டி20 தொடரில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

இந்த ஆட்டத்தில் சதமடித்து அசத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதோடு, இந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகலையும் அவர் படைத்துள்ளார்.

அதில், டி20 கேப்டனாக அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற எய்ன் மோர்கனின் உலக சாதனையை உடைத்துள்ளார்.

ஒரு சர்வதேச டி20 அணியின் கேப்டனாக அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில், 86 சிக்சர்களுடன் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் எய்ன் மோர்கன்ன் முதலிடம் பிடித்து உலக சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

தற்போது 90 சிக்சர்களை பதிவு செய்திருக்கும் ரோகித் சர்மா, மோர்கனின் சாதனையை உடைத்துள்ளார்.

இதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களை பதிவுசெய்த முதல் சர்வதேச வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா.

இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒரு நாட்டிலிருந்து அதிக வயதில் டி20 சதமடிக்கும் முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா பதிவுசெய்துள்ளார்.

இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு 36 வயதில் கிறிஸ் கெய்ல் இங்கிலாந்துக்கு எதிராக டி20 சதத்தை பதிவுசெய்திருந்தார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சதத்துடன் 38 வயதில் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார் ரோகித் சர்மா.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 5-வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்த ரோகித் மற்றும் ரின்கு சிங் கூட்டணி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் அடித்த முதல் இணை என்ற சாதனையை படைத்துள்ளது.

அதேபோல ஒரு டி20 போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பதிவுசெய்த முதல் இந்திய இணை என்ற சாதனையையும் ரோகித்-ரின்கு இருவரும் படைத்துள்ளனர்.

ரோகித் சர்மா தன்னுடைய 5 டி20 சதங்களில் 3 சதத்தை இந்திய அணியின் கேப்டனாக பதிவுசெய்துள்ளார்.

இதன்மூலம் ஒரு டி20 கேப்டன் பதிவுசெய்த அதிக சதங்கள் என்ற பாபர் அசாமின் சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார்.

You might also like