பல்வேறு மாநிலங்களிலும், தேசிய அளவிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட ஒரு கருவியாக இருந்தவர் அயோத்தி ராமர்.
அந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி பிரபஞ்சமே பிரமிக்கும் வகையில் நடைபெற உள்ளது.
சர்ச்சைக்குள்ளான இதன் அண்மைக்கால நிகழ்வுகளை, மீண்டும் கிளராமல், இதிகாசங்கள் சொல்லும், தொன்மை வரலாற்றை சுருங்க காண்போம்.
தசரதன் மகன்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கோசல நாட்டின் தலைநகரமாக இருந்தது, அயோத்தி. கோசல தேசத்தின் முதல் மன்னர் இகஷ்வாகு. இவர்தான் சூர்ய வம்சத்தை நிறுவியதாக புராணங்கள் சொல்கின்றன.
கோசலம் அப்போது பரந்து பட்ட தேசம். இப்போதைய உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி செழித்திருந்தது.
கோசல நாட்டு சக்கரவர்த்தியாக இருந்த தசரதன் மகன் தான் ராமன். ராமபிரான், விஷ்ணு பகவானின் அவதாரம்.
அதர்மங்களை ஒழித்து அறத்தை நிலை நாட்ட, சூர்யவம்சத்தில் உதயமானவர்.
வில் ஒடித்து சீதையை மணம் முடித்தது – வனவாசம் சென்று சிரமங்கள் கண்டது – அரக்கன் ராவணனுக்கு முடிவு கட்டி மீண்டும் நாடு திரும்பி முடி சூட்டிக்கொண்டது என நமக்கெல்லாம் சினிமாக்களும், புத்தகங்களும் ராமரை நிறையவே அறிமுகம் செய்துள்ளன.
இதிகாசமல்லாத, நிகழ்கால நிகழ்வுகளை இப்போது நினைவு கூறுவோம்.
500 ஆண்டு கால போராட்டம்
இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடம் குறித்த பிரச்சினை 15 ஆம் நூற்றாண்டு முதலே இருந்து வந்தது.
மன்னர்கள் காலத்தில் ஆரம்பமான ஆயுத யுத்தம், தேசம் விடுதலை அடைந்த பின்னர் நீதிமன்றங்களில் சட்டப்போராக உருமாறியது.
இடையிடையே பலப்பல போராட்டங்கள், கலவரங்கள், மோதல்கள் என பல்லாண்டுகள் உருண்டன.
சர்ச்சைக்குள்ளான இடம் குறித்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது.
‘ராமருக்கு கோயில் அமைக்கலாம்’ என்பதே தீர்ப்பு.
ராமர் கோயிலை உயிர்ப்பிக்க ஐந்து நூற்றாண்டுகள் தேவைப்பட்டது.
‘சர்ச்சைக்குள்ளான இடத்தில் ராமர் கோயில் கட்டலாம்’ என தீர்ப்பு வழங்கப்பட்டதும், கோயில் கட்டுமானப் பணிகள் வேகமெடுத்தன.
அடிக்கல் நாட்டிய மோடி
அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் புனித பணியை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டது.
2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி பிரதமர் மோடி, கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
70 ஏக்கர் பரப்பில், 2 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட கோயில் பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது.
70 ஏக்கரில் முக்கால் வாசி நிலப்பரப்பு பசுமையாகவே இருக்கும். எஞ்சிய கால்வாசி இடத்தில்தான் கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளத்துடன் சேர்த்து 3 தளங்கள் என திட்டமிடப்பட்டு, தரை தளமும், முதல் தளமும் ரெடியாகி விட்டது.
எனவே வரும் 22-ம் தேதி கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அன்று, தரைத்தளத்தில் உள்ள கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மைசூரு சிற்பி வடித்த சிலை
கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்ய 3 சிற்பிகள் குழந்தை ராமர் சிலையை வடிவமைத்தனர்.
அதில் 5 வயதான குழந்தை ராமர் சிலையை கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்தனர்.
அந்த சிலையை வடித்தவர், கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் ஆவார்.
ராமரின் குழந்தைப் பருவம், குறும்புத்தனம், அவரது கம்பீரத்தை சித்தரிக்கும் வகையில் இந்த சிலை உள்ளது.
சிற்பி அருண் யோகிராஜ், எம்பிஏ படித்தவர். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த அவர், சிற்ப கலை மீதான ஆர்வத்தால், வேலையை விட்டு, சிற்பங்களை வடிவமைத்து வருகிறார்.
இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்களை செதுக்கியுள்ளார். ராமர் கோயிலில் வைக்கப்படும் சிலையை வடிவமைத்ததன் மூலம் ஒரே நாளில் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஏன் 22 ஆம் தேதி?
ராமர் கோயில் திறப்பு விழாவை 22-ம் தேதி நடத்துவதற்கு ஏன் தீர்மானித்தார்கள் தெரியுமா?
அன்று சுபமுகூர்த்த நாள். இந்த நாளில் சர்வார்த்த சித்தி, அம்ரித் சித்தி, ரவி என மூன்று யோகங்கள் ஒரு சேர வருகின்றன.
3 யோகங்களும் ஒருங்கே வரும் நாள், எந்த ஒரு சுபகாரியத்தையும் செய்வதற்கு மங்களகரமான தினமாக கருதப்படுகிறது.
இந்த நாளில்தான் விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பாற்கடலைக் கடைவதற்கு உதவினார்.
விஷ்ணுவின் அவதாரம் ராமர் என்பதால், இந்த நல்லநாள், அவரது கோயில் திறப்பு விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
ராவணனை வதம் செய்த ராமர் வனவாசத்துக்கு விடை கொடுத்து விட்டு சீதையுடன் அயோத்தி திரும்பியபோது, வீடுகள் தோறும் விளக்கேற்றி மக்கள் கொண்டாடினர்.
இந்த நாளையே வட இந்தியாவில் தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
இப்போது ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நாளை, இன்னொரு தீபாவளியாக கொண்டாட உள்ளனர் அயோத்தி மக்கள்.
2 ஆயிரம் அடி ஆழத்தில் பெட்டகம்
ராமர் கோயில் குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் பொருட்டு, கோயில் வளாகத்தில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் ‘காலப்பெட்டகம்’ வைக்கப்படுகிறது.
பெட்டகத்தில், ராமர் கதை, கோயில் கட்டுமானம் குறித்த தகவல்கள் அடங்கிய சரித்திரத்தை செம்பு பட்டயத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதி உள்ளனர்.
கோயிலுக்கு வெளியே பன்னீராய் பெருக்கெடுத்து ஓடும் சரயு நதிக்கரையில், ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்களில் படித்துரைகள் கட்டப்பட்ட்டுள்ளன.
கோயில் கட்டுவதற்கு முன்பாக ஆண்டுக்கு ஒரு சில லட்சம் பக்தர்கள் அயோத்தி வந்து சென்றனர்.
கோயில் கட்டுமானப் பணி ஆரம்பானதும், 2022-ம் ஆண்டு 2 கோடியே 39 லட்சம் பேர் வந்தார்கள்.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சமாக உயர்ந்தது.
கோயில் திறப்புக்கு பின் ஆண்டுதோறும் 5கோடியே 50 லட்சம் பேர் வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது நாள் தோறும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் ராமபிரானை தரிசனம் செய்வார்கள்.
விழாவும் கொண்டாட்டமும் 22-ம் தேதி தேதிதான் என்றாலும், இப்போதே நாட்டின் அனைத்து சாலைகளும் அயோத்தி நோக்கி நகர ஆரம்பித்து விட்டன.
– பி.எம்.எம்.