– அண்ணா கலந்து கொண்ட கலைவாணர் விழா
தமிழர்கள் எல்லோரும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். எத்தனையோ பொங்கல் திருநாள் வாழ்க்கையில் வந்துள்ளது.
அச்சமயங்களில் பெரும்பாலும், எவரும் எங்கிருந்தாலும், தங்கள் தங்கள் கிராமங்களுக்குச் சென்று பெற்றோருடன், குடும்பத்துடன், குதூகலமாகப் பொங்கல் கொண்டாடுவது தமிழர்கள் மரபு.
எப்பொழுதும் கிராமத்திற்குப் போய்விடும் பழக்கம் உள்ள எனக்கு அவ்வருடம் புதிய அனுபவம்! அன்று வழக்கத்திற்கு மாறாக, கிராமத்திற்குப் போகாமல், சென்னைக்கு வந்தேன்.
காரணம் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியைக் காணத்தான்.
ஆம்! நகைச்சுவை மன்னன் என்று மக்களால் போற்றப்பட்ட ‘கலைவாணர்’ என்.எஸ்.கே அவர்களுக்கு, கலை உலகத்தினர் சார்பில் தியாகராய நகரில் சிலை எடுக்கப்பட்டு, 14.01.1969 அன்று முதலமைச்சர் அண்ணா திருக்கரத்தால் சிலை திறக்கப்பட்ட நிகழ்ச்சிதான் அது எனில் மகிழ்ச்சிக்குக் காரணம் வேறு உண்டோ?
கலையுலகப் பெரியவர்கள் நடத்திய கலைவாணர் விழா!
உலகத்தமிழ் மாநாட்டின் ஊர்வலக் குழுவிற்கு பொறுப்பேற்ற கலைஞர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய கலையுலகப் பெரியவர்கள், குறிப்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெமினி வாசன், ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், நாகிரெட்டி உள்ளிட்ட கலை உலகப் பிரமுகர்கள், நடிகர்கள் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
கலைஞர், எம்.ஜி.ஆர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழா மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
மூன்று சாலைகளையும் மறைப்பது போல மக்கள்கூட்டம். கலைவாணர் என்.எஸ்கே அவர்களின் சிலையைத் திறந்து வைத்து அண்ணா உணர்ச்சிப் பொங்கப் பொங்க பேசி, கேட்டோர் அனைவரின் உள்ளத்தையும் தொட்டார்.
நீங்களும் அண்ணா ஆற்றிய உரையைக் கேளுங்கள்:
“அன்புள்ள தலைவர் அவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே!
மறைந்த நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு, இந்தத் தமிழர் திருநாளன்று சிலை திறப்புவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
இது சில ஆண்டுகளுக்கு முன்னரே நடைபெற்றிருக்க வேண்டும் என்றே பலர் கருதினாலும், நம்முடைய நண்பர் ஜெமினி வாசன் அவர்கள், “அதற்கெல்லாம் ஒருவேளை வரவேண்டும்” என்று குறிப்பிட்டார்கள்.
அவ்வாறு வேளை வரவேண்டும் என்று அவர்கள் சொன்னது வெறும் வைதீகத்தில் சொன்னார்கள் என்று நான் கருதவில்லை.
அவருடைய (என்.எஸ்.கே) நண்பர்களாகிய நாங்கள் எல்லாம் அரசை ஆளுகின்ற அந்த நல்லவேளை வரவேண்டும் என்பதுதான் அதற்கு உண்மையான பொருளாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.
கலைவாணர் அவர்களுக்கு, இன்றைய தினம் அரசு நடத்துகின்ற திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் இடத்திலேயும், புரட்சி நடிகர் ராமச்சந்திரன் சொன்னபடி எல்லாக் கட்சிகளிலும் உள்ள நல்லவர்கள் இடத்திலேயும் நெருங்கிய நட்பும் தொடர்பும் உண்டு.
எல்லாக் கட்சிகளாலும் மதிக்கப்பட்டவர் என்.எஸ்.கே.
முதன்முதல், ஒரு கலைஞர் எல்லா அரசியல் கட்சிகளாலும் மதிக்கப்படத்தக்க நிலையைப் பெற்றது என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காலத்திலே தான் என்பதை நாம் அறிகின்ற நேரத்தில், அவருடைய சிறந்த சிறப்பியல்புகளை எண்ணி எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைய நியாயமிருக்கிறது.
வெறும் கலைஞராக இருந்து தங்களுடைய கலைத் தொண்டை ஆற்றியவர்கள், கலை உலகிற்கு மட்டும் தொண்டாற்றுகிறார்கள்.
வெறும் கலைஞராக இருந்து தங்களுடைய சொந்த வருவாயைப் பெருக்கிக் கொள்ளுபவர்கள், தங்களுடைய குடும்பத்தையும் நண்பர்களையும் நல்ல நிலையிலேயே வைத்திருக்கிறார்கள்.
ஆனால், கலைவாணர் அவர்கள் கலையுலகத்திற்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் தம்முடைய தொண்டுகளைச் செய்ய வேண்டும், அதற்கு இந்தக் கலை ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற முறையில் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இன்றைய தினம் பொங்கல் நன்னாள். உழைப்பினுடைய உறுபயனைச் சமூகம் முழுவதும் பெற வேண்டும் என்ற நல்ல லட்சியத்தை உலகுக்கு அறிவிக்கின்ற நாள்.
கலைவாணர் அவர்களின் வெற்றி, உழைப்பினுடைய அடிப்படையிலேயே ஏற்பட்ட வெற்றியாகும். அவரைப்பற்றி அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
நகைச்சுவை – ஒரு விளக்கம்
அவருடைய சிறந்த உழைப்பு அவருக்கு மட்டுமல்லாமல், கலைத்துறைக்கே, நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
நகைச்சுவைப் பாத்திரம் என்றால், ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும். நடக்கின்ற பொழுது கீழே விழுவார்கள் அது நகைச்சுவைப் பாத்திரம்.
இப்படி இருந்ததை மாற்றி, நகைச்சுவைப் பாத்திரம் என்பதை சிந்தித்துப் பார்த்து, சிரித்து நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.
அவருடைய சிலை திறப்பு விழா நடக்கின்ற இந்த நேரத்தில், அவரோடு நெருங்கிப் பழகிய என் போன்றோருக்கு ஆயிரத்தெட்டு எண்ணங்கள், நெஞ்சத்திலே அலைமோதுவதுதான் தெரியும்.
அவற்றையெல்லாம் எடுத்து விலக்கிக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. என்னுடைய உடல் நிலை அதற்குத் தகுந்ததாகவும் இல்லை”
இப்படி அண்ணா பேசியதும், மேடையில் வீற்றிருந்தோர் உண்மைநிலை தெரிந்ததால் சங்கடப்பட்டனர் போலும். அண்ணா உடல் நிலை கண்டு மக்கள் மனம் கலங்கினர்.
ஆனால் எதையுமே புரிந்து கொள்ளமுடியாமல், எங்கோ எட்டியிருந்து பார்க்கும் தொண்டன் நிலையிலிருந்த நானும், கூட்டத்தினரைப் போலவே சங்கடத்திற்கு உள்ளானேன் – மனம் சஞ்சலப்பட்டேன்.
அண்ணா மெலிந்து காணப்படுகிறாரே ஏன்? அண்ணா உடம்பிற்கு என்ன? கேன்சர் மீண்டும் விஸ்வரூபமெடுத்து விட்டதா? என்ற கேள்விகள் கூட்டத்தினரிடையே எழுந்து சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணா கலங்காமல் தனது பேச்சைத் தொடர்ந்தார்
“ஆனால் நெஞ்சத்திலே எண்ணி எண்ணி இன்றல்ல – என்றென்றும் நாம் மட்டுமன்று நாட்டு மக்கள் அனைவரும் போற்றிப் பாராட்டத்தக்க தலைசிறந்த தமிழ் மகனாக வாழ்ந்தவர் நம்முடைய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.
அவருடைய சிலையினை உலகத்தமிழ் மாநாட்டு ஊர்வலக் குழுவினர் அமைத்துக் கொடுத்திருப்பது மற்றுமொரு பொருத்தமாகும்.
அவர்கள் உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஓர் ஊர்வலத்தின் மூலம் சிறந்த மதிப்பினைத் தேடிக் கொடுத்தார்கள்.
தலைசிறந்த தமிழ் மகன் கலைவாணர் புகழ் வாழ்க
அதைப்போலவே அவர்கள் ஏற்றுக்கொண்ட இந்தச் சிலையமைப்பின் காரியத்தின் மூலமும் சிறந்த மதிப்பினைத் தேடிக் கொடுத்தார்கள்.
அவர்கள் ஏற்றுக் கொண்ட இந்தச் சிலையமைப்பின் காரியத்தின் மூலமும் அவர்கள் கலைத்துறைக்கு நிரந்தரமான ஓர் ஆக்கப் பணியை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்தக் குழுவினருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றுபோல் என்றென்றும் கலை உலகத்திலேயே உள்ளவர்கள், கலை உலகத்தாலே பயன்பெற்றவர்கள் சீர்திருத்த உலகத்தில் உள்ளவர்கள், சமூகத்தின் தொண்டர்கள் அனைவரும் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் போன்றவர்கள் என்பதில் எனக்கு ஒரு துளி ஐயப்பாடும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு, அவருடைய சிலையினை மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் திறந்து வைக்கிறேன்” என்று அண்ணா தன் சிறப்புரையை முடிக்க அகமகிழ்ந்த கூட்டத்தினரின் கைதட்டல் முடிய நெடுநேரம் ஆனது.
– ம. நடராசனின் ‘நெஞ்சம் சுமக்கும் நினைவுகள்’ நூலிலிருந்து…