பக்தர்கள் பல நூற்றாண்டுகள் காத்திருக்க நேர்ந்த அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதனையடுத்து கோயில் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது.
ராமர் கோயில் பிரதிஷ்டையையொட்டி கடந்த 16-ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின.
7 நாட்களில் 5.50 லட்சம் மந்திரங்கள் ஓதப்பட்டன. மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய பால ராமர் சிலை கடந்த 19-ம் தேதி கோயில் கருவறையில் நிறுவப்பட்டது.
ராமர் கோயில் திறப்பு விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, பிரதமர் மோடி பூஜை மற்றும் வழிபாடுகளை செய்தார்.
மதியம் 12.29 மணி முதல் 12.45 மணிக்குள் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது கோயிலின் மேல் பகுதியில் கருடன் வட்டமிட்டது. விஷ்ணுவின் வாகனம் கருடன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் பங்கேற்பு
விழாவில் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, சுனில் பார்தி மிட்டல், லட்சுமி மிட்டல், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அபிஷேக் பச்சன், ராம்சரண், தனுஷ், மாதுரி தீட்சித், கங்கணா ரனாவத், ரன்பீர் கபூர், ஆலியா பட், கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட விவிஐபிக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உலக நாடுகளில் கொண்டாட்டம்
ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, நேபாளத்தில் சீதாதேவி பிறந்த ஜனக்பூரில் 1 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
அமெரிக்காவில் முன்னூறுக்கும் மேற்பட்ட இடங்களில் பூஜைகள் நடைபெற்றன.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காவிக் கொடிகளுடன் பிரம்மாண்ட வாகனப் பேரணி நடத்தப்பட்டது.
கனடாவில் உள்ள இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு இந்து பக்தர்கள் திரண்டு ராமர் கோயில் திறப்பு விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
மொரிஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸில் அந்த நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார், சிறப்பு வழிபாடு செய்தார்.
இலங்கை, இந்தோனேசியா, தைவான், மெக்சிகோ, கென்யா, தான்சானியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளிலும் ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் தொலைக்காட்சி சேனல்கள், இணையதளங்கள் மற்றும் பிரம்மாண்ட திரைகளில் பிரதிஷ்டை நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை கோடிக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
ராமர் நெற்றியில் சூரிய ஒளி
ராமர் கோயில் சூரியத் திலகம் எனும் இயந்திர முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ராமநவமி தினத்தன்று பகல் 12 மணிக்கு பாலராமர் நெற்றியில் சூரிய ஒளி விழும் வகையில் கருவறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சூரியனின் பாதை உள்ளிட்ட தொழிற்நுட்ப உதவியை பெங்களூருவில் உள்ள இந்திய வான் இயற்பியல் மையம் அளித்துள்ளது.
– பி.எம்.எம்.