மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைத் தெரிந்திராத மனிதர்கள் வெகு குறைவு. நாளிதழ் வாசிக்கும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் வழக்கம் கொண்ட எவருக்கும் அவரைத் தெரியும். சொல்லப்போனால், தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு அவரைக் குறித்த பிம்பம் நினைவில் இருக்கும்.
நரைத்த தலைமுடி, மழுங்க ‘ஷேவ்’ செய்த முகம், சிரித்த உதடுகளின் வழியே தென்படும் பெருமிதம், கைகளை குறுக்குநெடுக்காக வீசி உரையாற்றும் உடல்மொழி என்று கவனிக்கத்தக்க அரசியல் ஆளுமையாக இருந்தவர் வாஜ்பாய்.
அவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ஒரு திரைப்படம் உருவாகிறது என்றபோது, அது குறித்த எதிர்பார்ப்பு பெருகியது. ’மெய்ன் அடல் ஹூன்’ என்ற அந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
படம் எப்படியிருக்கிறது?
குறைவான சம்பவங்கள்!
பள்ளி நாட்களில் மேடைப்பேச்சுக்கு அஞ்சி நின்ற மாணவனாக அடல் பிஹாரி வாஜ்பாய் இருந்த காலத்தைக் காட்டுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.
அந்த பயத்தைப் போக்க அவரது தந்தை கிருஷ்ணா உதவியதைச் சொல்கிறது.
இளம் வயதில் தேகப்பயிற்சிகள், பிரணாயாமம் செய்வதில் அவர் சிரத்தை காட்டியது தொடங்கி ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கில் (RSS) தன்னை இணைத்துக் கொண்டதைப் பேசுகிறது.
கல்லூரிக் காலத்தில் ராஜகுமாரி என்ற பெண்ணின் இருப்பு அடல் பிஹாரி வாஜ்பாய் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திடீரென்று அந்தப் பெண் டெல்லிக்குச் சென்றதும், அதனை இழப்பாக உணர்கிறார்.
பின்னர், சட்டம் பயிலச் செல்கிறார். அங்கு, வாஜ்பாயின் தந்தையும் அவருடன் சேர்ந்து பயில்கிறார்.
சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட பிரிவினைக் கலவரங்களை அடுத்து, படிப்பைக் கைவிடுகிறார் வாஜ்பாய். நாக்பூர் சென்று, ஆர் எஸ் எஸ் நடத்தும் பத்திரிகையில் பணியாற்றத் தொடங்குகிறார்.
அப்போது கோல்வால்கர், தீனதயாள் உபாத்யாயா போன்றோர் அவ்வியக்கத்தில் முன்னணி தலைவர்களாக இருக்கின்றனர். அவர்களோடு பழகும் வாய்ப்பைப் பெறுகிறார் வாஜ்பாய்.
ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் வரவுக்குப் பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாயின் கவனம் அரசியல் பக்கம் திரும்புகிறது. நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லி செல்கிறார்.
பிரதமராக இருந்த இந்திரா காந்தியை எதிர்த்து அவர் மக்களவையில் ஆற்றிய உரைகள் மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படுகின்றன.
அவசர நிலை காலத்தின்போது அடக்குமுறைக்கு ஆளாகும் வாஜ்பாய், ஜனதா கட்சி ஆட்சிக்காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்; ஐ.நா.வில் உரையாற்றுகிறார்.
ஜனதா கட்சி உடைந்தபிறகு, 1980இல் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்குவதில் முன்னிலை வகிக்கிறார் வாஜ்பாய்.
மெல்ல மக்களவையில் அதிக இடங்களைக் கைப்பற்றும் அக்கட்சி, 1996 தேர்தலில் வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கிறது. அதன்பிறகு, 1998 முதல் 2004 வரை அவர் பிரதமராகப் பதவி வகிக்கிறார்.
பொக்ரானில் நடந்த அணுகுண்டு சோதனையும், கார்கில் போரும் அவரது அரசின் வெற்றிகளாகக் கருதப்படுகின்றன.
இவையனைத்தையும் பேசுகிறது ‘மெய்ன் அடல் ஹூன்’ திரைப்படம்.
ஆனால், மேற்சொன்ன சம்பவங்களைக் கொண்டு முழுமையாக வாஜ்பாயின் வாழ்வை உணர முடியாது என்பதே உண்மை.
காரணம், அவற்றைத் தாண்டிப் பல சம்பவங்கள் அவரது அரசியல் மற்றும் பொது வாழ்வில் உண்டு. அவை பலவிதங்களில் ஒரு பார்வையாளரிடத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை.
அவற்றைச் சேர்த்து இப்படத்தைச் செறிவுமிக்கதாக ஆக்கியிருக்கலாம் என்பதே இப்படம் எதிர்கொள்ளும் முதல் விமர்சனமாக இருக்கும்.
’க்ளாசிக்’ பட உள்ளடக்கம்!
பங்கஜ் திரிபாதி இதில் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆக நடித்துள்ளார். சிறுவனாக இருந்த பருவத்தைக் காட்ட மட்டுமே ஒரு குழந்தை நட்சத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
மற்றபடி கல்லூரி, அரசியல் காலத் தொடக்கத்தையும் முதுமையின் இறுதியையும் உணர்த்தும் காட்சிகளில் பங்கஜ் திரிபாதியே நடித்துள்ளார்.
வாஜ்பாய் உடல்மொழியைச் சிறிதளவு பார்த்தவர்கள் கூட, இதில் பங்கஜின் நடிப்பைப் பாராட்டத்தான் வேண்டும். அந்த அளவுக்கு அவரை நினைவூட்டும்விதமாகத் தோன்றியிருக்கிறார்.
கல்லூரிக் காலக் காட்சிகள் மற்றும் பிரதமர் ஆன பிறகான காட்சிகளை ஒப்பிடுகையில், ஒரேமாதிரியான உடலசைவினை வெவ்வேறு காலகட்டத்துக்கு ஏற்றவாறு வெளிப்படுத்தியதில் அவர் காட்டிய நுட்பம் பிடிபடும்.
கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் ஆக நடித்த பியூஷ் மிஸ்ரா, தொடக்கக் காட்சிகளில் சிரிப்பை வரவழைக்கிறார். தயா சங்கர் பாண்டே, பிரமோத் பதக், பிரசன்ன கேட்கர் என்று பலர் இதில் நடித்துள்ளனர்.
அத்வானியாக நடித்துள்ள ராஜா ரமேஷ்குமார் சேவக் எளிதாக நம்மை ஈர்க்கிறார். ராஜ்குமாரி கவுல் ஆக நடித்துள்ள மது சிங்கும் மனம் கவர்கிறார்.
டிஐ மற்றும் விஎஃப்எக்ஸை மனதில் கொண்டு மொத்த படத்தையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் லாரன்ஸ் டி குன்ஹா.
படம் முழுக்க அவர் தந்திருக்கும் செம்பழுப்பு வண்ணம் ஒரு ‘கிளாசிக்’ திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
சந்தீப் சரத் ராவடேவின் தயாரிப்பு வடிவமைப்பு பணிகள் 1940 முதல் 2000 வரையிலான காலகட்டத்தைத் திரையில் நாம் பார்க்க உதவியிருக்கிறது.
ஒரு கமர்ஷியல் படம் போன்று இதில் பாயல் தேவ், கைலாஷ் கெர், அமித்ராஜ், சலீம் – சுலைமான் தந்த பாடல்கள் உள்ளன.
அதையெல்லாம் விட, படத்தைத் தொய்வின்றிப் பார்க்கச் செய்வது மாண்டி சர்மாவின் பின்னணி இசைதான்.
அதையும் மீறிச் சில இடங்களில் அயர்ச்சி தருகிறது திரைக்கதை. அதனைச் சரி செய்திருக்கலாம்.
அதேநேரத்தில், ஷாட்களை சரியான விகிதத்தில் கோர்த்து ஒரு வாழ்க்கையை நேரில் பார்க்கும் உணர்வைத் தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பண்டி நாகி.
வெளித்தோற்றத்தில் ஒரு கிளாசிக்கான இந்திப் படம் பார்த்த உணர்வைத் தந்தாலும், இதில் அடல் பிஹாரி வாஜ்பாயின் முழுமையான வாழ்வைக் கண்ட திருப்தி ஏற்படவில்லை.
ஒரு அரசியல் தலைவரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் பல இருந்தாலும், அனைத்தையும் திரையில் சொல்ல முடியாது; ஆனால், இன்னும் சிலவற்றைச் சேர்த்து உள்ளடக்கத்தை இன்னும் செறிவாக்கியிருக்கலாம் என்பதே நம் வருத்தம்.
அதற்கு இயக்குனர் ரவி யாதவ்வும் அவருடன் இணைந்து திரைக்கதையை உருவாக்கிய ரிஷி விர்மானியும் மட்டுமே பொறுப்பு.
வெறுப்பு அரசியல்!
ஸ்பாய்லர் என்றபோதும் சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
அடல் பிஹாரி வாஜ்பாய் எனும் தலைவர் இந்துத்துவ அரசியலை முன்னெடுத்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தாலும், பாஜக தலைவர்களில் மென்மையான பிம்பம் அவருக்கு இருந்ததை இப்படம் அடிக்கோடிட்டுக் காட்டவில்லை.
பத்திரிகையாசிரியர், கவிஞர் என்ற முகங்கள் ஓரிரு காட்சிகளில் வெறுமனே குறிப்பிடப்படுகின்றன.
வாஜ்பாய் வாழ்க்கையில் 1965 முதல் 1977ஆம் ஆண்டு வரை திரையில் காட்டிய அளவுக்கு, 1980 முதல் 1998 வரையிலான காலகட்டம் திரைக்கதை ஆக்கப்படவில்லை.
அதனால், 1998 மக்களவை தேர்தல், பொக்ரான் குண்டுவெடிப்பு, கார்கில் போர் ஆகியன அடுத்தடுத்து திரையில் வந்து விழுகின்றன.
அவற்றைப் பார்த்து முடிப்பதற்குள்ளாகவே படம் முடிந்தும் விடுகிறது. அதனால், சில காட்சிகள் ‘கட்’ ஆகிவிட்டனவா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அத்வானி – வாஜ்பாய் சம்பந்தப்பட்ட காட்சிகள் நம் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதும் அக்குறையுடன் சேர்ந்து கொள்கிறது.
சில தலைவர்கள், கட்சிகள் மீது வெறுப்பு பாராட்டவில்லை என்று தொடக்கத்தில் இடம்பெற்ற ‘பொறுப்பு துறப்பு’வில் குறிப்பிடப்பட்டாலும், இப்படம் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் கடுமையாகச் சாடியிருப்பதை மறுக்க முடியாது.
இந்திரா காந்தி, சோனியா காந்தியைத் திரையில் காட்டும் ஓரிரு காட்சிகளே அதற்குச் சாட்சி.
சில ஷாட்களில் இஸ்லாமியர்களாகச் சிலரைக் காட்டியபோதும், அம்மதத்தவர் குறித்த வாஜ்பாயின் பார்வை திரைக்கதையில் தெளிவாக வெளிப்படவில்லை.
சப்டைட்டில் இல்லாமல் பார்க்க நேர்ந்ததும், பல வசனங்கள் மேடைப்பேச்சு தொனியில் அமைந்திருந்ததும் இப்படத்தை ரசிப்பதில் தடைகளாக இருந்தன.
தனது தனித்துவமான பேச்சுத்திறமையால் வாஜ்பாய் வடமாநில மக்களிடையே புகழ் பெற்றதை மனதில் கொண்டு, ’அங்குள்ளவர்கள் ரசித்தால் போதும்’ என்று படக்குழு இம்முடிவை எடுத்திருக்கலாம்.
எது எப்படியாயினும், ஓடிடியில் வெளியாகும்போது இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நிச்சயம் ‘டப்’ செய்யப்படும். அப்போது ‘மெய்ன் அடல் ஹூன்’ கூடுதல் விமர்சனங்களுக்கு உள்ளாகும்.
– உதய் பாடகலிங்கம்