இசைஞானி & ஃபாசில் என்ற மெகா கூட்டணியில் விஜய் கதாநாயகனாக நடித்த படம் காதலுக்கு மரியாதை.
இதற்கு முன் இசைஞானி இசையில் நான் சிகப்பு மனிதன், இது எங்கள் நீதி படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 1995ல் வெளிவந்த சந்திரலேகா படத்தில் கதாநாயகனாகவும் விஜய் நடித்திருந்தார்.
ஆரம்பம் முதல் தேவா இசையில் அவருடைய படங்கள் வரிசையாக வெளிவந்து கொண்டிருந்த சமயம் முக்கிய படமாக மக்களிடம் அவரை அடையாளம் காட்டியது பூவே உனக்காக.
அது வரை ஒரு சராசரியான பாதையில் சென்று கொண்டிருந்த விஜய் என்ற நடிகரின் அந்தஸ்தை சூப்பர் டூப்பராக அனைத்து டீன்ஏஜ் பருவத்தினரிடமும் கொண்டு போய் சேர்த்தது காதலுக்கு மரியாதை.
ஃபாசிலின் இயக்கத்தில் குஞ்சாக்கோ, ஷாலினி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘அணியதிப்ரவு’ படத்தின் ரீமேக் தான் இந்த காதலுக்கு மரியாதை.
முதன் முதலில் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க அணுகியது அன்றைய கால கட்டத்தின் சாக்லெட் பாயான நடிகர் அப்பாஸை தான். அப்பாஸின் மேனேஜர் சரிவர கால்ஷீட் செட்யூலில் பராமரிப்பு செய்யாமல் சொதப்பி விட அந்த வாய்ப்பு விஜய்க்கு சென்றடைந்தது.
வழிப் போக்கர்கள் போல ஜீவா தன் நண்பர்களுடன் உலாவும் நேரத்தில் ஒரு சூழலில் மினியுடன் ஆரம்பித்த கண்களின் வார்த்தைகள் பின் இதய வாசல் திறந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்து கல்யாணத்திற்காக வீட்டை விட்டு ஓடி, ஒரு சூழலில் காதலை விட குடும்ப உறவுகளின் அன்பே பெரிது என மீண்டும் விலகி இறுதியில் யாருக்காக பிரிந்தனரோ அந்த குடும்ப உறவுகளே கூடி நின்று இருவரையும் இணைக்கும் கதை தான் இந்தப் படத்தின் கரு.
தமிழ் சினிமாவில் வெளியான காதல் காவியங்களில் இன்று வரை காதலுக்கு மரியாதை படத்திற்கு தனி இடம் உண்டு.
குடும்பத்தில் பிறந்த பெண் தேவதையை போற்றுதல் (இது சங்கீத திரு நாளோ), கூடிக் கொண்டாடும் குடும்ப பாசம் (ஆனந்த குயிலின் பாட்டு), சந்தித்த பெண்ணின் காதலுக்கு ஏங்கும் மனம் (என்னை தாலாட்ட வருவாளா), பட்டாம்பூச்சியாய் பாடிப் பறக்கும் பரவசம் (ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே),
காதலியை வர்ணிக்கும் அழகு (ஓ பேபி பேபி, என் காதல்), கல்யாண வீட்டின் குதூகலத்தை அள்ளித் தெளிக்கும் ஆரவாரம் (ஐயா ஊடு திறந்து தான் கெடக்கு) என அறுசுவையில் இசைஞானியின் இசைக்கு ஏற்ப தமது வரிகளால் பாடல்கள் எழுதிக் கேட்போரை போதை கொண்டு பரவசத்தில் திளைக்க வைத்திருப்பார் கவிஞர் பழநிபாரதி.
“நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்…
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்…
அப்பப்பப்பா….. ஏத்தனை சிலாகிப்பும் எத்தனை சுவையும் கூடிய வரிகள்…
இந்தப் பாடலை பொறுத்தவரை அனைவரின் சந்தேகத்திற்கு ஏற்ப புரியாத புதிராகிப் போனது என்னவென்றால், மெட்டமைத்த பின்னர் இந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டதா இல்லை சிச்சுவேசன் சொல்ல பாடல் எழுதிய பின்னர் மெட்டமைக்க பட்டதா என்பதே அது.
மெட்டுக்கும் சந்தத்திற்கும் சத்தமில்லாமல் ஒட்டிக் கொண்டு சங்கமித்த சம்பவமாகிப் போனது இந்தப் பாடலின் வரிகள் என்றால் அது மிகையாகாது.
“தீபாவளியோ, பொங்கலோ நமக்கு திருவிழாவே இல்ல, நடக்கப் போற இவுங்க கல்யாணம் தான் நமக்கு உண்மையான திருவிழா” என கேசவனின் தந்தையும் மீனவ தலைவருமான மணிவண்ணன் கூறும்போது கொடுக்கும் கொண்டாட்ட இசையை சில மணித் துளிகளில் ஜீவாவை மினி சந்தித்து, “நான் போய் ரெடியாகட்டுமா” என கூறியவுடன் ஒரு அமைதியை தவழவிட்டு இருவரின் மனகுமுறலை இசையால் வெளிப்படுத்தி வேதனையை தொட்டிருப்பார் இசைஞானி.
பிரிந்து திரும்ப வீட்டிற்கு வரும்போது வீராப்பாக இருக்கும் அம்மாவை நோக்கி மினி, “அம்மா” என்றபோது அவர் உடைந்து போயி “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், தாங்கற சக்தி எனக்கில்லை, நீ தான் வந்துட்டியே அது போதும்” என அழும்போது பின்னணியில் குழலால் நம் இதயத்தை வருடி விட்டுச் சென்று விடுவார்.
இந்தப் படத்தை முதன்முறை மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் கிளைமாக்ஸ் பார்க்கும் போதும் கண்கள் சிறிதாவது வியர்த்து விடாமல் இருக்காது என்பதற்கு நிறைய பேர் சாட்சிகளாக இருந்தனர்.
பரஸ்பரம் மரியாதையாக மினி வீட்டுக்கு ஜீவாவின் பெற்றோர்கள் வந்தவுடன் துள்ளிக் குதிக்கும் புள்ளிமானாய் மினி வரும் அந்த உற்சாக காட்சியுடன் பின்னணி இசை.
படத்தின் கடைசி 10 நிமிடங்கள் அனைத்து கதாபாத்திரங்களின் உயிரோட்டமான துடிப்பு, உணர்வுப் பிழம்பான வசனங்கள், அத்தனைக் கதாபாத்திரங்களின் உணர்வையும் பிரதிபலிக்கும் அமைதி கலந்த உணர்வைப் பிழியும் வாத்தியங்களுடன் கூடிய பின்னணி.
“என்ன சொல்லி ஆசிர்வாதம் செய்ய காலம் பூரா கண்ணாட்டம் நான் பார்த்துக்குவேன். எங்க வீட்ட பொண்ண எங்கிட்ட கொடுத்திருங்க” என ஜீவாவின் தாய் கூற, பதட்டமான இசையை கொடுத்து, “எடுத்துக்குங்க… கூட்டீட்டுப் போங்க. யார் வேணாம்னு சொன்னா… அவளோட ஜீவாவை அவகிட்டையே கொடுத்திடுங்க” என மினியின் தாய் சொல்ல… மினி ஓடிச்சென்று தன் தாயிடம் இருகரம் கூப்பி அழுது வணங்கும் போது ஒரு பின்னணி இசையை கொடுத்திருப்பாரு பாருங்க நம் இசைஞானி… இதயத்தை எடுத்துப் பிழிஞ்சி, திரும்ப அதே இடத்திலியே வைத்து ஆசுவாசத்துடன் கூடிய அமைதியான இன்பத்தைக் கொடுத்து நம் கண்களின் கண்ணீரை அருவியாய் வழிய விட்டிருப்பார் இசைஞானி.
ஃபாசில், சங்கிலி முருகன், விஜய், ஷாலினி என இந்தப் படத்தின் மூலம் அனைவருக்கும் அவரவர் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தி, திரை வாழ்வின் உச்சத்தை பெற்று தந்தது இந்தப் படம் என்றால் அது மிகையாகாது.
படத்தில் நடித்த அனைவரும் நடிகர் நடிகைகள் என்பதை மறக்கடித்து அந்த கதாபாத்திரங்களாவே மாறி, உணர்வின் உச்சத்தைத் தொட்டு நம்மையும் பரவசப்படுத்தி இருப்பார்கள்.
படத்திற்கு மெருகேற்றியதில் ஆனந்த குட்டனின் ஒளிப்பதிவு, கோகுல கிருஷ்ணாவின் வசனம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஃபாசில் – இசைஞானி கூட்டணியில் என்றென்றும் உச்சத்தில் வைத்து கொண்டாடப்பட்ட, இனியும் கொண்டாடப்படும் காவியப் படைப்பான காதலுக்கு மரியாதைக்கு 26 வயது (டிசம்பர் 1997).
- நன்றி : முகநூல் பதிவு