பேரரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி பீடத்தில் ஏறியதும் அமைச்சர்களின் பட்டியலை தயாரிக்க, அந்தப் பட்டியலில் எம்.ஜி.ஆர். பெயர் இடம்பெற்றிருந்தது.
ஆனால், எம்.ஜி.ஆரோ அந்தப் பட்டியலில் இருந்து “எனது பெயரை எடுத்து விடுங்கள். எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
அதற்கான காரணத்தையும் அப்போது அவர் சொல்லியுள்ளார்.
“நான் நடிப்பு துறையில் இருக்கிறேன். மக்களை நம் பக்கம் வைக்க திரையுலகம் ஒரு சாதனை ஏடு. அதை மக்களுக்காக நான் பயன்படுத்த வேண்டும். அதனால் கட்சிக்காக உழைத்தவர்கள், நம்மோடு கட்சியில் இருப்பவர்களுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
அண்ணா கொடுத்த பதவியை மறுப்பது. அண்ணாவை மதிக்காதுப்போல் ஆகும் என்று கட்சியில் உள்ள ஒரு சிலர் குறை கூறியுள்ளனர். ஆனால், இதை அறிந்த பேரறிஞர் அண்ணா சொன்ன விளக்கம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
“எத்தனையோ பேர்கள் பதவிக்காக போட்டிப் போடுவார்கள். பதவி தரவில்லை என்பதற்காக கட்சித் தாவுவார்கள். பதவிக்காகப் பகையாளியாக மாறுபவர்கள் உண்டு. ஏன், பதவிக்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பவர்கள் உண்டு.
இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் உலகில், பதவி வேண்டாம் என்று உதறித் தள்ளுவது எம்ஜிஆரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
அவரால் பெற்ற ஆட்சி இது. அதற்காக தனது கொள்கையே தர்மம் செய்துள்ளார். கட்சிக்காக தனது உழைப்பை தர்மம் செய்துள்ளார். கட்சியில் உழைத்தவர்களுக்காக தனது பதவியை தர்மம் செய்துள்ளார். இப்படியும் தர்மம் செய்யலாம் என்பதை கற்றுத் தந்துள்ளார்.
தம்பி ராமச்சந்திரன் மக்கள் மனதில் மகாராஜா. திரையுலகுக்கு சக்கரவர்த்தி. அதனால் மந்திரி பதவி அவருக்கு பெரிய விஷயமல்ல. தம்பி எப்போதும் மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக இருக்கட்டும்” என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
அண்ணாவுக்கு எப்போதும் எம்ஜிஆர் வீட்டு சாப்பாடு பிடிக்கும். அண்ணா பலமுறை எம்ஜிஆருடன் அவரது வீட்டில் உணவு உண்டு உள்ளார்.
ஒரு நாள் அப்படி உணவு உண்ணும் போது, எம்ஜிஆரும் அண்ணாவும் சில பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். இறுதியாக அண்ணா அவர்கள் எம்ஜிஆர் பற்றி சொன்னது, மறக்க முடியாத வார்த்தைகளாகும்.
“தம்பி உன் பேர்லே பலர் குறை சொன்னார்கள். நீ ஆட்சி, அரசியல் விவகாரங்களில் கலந்து கொள்வதில்லை. எப்பவும் நடிப்பிலே இருக்கிற. சட்டசபை கூட்டத்துக்குக் கூட வர்றதில்லைன்னு சொன்னாங்க.
அவங்களுக்கு தெரியாது. நீ தினமும் மேக்கப் போடுறது கட்சிக்காகத்தான். ஆயிரம் மேடையிலே நாங்கெல்லாம் சொல்ல முடியாததை நீ ஒரு படத்திலே, ஒரு காட்சியிலே, ஒரே வார்த்தையில் சொல்லிட்ற.
நீ ராமச்சந்திரன். வானத்துக்கு சந்திரன் எட்டியிருந்து ஒளி கொடுக்கும், அதுபோலத்தான் நீயும். மற்றவங்களுக்கு நீ கைவிளக்கு. கிட்டேயிருந்து ஒளி கொடுப்பவன். உறுதியோடு இருப்பதால் சில பிரச்சினைகளும் தடங்களும் வரத்தான் செய்யும்.
எதையும் நீ மற்றவங்களுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் குறையை ஒரு பொருட்டா நினைக்ககூடாது” என்றாரம் பேரறிஞர் அண்ணா.
– நன்றி: முகநூல் பதிவு