இயக்குநர் மகேந்திரன், தனது ஆரம்ப காலத்தில் சினிமாக் கனவுகள் எதுவும் இல்லாமல் இருந்தவர்.
அவருக்குள் இருந்த கலைஞனை கண்டுபிடித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான்.
‘தமிழ் சினிமாவில் என்னை விதைத்தவர் – உரமிட்டு, நீரூற்றி வளர்த்தவர், மக்கள் திலகம்’ என பல சந்தர்ப்பங்களில் மகேந்திரன் மெய்சிலிர்த்துள்ளார்.
அவர் இயக்கிய முதல் படம் ‘முள்ளும் மலரும்’.
1978-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை 1980-ம் ஆண்டுதான் எம்.ஜி.ஆரால் பார்க்க முடிந்தது.
படம் ரிலீஸ் ஆனபோது முதலமைச்சராக இருந்த அவருக்கு, அப்போது படத்தைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.
1980-ம் ஆண்டு அதிமுக ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், நடிகர் சங்க தியேட்டரில் எம்.ஜி.ஆருக்கு படம் பிரத்யேகமாக போட்டுக்காட்டப்பட்டது.
’முள்ளும் மலரும்’ படம் பார்த்துவிட்டு, மகேந்திரனிடம் எம்.ஜி.ஆர். உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வார்த்தைகள் இவை:
“எனக்கு பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை மகேந்திரன். முள்ளும் மலரும் சினிமா மூலமாக தமிழ்த் திரை உலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
என்னைப் போன்றவர்கள் ஆசைப்பட்டாலும் செய்ய முடியாத சாதனைகளை செய்துள்ளீர்கள்.
பத்திரிகைகள் பாராட்டியதை அறிவேன். அது இருக்கட்டும். இப்போது நான் சொல்கிறேன்.
சினிமா ஒரு விஷுவல் மீடியா என்பதை இந்தப் படத்தின் மூலம் நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி சொல்லி, மகத்தான வெற்றியும் அடைந்துள்ளீர்கள்.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்னர், என் முன்னிலையில் ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று பேசினீர்கள். அதனை செயல் மூலம் இன்றைக்கு நீங்கள் நிரூபித்து காட்டியுள்ளீர்கள்.
திரைப்படங்களில் ‘டூயட்’ பாடுவது அபத்தம் என அன்றைக்கு அந்த விழாவில் சொன்னீர்கள். இன்று, அந்த அபத்தம் இல்லாமல் சினிமா எடுத்து வெற்றி அடைந்திருக்கிறீர்கள்.
ரஜினிகாந்த் முதல் அத்தனை நடிகர்களையும் யதார்த்தமாக நடிக்க வைத்து, அதுவும் குறைவான வசனங்கள் பேச வைத்து, அற்புதமாக படத்தை உருவாக்கி என்னை கலங்கடித்து விட்டீர்கள்.
இதற்கு முன்னால் அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளியான படங்கள் எல்லாம், நாடகத்தனமாக இருந்தன.
‘முள்ளும் மலரும்’ படம், பழைய பாணி படங்களில் இருந்து முழுக்க முழுக்க விலகி நிஜத்தில் உயர்ந்து நிற்கிறது.
படத்தின் ’கிளைமாக்ஸ்’ காட்சி, தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல், இந்திய சினிமாவுக்கே புதுசு.
தனக்குப் பிடிக்காத எஞ்சினியருக்கு தனது தங்கையை கைப்பிடித்து கொடுத்த பிறகும், ’இப்பக்கூட எனக்கு ஒங்களை பிடிக்கலே சார்… ஆனா என் தங்கச்சிக்கு ஒங்களை பிடிச்சிருக்கு‘ என சரத்பாபுவிடம், ரஜினி சொல்லும்போது எனக்கே எழுந்து நின்று கைத்தட்டத் தோன்றியது.
ரஜினி, மிக யதார்த்தமாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை அவருக்கு பெற்றுக் கொடுக்கும்.
படத்தில் ரஜினி நடிக்கிறபோதெல்லாம் உங்களை பார்க்கிற நினைப்பே அடிக்கடி வந்தது.
‘அனாதைகள்’ நாடக ஒத்திகையின் போது, நீங்கள் வசனத்தை நடித்து காட்டுவீர்கள் அல்லவா?
அப்போது உங்களிடம் நான் பார்த்த அதே முகபாவம், அப்படியே ரஜினியிடம் இருந்தது.
படத்தில் நடித்த அனைவருமே, யதார்த்தமாக நடித்திருந்தார்கள்’’ என ‘முள்ளும் மலரும்’ படம் பார்த்துவிட்டு, மகேந்திரனிடம் எம்.ஜி.ஆர். மனம் திறந்து பாராட்டினார்.
’தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனான எம்.ஜி.ஆர். ’முள்ளும் மலரும்’ படத்தை பாராட்டியது, எனக்கு கிட்டிய உன்னத அனுபவம்’ என மகேந்திரன் உருகினார்.
– பாப்பாங்குளம் பாரதி.