சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலை தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலமாக 18,420 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக மேற்கொள்ளப்பட உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக 6,180 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதேபோல், கோத்ரேஜ் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் திட்டத்திற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. குவால்காம் நிறுவனத்துடன் 177 கோடி ரூபாய் மதிப்பிலும், ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்துடன் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதே போல் தமிழ்நாட்டில் டாடா பவர் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 55 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் உலகத் தொழிலாளர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக ரிலையன்ஸ் அதிபர் அம்பானி கலந்து கொண்ட நிலையில் அந்த நிறுவனம் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்ய உள்ளது.
தற்போதுவரை 1,75,000 லட்சம் கோடி மதிப்பிலான எரிசத்தி துறை சார்ந்த 37 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இதன் வாயிலாக, 12,567 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், ராம்ராஜ் நிறுவனம் ஜவுளித்துறையில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. ஆச்சி மசாலா நிறுவனம் 100 கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமம் 42,768 கோடி முதலீட்டிறகான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘feng tag’ காலணி தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்யவுள்ளது.
இதனிடையே, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய். இந்த முதலீடுகள் மூலம், மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.