54 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய விஜயகாந்த்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

கமல்ஹாசன், விஷால், நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘கேப்டனு’க்கு புகழாரம் சூட்டினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் ‘விஜயகாந்தை நான் முதலில் சந்தித்தபோது அவர் என்னிடம் எப்படிப் பழகினாரோ அப்படித்தான் பெரிய நட்சத்திரமான பின்பும் பழகினார்.

விஜயராஜ், விஜயகாந்த் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவில் பார்த்துக் கொண்டவர்.

பல்வேறு அவமானங்களைத் தாங்கி திரை உலகில் மேலோங்கி வந்தவர். அதற்காக காழ்ப்புணர்ச்சி ஏதும் வைத்துக்கொள்ளாமல், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர்.

கடைநிலை நடிகர்களுக்கும் விஜயகாந்த் குரல் கொடுத்தார். இது அவர்கள் செய்த பாக்கியம்.

தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கெல்லாம் வந்த கூட்டம் இவருக்காகவும் வந்தது.

அவர் கொடுப்பது பல பேருக்கு தெரியாது. அவரால் பயனடைந்தவர்கள் அதனை மறக்க மாட்டார்கள்.

எனக்கு விஜயகாந்திடம் பிடித்த நல்ல குணங்களில் ஒன்று, அவருடைய நியாயமான கோபம். எந்த அரங்கமாக இருந்தாலும் அவர் பயப்பட மாட்டார்.

நான் அவரது படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளேன். தனக்கு பிடிக்காதவர்களைக்கூட அழைத்து பேசும் தைரியம் அவருக்கு உண்டு.

இதை தொடர்ந்து பேசிய விஷால் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு உணவளித்தவர், கேப்டன்.

உணவில் எந்த பாரபட்சமும் பார்க்கக்கூடாது என எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்தவர்.

54 புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்திய ஒரே நடிகர் விஜயகாந்த் தான். 54 பேரின் வீடுகளில் விளக்கேற்றி வைத்தவர்.

பல நடிகர்கள் உயர்வதற்கு வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த். அந்த வகையில் சண்முக பாண்டியனிடம் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.

“உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசை இருந்தால் நான் வருகிறேன்.

என்னை பயன்படுத்திக்கொள்ள உனக்கு விருப்பம் இருந்தால் நானும் உன்னுடன் தூணாக இருந்து படத்தில் நடித்து தருகிறேன்’’ என்றார்.

‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு விஜய்காந்த் பெயரை வைக்க வேண்டும். அதற்கான தகுதி அவருக்கு உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பங்கேற்கவில்லை. ஆனால் அவர் வீடியோவில் பேசிய இரங்கல் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன் இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like