உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்துள்ளது.
அன்று நண்பகல் 12.45 மணிக்கு கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது.
அழைப்பிதழ் வழங்கும் பணியை தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்து வருகிறது.
சென்னை கோபாலபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கும்பாபிஷேக அழைப்பிதழை கொடுத்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நேரில் வழங்கினர்.
அதன்பின், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், ஆளுநர் மாளிகைக்குச் சென்று, கும்பாபிஷேக விழா அழைப்பிதழை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அளித்தனர்.
அயோத்தி ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் அழைப்பிதழை வழங்கினர்.
அழைப்பிதழை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், குடும்பத்துடன் விழாவுக்கு வருவதாகவும், விழாவில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி