்குவாட்ரன் லீடராக இருக்கும் சம்ஷேர் பதானியா (ஹ்ரித்திக் ரோஷன்) மிகப்பெரிய திறமைசாலி. ஆனால், அவரைப் போன்றே குழுவில் இருப்பவர்களும் திறமையுள்ளவர்கள் என்று கருதுபவர்.
அவரது இந்தச் சிந்தனையை குரூப் கேப்டன் ராகேஷ் ஏற்பதில்லை. அது மட்டுமல்லாமல், அவரை எப்போதும் விலக்கியே வைத்திருக்கிறார். அதுவே, சம்ஷேர் குறித்து அவர் மனதில் கோபம் பொங்கி வழிவதை உணர்த்துகிறது.
2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ராகேஷ் குழுவில் மினாள் (தீபிகா படுகோனே), சர்தாஜ் கில் (கரன் சிங்), பஷீர் (அக்ஷய் ஓபராய்), சுக்தீப் (பன்வீன் சிங்) மற்றும் சிலரோடு இடம்பெறுகிறார் சம்ஷேர். மெல்ல அவர்களுக்குள் ஒரு பிணைப்பு உருவாகிறது.
இந்த நிலையில், புல்வாமாவில் ஆயுதப்படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துகிறார்.
அதற்குப் பதிலடியாக, பாலக்கோடில் செயல்பட்டு வரும் அந்த தீவிரவாத இயக்க முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறது ராகேஷ் தலைமையிலான படை.
திட்டப்படியே எல்லாம் கனகச்சிதமாக நடக்கிறது. அதையும் மீறி, சர்தாஜ் மற்றும் சம்ஷேரின் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கிக் கொள்கின்றன.
அதன்பிறகு என்னவானது? அவர்கள் உயிர் பிழைத்தனரா என்று சொல்கிறது ‘பைட்டர்’ படத்தின் இரண்டாம் பாதி.
புல்வாமா தாக்குதல், பாலக்கோடு விமானப்படை முற்றுகை போன்ற தகவல்களைச் செய்திகளில் அறிந்தவர்களுக்கு இப்படம் கூடுதலாக ‘கூஸ்பம்ஸ்’ மொமண்ட்களை வழங்கும்.
ஆக்ஷன் அனுபவம்!
ஹ்ரித்திக் ரோஷன் இதில் நாயகனாக நடித்துள்ளார். அவர் ‘ஸ்கோர்’ செய்வதற்கான காட்சிகள் உண்டென்ற போதும், இதர பாத்திரங்களுக்கும் கூட திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
அதுவே, ‘ட்ரோல்’ செய்பவர்களிடம் இருந்து ‘பைட்டர்’ படத்தை ஓரளவுக்கு மீட்க உதவியிருக்கிறது.
நாயகியாக தீபிகா படுகோனே இடம்பெற்றிருக்கிறார். அவரது ‘அத்லெட்டிக்’ தேகம், அப்பாத்திரத்திற்கு எளிதாகப் பொருந்துகிறது. நடிப்பும் அப்படியே.
ஆனாலும், அவரது கவர்ச்சியை ரசிகர்கள் பார்த்தாக வேண்டும் என்று படம் முடிந்தபிறகு ஒரு பாடலைத் தந்திருக்கிறார் இயக்குனர்.
இதில் அனில் கபூர், கரன் சிங் குரோவர், அக்ஷய் ஓபராய் என்று பலர் வந்து போயிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தேவையான அளவுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார் திரைக்கதையை அமைத்திருக்கும் ரமோன் சிப். இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பது இன்னொரு சிறப்பம்சம்.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான படைப்புகள் வழியே கவனம் ஈர்த்த ஷரீப் ஹாஸ்மி, மீகாமன் படத்தில் கலக்கிய அசுதோஷ் ராணா, ஒருகாலத்தில் டிடி சீரியல்கள் வழியே தனக்கென்று தனி ரசிகை வட்டத்தை உருவாக்கிய தலத் ஆசிஷ் போன்றவர்களும் இதில் ஓரிரு காட்சிகளுக்கு வந்து போயிருக்கின்றனர்.
இத்தனை நடிப்புக் கலைஞர்கள் இடம்பெற்றாலும், அவர்களுக்கான இடத்தைச் சரியான விகிதத்தில் திரையில் தந்ததில் இருக்கிறது சித்தார்த் ராஜ் ஆனந்தின் சாமர்த்தியம்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பு, இதன் விஎஃப்எக்ஸ். ‘இதெல்லாம் கிராபிக்ஸ்தானே’ என்று பிரேம்களை தனியே பிரித்து மனதுக்குள் அசைபோட முடியாத அளவுக்கு அக்குழுவினர் தமது உழைப்பை வாரியிறைத்திருக்கின்றனர். பெரும்பாலான ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிரூட்டியிருப்பது அவர்கள்தாம்.
எல்லையில் போர் மனநிலையுடன் இருக்கும் பாத்திரங்களையும், அந்த களத்தையும் திரையில் காட்ட ஒரு சில வண்ணங்களே போதும் என்று முடிவெடுத்துச் செயல்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சட்சித் பௌலோஸ்.
அதேநேரத்தில், பாத்திரங்களை ஸ்டைலாக அறிமுகப்படுத்தும் இடங்களிலும், ஆக்ஷனில் ஈடுபடுவதைக் காட்டும் இடங்களிலும் கேமிரா கோணங்கள் செய்திருக்கும் மாயாஜாலம் கொஞ்சநஞ்சமல்ல.
ஆரிஃப் ஷெய்க்கின் படத்தொகுப்பு, தேவையான காட்சிகளை தேவைப்படும் விதத்தில் தொகுத்திருக்கிறது.
விமானப்படை பயிற்சி மற்றும் செண்டிமெண்ட் தொடர்பான காட்சிகள் போரடிக்கின்றன என்றாலும், அவையே களத்தை முழுமையாக உள்வாங்கத் துணை நிற்கின்றன என்பதை மறுக்கக் கூடாது.
விஷால் – சேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ‘ஓகே’ ரகம்.
ஆனால், அந்தக் குறையைப் பின்னணி இசை தந்து போக்கியிருக்கிறது சஞ்சித் மற்றும் அங்கித் பல்ஹாரா இணை.
தயாரிப்பு வடிவமைப்பாளர் ரஜத் பொடாரின் உழைப்பில் எல்லைப்பகுதிக்கே சென்றுவந்த அனுபவம் கிட்டுகிறது.
‘பைட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், தனிநபர் மோதல் இதில் இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். அந்தப் பெயர் விமானப்படையிலுள்ள விமானங்களைச் சொல்லக் குறிப்பிடப்படுவது.
அதற்கேற்ப, படம் முழுக்க விமானப்படையினரின் வாழ்க்கை காட்டப்படுகிறது. ஆனால், மருந்துக்குக் கூட அந்த விமானங்களை முக்கியப் பாத்திரங்களாகக் காட்டத் தவறியிருக்கிறார் இயக்குனர்.
நிச்சயம் ஆக்ஷன் விரும்பிகளுக்கு ஏற்றதாக இருக்கும் இந்த படம் தரும் காட்சியனுபவம். குறிப்பாக, மொபைலிலும் கம்ப்யூட்டரிலும் வீடியோ கேமை விளையாடித் தீர்ப்பவர்களுக்கு இப்படம் பிடிக்கும்.
எல்லை தாண்டும் கதை!
பாகிஸ்தான் தீவிரவாதிகள் பந்தாடப்படுவதை விஜயகாந்த், அர்ஜுன் படங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டு ரசித்தவர்கள் நாம். எல்லை தாண்டிச் சென்று அதகளம் புரிவதென்பது ‘இணைந்த கைகள்’ படத்திலேயே காட்டப்பட்ட விஷயம்.
அதையும் தாண்டி, இந்தி திரையுலகில் இப்படி எல்லை கடந்து சென்று வெற்றிவாகை சூடுவது போல எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. கடந்த ஆண்டு வெளியான ‘கடர் 2’ கூட அந்த வகையறாதான்.
ஆதலால், அவற்றின் இன்னொரு வடிவமாகவே திகழ்கிறது ‘பைட்டர்’. ஷாரூக்கானின் எல்லை கடந்த ரசிகர்களை மனதில் கொண்டு, ‘பதான்’ படத்தில் பாகிஸ்தானை பெரிதாக விமர்சிக்காமல் இருந்த சித்தார்த், இதில் எதிர் தரப்பை பஞ்சர் ஆக்கியிருக்கிறார். அதுதான் வித்தியாசம்.
விமானப்படையைச் சேர்ந்தவர்கள் இப்படத்தைக் காணும்போது பல லாஜிக் மீறல்களைக் கண்டுபிடிக்கலாம்.
சாதாரண ரசிகர்களும் கூட, கிளைமேக்ஸ் காட்சியின்போது ‘பூ சுத்தாதீங்கப்பா’ என்று சொல்லவே வாய்ப்புகள் அதிகம்.
அதையும் மீறி, சர்ரென்று பறக்கும் விமானங்களும், அவற்றைக் குறிவைத்து தாக்கத் திரியும் ஏவுகணைகளும் பிரமாண்டத் திரையில் ஒரு வீடியோ கேம் விளையாட்டுக்குள் நுழைந்த உணர்வைத் தருகிறது.
குறிப்பாக, 3டி நுட்பத்தில் பார்ப்பதனால் அலாதியான இன்பத்தைத் தருகிறது ‘பைட்டர்’.
தொடக்கத்திலும் இறுதியிலும் மட்டுமே 3டி நேர்த்தி மிகுந்திருப்பதும், மற்ற இடங்களில் சரிந்திருப்பதும் மட்டுமே இப்படத்தின் மைனஸ் பாயிண்ட்.
மற்றபடி, லாஜிக் மீறல் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஜாலியாக ஒரு ஆக்ஷன் படம் பார்க்க வேண்டும் என்பவர்களை ‘பைட்டர்’ நிச்சயம் ஈர்க்கும்!
– உதய் பாடகலிங்கம்