மண்ணை மறக்காத நெஞ்சங்கள்!

ஜனவரி 9 – வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்

சொந்த மண்ணை விட்டு வெளியேறி வேறொரு நாட்டில் வாழும் எவருக்கும் தாய்நாடு குறித்த சிந்தனை எப்போதும் மனதோடு ஒட்டியிருக்கும். வாழ்க்கைமுறை, வசதி வாய்ப்புகள், மனப்பாங்கு, குணநலன்கள் என்று பலவற்றில் மாற்றம் ஏற்பட்டாலும், ‘இவர் இந்த நாட்டவர்’ என்ற அடையாளம் எப்போதும் அவரைத் தொடர்ந்து வரும்.

புதிதாகச் சென்ற இடத்தில் அல்லது தலைதலைமுறையாக வாழ்ந்துவரும் சூழலில் கூட அதனைத் தவிர்க்க இயலாது. அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தமது பூர்வீகம் குறித்த பெருமைகளோடுப் புகுந்த நாட்டில் வெற்றிகளைக் குவித்துத் தமது பங்களிப்பை நல்கி வருகின்றனர் பல இந்தியர்கள்.

‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ என்று அவர்களைக் குறிப்பிடுகிறோம். அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே, ஒவ்வொரு ஆண்டும் ’வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

இந்தியப் பெருமிதம்!

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், ‘இந்தியர்’ எனும் அடையாளத்துடன் ஒன்றிணையும் தருணம் மிக மகிழ்ச்சிகரமானதாக அமையும். அதனை அனுபவத்தில் கண்டவர்கள் சிலர்.

அதேநேரத்தில் பயண நூல்கள் வாயிலாகவும், இங்கு சுற்றுலா வரும் பயணிகள் வழியாகவும் அதனை உணர்ந்து கொண்டவர்கள் பலர்.

வெறுமனே நாட்டின் எல்லை, கலாசாரச் செறிவு, வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளைத் தாண்டி நம்மை நாமே அடையாளம் காண்பதாகவும் சில வெளிநாட்டுப் பயணங்கள் அமையும்.

சிறிய கால இடைவெளியிலேயே அப்படியொரு மாற்றம் நேரிடும்போது, பல காலமாக வேற்று மண்ணில் வாழ்பவர்கள் என்ன உணர்வார்கள்? அவர்கள் மனதில் தாய் மண் குறித்த ஏக்கம் எத்தகையதாக இருக்கும்? இதற்குப் பதில் சொல்வது கடினம்.

ஆனால், அவர்களிடம் இந்தியப் பெருமிதம் நிறைந்திருக்கும் என்று நிச்சயம் சொல்ல முடியும். நம் நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், அங்கிருக்கும் இந்திய மக்கள் தரும் வரவேற்பிலிருந்து அதனை அறிய முடியும்.

பிரிவுத் துயரம்!

ஒருவர் தனது மண்ணை விட்டு வேறொரு நாட்டிற்கு இடம்பெயரப் பல காரணங்கள் இருக்கும். துக்கமோ, மகிழ்ச்சியோ அதன் பின்னால் எது இருந்தாலும், தாங்கள் வாழ்ந்த இடத்தை மீண்டும் பார்க்கும் ஏக்கம் மட்டும் பொதுவானதாக அமையும்.

அந்த பிரிவுத் துயரத்தை எதனாலும் ஈடு செய்ய முடியாது. அதனாலேயே, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து செல்லும் வழக்கமும் தொடர்கிறது.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தென்னாப்பிரிக்கா, மியான்மர், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மட்டுமல்லாமல், இன்று உலகம் முழுக்க இந்தியர்கள் நிறைந்திருக்கின்றனர்.

அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட், கனடா, குவைத், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா என்று அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் நாடுகளின் பட்டியல் மிகப்பெரியது.

வேலைவாய்ப்பு, தொழில், கலாசார மற்றும் கலை வாய்ப்புகளுக்காக அவர்களது இடம்பெயர்வு பெரும்பாலும் அமைந்திருக்கும். இன்னொரு இடத்திற்குச் சென்றாலும், குடிமக்களாக அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.

முதுமை உள்ளிட்டவற்றால் அவதிப்படும்போதோ அல்லது தாய்நாடு திரும்பும் விருப்பம் மேலிடும்போதோ, அவர்கள் மீண்டும் இந்தியாவில் வாழ்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. போலவே, அங்கிருந்துகொண்டே இங்கு தொழில் முதலீடுகளில் ஈடுபடுவதையும் ஊக்குவித்து வருகிறது.

அதேநேரத்தில், ’வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற இந்தியர்’ எனும் கலாசாரப் பெருமிதத்தையும் கவுரவிக்கிறது. அதன் ஒருபகுதியாகவே, ஆண்டுதோறும் ஜனவரி 9-ம் தேதியன்று ‘வெளிநாடு வாழ் இந்தியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பையும் சாதனைகளையும் போற்றுவதே இதன் நோக்கமாக உள்ளது. உலகளவில் இந்தியாவைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கிறது.

நம் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட ஒருவர் வேறொரு நாட்டில் புகழோடு வாழ்கிறார் என்று பெருமைப்படுவதற்கு ஏதுவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, உலகம் முழுவதும் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் இத்தினமானது வெளியுறவுத்துறை மூலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெளிநாடு வாழ் இந்தியர்களின் சாதனைகளைப் பாராட்டி விருதுகளையும் வழங்கி வருகிறது.

மறவாத நெஞ்சங்கள்!

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்த மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளாகவும் இந்த தினம் விளங்குகிறது.

பூமிப்பந்தின் அளவு தொழில்நுட்ப வீச்சால் நாளும் சுருங்கிவரும் சூழலில் மனிதர்களின் இடம்பெயர்வு தவிர்க்கமுடியாததாக உள்ளது.

அவற்றில் இருந்து விடுவித்து கொண்டாட்ட மனநிலைக்கு ஆட்படுத்தும் ‘வெளிநாடுவாழ் இந்தியர் தினம்’, எதிர்காலத்தில் பல நல்மாற்றங்களுக்கு வித்திடட்டும்!

வேர்களை மறந்துவிடாத விருட்சங்கள் மட்டுமே தொடர்ந்து இப்பூமியில் தழைக்கும்.

அந்த வகையில், வெளிநாடுகளில் வாழ்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அவர்களது நெஞ்சங்களில் தாய் மண் குறித்த உணர்வெழுச்சியும் பூரிப்பும் ஏக்கமும் எப்போதும் தொடர்ந்து நிற்கும்.

– உதய் பாடகலிங்கம்

You might also like