விஜயகாந்த் படங்களில் ரசிகர்களை ஈர்த்த அம்சங்கள் – பகுதி 2
திரையில் ரசிகர்களை விஜயகாந்த் தனது ரசிகர்களை வசீகரம் செய்ததற்குப் பல காரணிகள் உண்டு.
வெறுமனே கதை, கதாபாத்திரம், படம் குறித்த விளம்பரப் பணிகள் மற்றும் வியாபாரத்தில் காட்டிய அக்கறை மட்டுமே சார்ந்து அவர் இயங்கவில்லை.
அதையும் தாண்டி, நேரடியாக ரசிகர்களின் மனங்களைச் சென்றடையும் பணியைத் தன்னையும் அறியாமல் மேற்கொண்டார் விஜயகாந்த்.
அது அவரது படங்களின் உள்ளடக்கத்திலும், அவரது பொதுவெளிச் செயல்பாடுகளிலும், அவரைக் குறித்த செய்திகளிலும் தொடர்ந்து மேலெழுந்தவாறே இருந்தது.
கிராமத்து நாயகன்!
மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார் உள்ளிட்ட சில படங்களில் எம்ஜிஆர் ரசிகராகத் திரையில் தோன்றியிருக்கிறார் விஜயகாந்த்.
ஈட்டி, கரிமேடு கரிவாயன் படங்களில் எளிய மனிதர்களுக்காகப் போராடுபவராக நடித்தார்.
நினைவே ஒரு சங்கீதம், தெக்கத்திக் கள்ளன், உழவன் மகன், பூந்தோட்டக் காவல்காரன், செந்தூரப்பூவே, பாட்டுக்கு ஒரு தலைவன் போன்ற படங்களில் கிராமத்து நாயகனாக வந்திருப்பார்.
அதில் உச்சம் தொட்ட படம், ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘சின்னக்கவுண்டர்’.
அதன்பிறகு அதே பாணியில் கோயில்காளை, எங்க முதலாளி, என் ஆசை மச்சான், சக்கரை தேவன், செந்தூரப்பாண்டி, பெரிய மருது, வீரம் வெளஞ்ச மண்ணு, பெரியண்ணா, கண்ணுபடப் போகுதய்யா உட்படப் பல படங்கள் வெளியாகின.
2000-வது ஆண்டுக்குப் பிறகு வெளியான ‘சொக்கத்தங்கம்’, ‘நெறஞ்ச மனசு’ படங்கள் பெரிய வெற்றியை ஈட்டாவிட்டாலும், கிராமிய ரசிகர்களை ஈர்த்தன.
மேற்சொன்ன அத்தனை படங்களும் தமிழகக் கிராமங்களில் சாதி, மத வேறுபாடின்றி விஜயகாந்தின் ரசிகர்களைத் திரளச் செய்தன. அவர்களில் சரிபாதிப்பேர் பெண்கள் என்பதுதான் சிறப்பம்சம்.
கிராமத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பில்லா அன்புதான், அன்றைய காலகட்டத்தில் பி, சி செண்டர்களில் விஜயகாந்தை ‘கிங்’ ஆக உலா வரச் செய்தது.
அப்போது, அவர் உருவாக்கிய பந்தமே ‘வானத்தைபோல’ போன்ற படங்களைப் பார்த்து அந்த ரசிகர்களைக் கண்ணீரில் மூழ்கச் செய்தது.
அவரது படங்கள் மட்டுமல்லாமல், பொதுவெளியில் அவர் செய்த நல உதவிகளும் கூட அதற்கொரு காரணமாக இருக்கலாம்.
விழாக்களில், வெளியிடங்களில் விஜயகாந்த் வெள்ளை வேட்டி சட்டையுடன் மட்டுமே தோன்றியதும் கூட, அவர்களது பிரதிநிதியாகத் தன்னை வெளிக்காட்டத்தானா என்று யோசித்திருக்கிறேன்.
ஆனால், இயல்பாக அல்லாமல் போலியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது எல்லா காலத்திலும் இயலாது என்பது அதன் தொடர்ச்சியாக மனதுக்குள் வந்து போகும்.
பெண்களுக்குப் பிடித்தமானவை!
தொடர்ந்து ஒரேமாதிரியான பழி வாங்கும் கதைகளில் இருந்து விடுபட, ’டௌரி கல்யாணம்’, ‘நூறாவது நாள்’ என்று பிற நாயகர்களின் படங்களில் சிறு பாத்திரங்களில் தோன்றினார்.
அப்போதுதான் தேவதாஸ் போன்றதொரு பாத்திரத்தில், ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்தார் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.
மீண்டும் ‘அம்மன் கோயில் கிழக்காலே’ படம் வழியாகப் பெண்கள் கொண்டாடும் வெற்றியைக் கொடுத்தார். இந்த வரிசையில் வசந்தராகம், தழுவாத கைகள், நினைவே ஒரு சங்கீதம் படங்களையும் சேர்க்கலாம்.
பாலு ஆனந்த் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் விஜயகாந்தின் நகைச்சுவை நடிப்பைக் காண முடியும்.
பூ மழை பொழியுது, பூந்தோட்டக் காவல்காரன், செந்தூரப்பூவே போன்ற படங்களில் பெண்கள் கூட்டத்தை ஈர்த்தவர்,
மனோபாலாவின் ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ படம் வழியே தியேட்டர்களில் திருவிழாக் கூட்டமெனப் பெண்கள் திரள வைத்தார்.
பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன் படங்களும் கூட இப்பட்டியலில் சேரும்.
குடும்ப செண்டிமெண்ட், அளவாக ரொமான்ஸ், வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் காமெடியோடு விஜயகாந்தின் ‘ட்ரேட்மார்க்’ சண்டைக்காட்சிகளும் இவற்றில் இருந்தன.
2000-ல் ஒரு இடைவெளிக்குப் பிறகு, ‘வானத்தை போல’ எனும் மாபெரும் ப்ளாக்பஸ்டரில் விஜயகாந்த் தோன்றியபோதும் இந்த பார்முலாவே உதவிகரமாக இருந்தது.
திரை வானில் துருவ நட்சத்திரம்!
விஜயகாந்தைப் போல புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்த முன்னணி நாயகர்கள் எவருமில்லை. தொடர்ந்து புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு தந்தவர்கள் கூட, ஒருகட்டத்தில் ‘ரிஸ்க்’கை கருத்தில் கொண்டு மெல்லப் பின்வாங்குவார்கள்.
‘ஓரிரு படங்கள் முடித்தபிறகு வாங்க’ என்று சொல்லித் திருப்பி அனுப்புவார்கள்.
ஆனால், தனக்கு ஒரு கதை பிடித்துவிட்டால் தயக்கமேதுமில்லாமல் கால்ஷீட் கொடுக்கும் குணம் விஜயகாந்திடம் இருந்தது.
அதனாலேயே, 54 அறிமுக இயக்குனர்களின் படங்களில் அவர் நடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யத்தைத் தரவில்லை.
விஜயகாந்த் நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் வரை படங்களின் தேர்வில் கவனம் செலுத்தியது மறைந்த அவரது நண்பர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தான்.
இருவருக்குமான நட்பு எப்படிப்பட்டது என்பதற்கான உதாரணத்தைச் சித்ரா லட்சுமணனைன் ‘டூரிங் டாக்கீஸ்’ யூடியூப் தளத்துக்கு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தந்த பேட்டியில் கண்டேன்.
புலன் விசாரணை படத்தின் கதையை ஆர்.கே.செல்வமணி முதன்முறையாக விஜயகாந்த் சொல்லச் சென்றிருக்கிறார்.
கதை சொல்லி முடித்ததும், அது நன்றாக இல்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். இப்ராஹிம் முன்பாகவும் அத்தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.
அவர் சொன்னபிறகும், ‘இந்த கதை ஓகேதான்’ என்று ஆர்.கே.செல்வமணியிடம் கூறினாராம் இப்ராஹிம். உடனே, அவரிடம் சண்டையிட்டிருக்கிறார் விஜயகாந்த். இருவரும் பேசி ஓய்ந்ததும், ‘நான் சொன்னதை விட்டுடு.
இவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்’ என்று நண்பனைக் கைகாட்டி செல்வமணியிடம் பேசியிருக்கிறார் விஜயகாந்த். அந்த நொடியில், நண்பன் மீது அவர் வைத்திருந்த அளப்பரிய நம்பிக்கையைக் கண்டு தான் வியந்ததாக, அப்பேட்டியில் ஆர்.கே.செல்வமணி சொல்லியிருப்பார்.
இந்த நட்பினை, கள்ளமில்லாப் பழகும் பாங்கினைத் தான் சார்ந்த அத்தனை பேரிடமும் வெளிக்காட்டியிருக்கிறார் விஜயகாந்த்.
சிறு வயதில் அருப்புக்கோட்டை, விக்கிரமசிங்கபுரம், மதுரை என்று பல இடங்களில் உள்ள பள்ளிகளில் படித்திருக்கிறார்.
நாயகனாக நடித்து உயர்பீடத்தை அடைந்தபிறகும் கூட, பள்ளிக்காலத்தில் பழகிய பலரோடு நட்பு பாராட்டியிருக்கிறார்.
திரைத்துறையில் அவருக்கு நட்பு பெரிதென்றபோதும் ராதாரவி, வாகை சந்திரசேகர், தியாகு, பாண்டியன், எஸ்.எஸ்.சந்திரன் என்று பலர் அவரது நெருங்கிய வட்டத்தில் இருந்தனர்.
விஜயகாந்த் குறித்து அவர்களது பேச்சுகள் இன்றும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாகவே உள்ளன.
நடிகர் சங்கக் கடனை அடைப்பதற்காக மலேசியா, சிங்கப்பூரில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளின்போது, தான் ஒரு புகழ்பெற்ற நடிகர் என்பதையும் மறந்து விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவராக அவர் நின்றது அதில் சம்பந்தப்பட்ட பலரது நெஞ்சங்களில் இன்றும் நிறைந்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல், நடிகர் சங்கம் சார்ந்து அவர் செயல்பட்ட விதம் பல நடிகர், நடிகைகள் அவரது நினைவை என்றென்றும் போற்றும் வகையிலானது.
அதுவே, அவரது மறைவின்போது கணக்கில்லாமல் கலைஞர்களைத் திரளச் செய்தது.
கேமிராவுக்கு முன்னும் பின்னும் விஜயகாந்த் நடந்துகொண்ட விதமே இன்றும் என்றும் அவரையும அவரது படங்களையும் கொண்டாடுவதற்குக் காரணமாக இருக்கும்.
திரைத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி, தனது பங்களிப்பின் மதிப்பினைக் கணக்கிட்டுக் கொண்டிராமல் செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்தியவர் விஜயகாந்த். சுருக்கமாகச் சொன்னால், அந்தந்த கணங்களில் அதற்கேற்றவாறு வாழ்ந்தவர்.
அப்போதும், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டிருந்தவர். அதுவே, அவரையும் அறியாமல் அவர் நடித்த படங்களில் கலந்திருக்கிறது.
அவரது படங்களை எப்போதும் ரசிப்பேன் என்பர்களுக்கு அந்த அம்சங்களைத் தேடிக் கொண்டிராமல் அவற்றை ரசிப்பதில்தான் ஆனந்தம்!
– உதய் பாடகலிங்கம்