காரசாரமான சமையலைச் சாப்பிட்டு முடித்தபிறகு, மனம் தன்னாலே ‘ஆந்திரா மீல்ஸ்’ நினைவுகளோடு அதனை ஒப்பிட்டுப் பார்க்கும்.
உணவில் தொடங்கி அனைத்து ரசனைகளிலும் கொஞ்சம் சிவப்பு வர்ணம் தூக்கலாக இருப்பது அம்மண்ணுக்கான பாணி என்று கூட வர்ணிக்கலாம்.
அப்படியிருக்க, தெலுங்கில் வெளியாகும் மசாலா படங்களைக் குறித்து தனியாகச் சொல்லவா வேண்டும்.
அப்படிப்பட்ட ரசிக மனங்களுக்காகவே, ‘குண்டூர் காரம்’ எனும் புதிய படத்தைத் தந்திருக்கிறது மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் த்ரிவிக்ரம் கூட்டணி.
மீனாட்சி சவுத்ரி, ஸ்ரீலீலா, ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஈஸ்வரி ராவ் உட்படப் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
சரி, இந்த படம் எந்த அளவுக்குக் காரசாரமான ‘மசாலா சினிமா’வாக உள்ளது?
விரக்தி நிறைந்த நாயகன்!
குண்டூரில் மிளகாய் வியாபாரம் செய்துவரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரமணா (மகேஷ் பாபு). இவரது தந்தை ராயல் சத்யம் (ஜெயராம்), ஒரு கொலை வழக்கில் சிக்கி 15 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
தாய் வசுந்தராவோ (ரம்யா கிருஷ்ணன்) தனது மகனையும் கணவரையும் விட்டுப் பிரிந்து தந்தை வெங்கடசுவாமியோடு (பிரகாஷ் ராஜ்) வசித்து வருகிறார்.
இன்னொரு கணவர், மகன் என்று வாழும் அவர், தந்தையின் வழியில் அரசியலில் இறங்கி அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
அத்தை புஜ்ஜியால் (ஈஸ்வரி ராவ்) வளர்க்கப்படும் ரமணா முரட்டுத்தனம் மிக்கவராக இருக்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து, ரமணாவைப் பார்க்க வேண்டுமென்று வசுந்தரா அழைத்ததாகத் தகவல் வருகிறது.
குண்டூரில் இருந்து ஹைதராபாத் செல்பவருக்குத் தாய் அவரை அழைக்கவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது.
கட்சி அலுவலகத்தில் வைத்து தனது தாத்தாவைச் சந்திக்கும் ரமணா, அந்த இடத்தையே சுக்குநூறாக்கும் வெறியில் இருக்கிறார். அந்த இடத்தில், அம்மா மீதான பாசம் கோபமாக மாறி அவரை அலைக்கழிக்கிறது.
சில நாட்கள் கழித்து, அவரைத் தனது வீட்டுக்கு வரவழைக்கும் வெங்கடசுவாமி, தாய்க்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று எழுதித் தருமாறு ரமணாவிடம் சொல்கிறார்.
அதற்கு ரமணா மறுப்பு தெரிவிக்க, அவர் மீது போலீசில் பொய்யாக வழக்கு ஒன்றை தொடுக்கிறார்.
ஜாமீனில் வெளியே வரும் ரமணா, உண்மையிலேயே அந்த புகாரில் என்னவெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்ததோ அதேபோல வெங்கடசுவாமியின் வீட்டைச் சிதைக்கிறார்.
சத்தம் கேட்டுத் தனது அறையை விட்டு வெளியே வரும் வசுந்தரா, மகனது கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறுகிறார்.
வசுந்தரா வீட்டில் ரமணா கலாட்டா செய்த தகவல் ஊடகங்களில் வெளியாகிறது. கூடவே, அவரது முதல் கணவரும் மகனும் உயிரோடு இருக்கும் விஷயம் செய்திகளில் இடம்பெறுகிறது.
அதன்பிறகு வசுந்தராவின் அரசியல் வாழ்க்கை என்னவானது? அவர் ஏன் தனது கணவரையும் மகனையும் பிரிந்தார்? அதற்குக் காரணமானவர்கள் யார் என்று சொல்கிறது ‘குண்டூர் காரம்’ படத்தின் மீதி.
இந்தக் கதையில், வெங்கடசுவாமியின் ஆதிக்க சாதி மனோபாவம்தான் அடிப்படையாக உள்ளது. ஆனால், அதனைத் திரையில் விவரிக்கத் தயங்கியிருக்கிறார் இயக்குனர்.
சாதாரணமாக, மசாலா படங்களில் எந்த அளவுக்கு ‘கார நெடி’ இருக்குமோ, அதைவிட ஒருபடி ஜாஸ்தி வேண்டுமென்று ‘கமர்ஷியல் அம்சங்களை’ பார்த்து பார்த்து கோர்த்திருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம்.
வன்முறைக்கும் ஆபாசத்திற்கும் அதில் இடம் குறைவு என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.
அதேநேரத்தில், அவரது முந்தைய படமான ‘அலா வைகுண்டபுரம்லோ’வில் இருந்த திரைக்கதை நேர்த்தியும் கனகச்சிதமான பாத்திர வடிவமைப்பும் இதில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
‘மாஸ்’ மகேஷ்பாபு!
மகேஷ்பாபு நடித்த ‘போக்கிரி’, ‘பிசினஸ்மேன்’, ‘தூக்குடு’, ‘மகர்ஷி’ போன்ற படங்களில் அவரது ஆக்ஷன் மட்டுமல்லாமல் அலட்சியம் கலந்த நகைச்சுவை நடிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
‘சரிலேகு நீக்கெவரு’ படத்தில் அது உண்டு என்றபோதும், இந்த படத்தில் ஸ்ரீலீலா, வெண்ணிலா கிஷோர் உடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன.
அவர் உணர்ச்சிவசப்பட்டு கலங்கும் காட்சிகளும் கூட சட்டென்று நம் மனதைத் தொடுகின்றன. அதேநேரத்தில் மகேஷ்பாபு ‘மாஸ்’ காட்டும் காட்சிகளும் இதில் நிறைய.. அந்த இடங்கள் எல்லாம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமேயானவை!
ஒரு துணை பாத்திரம் என்று சொல்லும் அளவுக்கு, இதில் மகேஷ்பாபுவின் அத்தை மகளாக வந்து போகிறார் மீனாட்சி சவுத்ரி. நல்ல வேளையாக. அவரைக் கவர்ச்சி காட்ட வைத்து தெலுங்கு படங்களின் மீதே எரிச்சலை வரவைக்கவில்லை.
மகேஷ்பாபுவின் உயரத்திற்கு ஸ்ரீலீலா எப்படி பொருந்துவார் என்ற கேள்வியோடு தியேட்டருக்குள் நுழைந்தால், தனது வசீகர நடிப்பு மற்றும் நடனம் மூலமாக அந்த கேள்வியையே அவர் துவம்சம் செய்திருக்கிறார்.
எந்த எல்லையில் கவர்ச்சி ஆபாசமாக மாறும் என்று இயக்குனர் த்ரிவிக்ரம் தெரிந்து வைத்திருப்பதால், சரியான விதத்தில் திரையில் தோன்றி ஈர்க்கிறார்.
வெண்ணிலா கிஷோரின் நகைச்சுவை நடிப்பு கிராமம், நகரம் இரண்டிலும் ரசிகர்களை ஈர்க்கும்.
கிட்டத்தட்ட ‘அலா வைகுண்டபுரம்லோ’ தபுவை நினைவூட்டும் பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். ஜெயராமும் அப்படியே.
இருவரது பாத்திரங்களிலும் சிற்சில வித்தியாசங்களைச் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.
அந்த ஜோடியை ‘ஜஸ்ட் லைக் தட்’ அடித்து நொறுக்குகிறது ஈஸ்வரி ராவ் – ரகு பாபு இணை.
நான்கைந்து காட்சிகளில் வந்து போனாலும் காமெடி, செண்டிமெண்ட் இரண்டிலும் கலக்கியிருக்கிறது.
’அலா வைகுண்டபுரம்லோ’ படத்தில் ‘மெயின் வில்லனாக’ வந்த முரளி சர்மாவுக்கு இதில் நாயகியின் தந்தை வேடம்.
ஆனால், அந்த படத்தை நினைவூட்டும்விதமாகவே இதிலும் அவரது பாத்திர வார்ப்பு உள்ளது.
இவர்கள் தவிர்த்து ஜகபதி பாபு, ராவ் ரமேஷ், சுனில், பிரம்மாஜி, அஜய் கோஷ், ரவிஷங்கர், மதுசூதன் ராவ், அஜய் என்று பலர் இதில் வந்து போயிருக்கின்றனர்.
அவர்களது முகங்கள் நினைவுக்கு வரும் அளவுக்கு அக்காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன.
’அடிக்கும் அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா’ என்பது போல தாளக் கருவிகளை உருட்டி விட்டிருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.
பாடல்களைக் கேட்கும் நமது கால்களும் அதற்கேற்ப அசைகின்றன. அதனை விட ஒருபடி மேலாகவே, பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.
ஆனால், கோங்குரா சட்டினியோடு பீட்சாவைச் சேர்த்தது போல ஒரு கமர்ஷியல் படத்தில் ஸ்பானிஷ் பாணி இசை ஆங்காங்கே ஒலிப்பது சிலருக்கு ‘அலர்ஜி’யை தரலாம்.
ஒரு கமர்ஷியல் தெலுங்கு படம் எந்த அளவுக்கு ‘கலர்ஃபுல்’லாக இருக்குமோ, அதற்கேற்ற அளவுக்குத் திரையில் தனது பங்களிப்பு தெரியுமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் கலை இயக்குனர் ஏ.எஸ்.பிரகாஷ்.
மனோஜ் பரமஹம்சாதான் ஒளிப்பதிவாளர் என்றாலும், பாதியளவுக்கு பி.எஸ்.வினோத் கைவண்ணம் இருப்பதையும் கவனித்தாக வேண்டும்.
அவர்களது பங்களிப்பு இயக்குனரின் எண்ணத்திற்கு ‘உரு’ கொடுத்ததோடு நின்றுவிடுகிறது.
பின்பாதியில் விஎஃப்எக்ஸ் ‘மொக்கையாக’ இருப்பதையும், இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒட்டுமொத்தமாகப் படம் பார்க்கும் ஒரு ரசிகருக்குக் கதையில் தெளிவு கிடைக்கவும், ஒரு நதியின் பயணம் போன்ற சீர்மை தென்படவும் கடுமையாக உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நவீன் நூலி.
அவர் பட்ட சிரமமே நம்மைத் தலைவலியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.
நடனம், சண்டைப்பயிற்சி, ஆடை வடிவமைப்பு என்று பல அம்சங்கள் சிறப்பாக உள்ளன. ஆனால், அவற்றைத் தன் கைக்குள் அடக்கிய இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மட்டுமே இதில் தனது லகானைத் தவறவிட்டிருக்கிறார்.
அதனால் கதையும் திரைக்கதை ட்ரீட்மெண்டும் எந்த திசையில் பயணிப்பது என்று தெரியாமல் தடுமாறியிருக்கிறது.
நகைச்சுவையே சிறப்பு!
கதையின் திருப்பங்களை, நகர்வினை உணர்த்தும் வகையில் திரைக்கதை செறிவானதாக அமைய வேண்டும். அது ‘குண்டூர் காரம்’ படத்தில் நிகழவில்லை.
அதேநேரத்தில், பண்டிகை காலத்தில் பொழுதுபோக்காக ஒரு படத்தைப் பார்க்கத் தேவையான அனைத்து தகுதிகளும் இதற்குண்டு.
வாரிசு பட விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு குறிப்பிட்டதைப் போல, ’இதுல பாட்டு, பைட், டான்ஸ், செண்டிமெண்ட், காமெடி, ரொமான்ஸ் என்று எல்லாமே இருக்கு’.
குறிப்பாக மகேஷ்பாபு, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீலீலா காமெடி அட்ராசிட்டி நிச்சயம் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும்.
ஜெயராம், ஈஸ்வரிராவிடம் பேசும் இடங்களில் கூட மகேஷ் பாபுவின் ’அந்த’ பாடிலேங்க்வேஜ் நமக்கு சிரிப்பைக் கடத்துகிறது.
அஜய் கும்பலுடன் மோதும் சண்டைக் காட்சியையும் கூட இந்த வரிசையில் சேர்க்கலாம்.
மிகச்சில இடங்களில் ஆணாதிக்கம் தலை நீட்டியிருக்கிறது. அஜய் கோஷ், மதுசூதனனைத் தேடி வந்து மோதும் ஆக்ஷன் காட்சியில் சில பெண்களைக் களமிறக்கியிருப்பதும், ஸ்ரீலீலாவை மகேஷ்பாபு ‘டீஸிங்’ செய்யும் காட்சிகளும் அதற்கான உதாரணங்கள்.
ரம்யா கிருஷ்ணன் – மகேஷ்பாபு இடையிலான பாசத்தைச் சொல்ல வேண்டிய கதை எங்கெங்கோ அலைபாய்வது மிகப்பெரிய மைனஸ்.
அதேபோல, ரம்யா கிருஷ்ணன் இன்னொரு திருமணம் செய்துகொண்டதற்கு கிளைமேக்ஸில் தரும் விளக்கமும் ‘ஹைதர்’ காலத்தை விடப் பழையதாக உள்ளது.
அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், மகேஷ்பாபு ரசிகர்களுக்கு ஏற்ற ‘தரமான சம்பவமாக’ இந்த ‘குண்டூர் காரம்’ இருக்கும்.
அப்படியென்றால் சாதாரண ரசிகர்கள் இதனைப் பார்க்கலாமா என்று கேட்கிறீர்களா? காரம் உடம்புக்குப் பாதகம் விளைவிக்காது என்று நம்புபவர்கள் தாராளமாக இந்த மிளகாய் நெடிக்குள் மூக்கை நீட்டலாம்.
– உதய் பாடகலிங்கம்