சில நாயகர்களுக்குப் பெண் ரசிகைகள் அதிகம் இருப்பார்கள். சிலருக்கு ஆண்களிடம் வரவேற்பு அதிகம் கிடைக்கும். அதனைப் பொறுத்து, ‘யார் ரொமான்ஸ் ஹீரோ’, ‘யார் ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்களிடையே வாக்கெடுப்பு நடைபெறும். அது மோதலாகவும் கூட மாறும்.
அதே போல இயக்குனர்களையும் கூட ரசிகர்களுக்குப் பிடித்தவர், ரசிகைகளுக்குப் பிடித்த இயக்குனர் என்று பிரிக்க முடியும்.
பெண்ணுரிமை, குடும்ப சென்டிமெண்ட், ரொமான்ஸ், இயல்பான வாழ்க்கை சார்ந்த படங்களை இயக்குபவர்களைப் பெண்கள் கூர்ந்து நோக்குவார்கள்.
பெண்களை அதீத கவர்ச்சியுடன் நடமாட விடுகிற, அதிரடிச் சண்டைகள் நிறைந்திருக்கிற, கட்டுப்பாடற்ற போகத்தைப் பேசுகிற இயக்குனர்களுக்கு ஆண்களிடத்தில் வரவேற்பு கிடைக்கும் (பத்தாண்டுகளுக்கு முன்புவரை அப்படித்தான் மனவோட்டம் இருந்தது).
அந்த வரிசையில், தற்போதைய இயக்குனர்களில் மகிழ் திருமேனிக்கென்று திரளான ரசிகர் கூட்டம் உண்டு.
மகிழ் திருமேனி இயக்கிய இரண்டாவது படமான ‘தடையறத் தாக்க..’ தொட்டு, அந்த ராசி அவரைத் தொடர்கிறது.
இத்தனைக்கும் முதல் படமான ’முன்தினம் பார்த்தேனே’வில் திகட்டத் திகட்டக் காதலைக் காட்டியிருப்பார்.
எது அவரை ஆக்ஷன் வெறியராக மாற்றியது என்று தெரியவில்லை. ஆனால், அதுவே அவரைக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் கொண்டாடுவதற்கு வழி வகுத்திருக்கிறது.
தற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’யை இயக்கிவரும் அவர், பத்தாண்டுகளுக்கு முன்பு ‘மீகாமன்’ படத்தைக் கொண்டாட்டத்திற்குரிய வகையில் தந்திருப்பார். ஆனால், அப்படம் வெளியான காலகட்டத்தில் உரிய புகழை அடையவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
மீகாமன் கதை!
ஒரு ஐபிஎஸ் அதிகாரி, கோவாவில் இருந்து நாடு முழுக்கச் செயல்பட்டுவரும் போதை மருந்து கடத்தல் நெட்வொர்க்கை வேரறுக்க ‘அண்டர்கவர் ஆபரேஷனை’ மேற்கொள்கிறார்.
கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் கழித்தே, அந்த கும்பலின் தலைவனைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெறுகிறார். அந்த அளவுக்கு வில்லன் ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணா’வாக இருக்கிறார்.
நாயகனின் நண்பர் குஜராத் துறைமுகத்தில் செயல்படும் இன்னொரு கும்பலில் இணைந்திருக்கிறார்.
உண்மையான அடையாளத்தைத் தொலைத்து, மனசாட்சியை அடகு வைத்து, குற்றவாளி போல நடிக்க முடியாமல் இருவரும் திணறுகின்றனர். நிஜமான போலீஸ் அதிகாரியால் ஒரு ‘போக்கிரி’யாக வாழ முடியாது என்று புலம்புகின்றனர்.
இந்தச் சூழலில், அவர்களைப் பற்றிய உண்மை சம்பந்தப்பட்ட கும்பல்களுக்குத் தெரிய வருகிறது.
ஆனால், முழு அடையாளம் தெரிய வரவில்லை. அந்த குழப்பத்தைச் சாதகமாக்கி நாயகன் அந்த கும்பலை அடியோடு ஒழித்தாரா? யாருமே நேரில் பார்த்திராத அந்த கும்பலின் தலைவனைப் பார்த்தாரா என்பதைச் சொல்லும் ‘மீகாமன்’.
’அண்டர்கவர்’ போலீஸ்!
ரகசிய போலீஸ் 115, காவல்காரன் தொட்டு காக்கிசட்டை வரை பல தமிழ் படங்களில் பார்த்த அதே ‘அண்டர்கவர் போலீஸ்’ கதையைத் தான் மீகாமனிலும் சொல்லியிருப்பார் மகிழ் திருமேனி.
ஆனால், அதுவரை நாம் பார்த்த எந்தப் படங்களும் நினைவில் குறுக்கிடாது.
அவ்வளவு ஏன்? விஜய் நடித்த ‘போக்கிரி’யின் கதையும் இதுவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகத்தான் தெரியும். திரைக்கதையிலோ இமாலய வித்தியாசங்கள் இருக்கும்.
காவல் துறைக்குள் நிகழும் உள்குத்துகள், அதனால் வெளிப்படும் ‘அண்டர்கவர்’ அதிகாரிகளின் அடையாளங்கள், சுயத்தை மறைத்து தனது நெட்வொர்க்கை ஆட்டுவிக்கும் வில்லன், தலைவன் யார் என்று தெரியாமலேயே விசுவாசம் காட்டும் அடியாட்கள், அவர்களில் ஒருவனாக உருமாறி நிற்கும் நாயகன் என்று நமக்கு நன்கு தெரிந்த விஷயங்களே இத்திரைக்கதையில் உண்டு.
ஆனால், அவற்றைத் திரையில் வெளிப்படுத்திய விதம் ‘இது ஒரு கல்ட் கிளாசிக்’ என்று சொல்ல வைத்திருக்கும்.
இதில் நாயகனாக ஆர்யா நடித்திருப்பார். அவர் நடித்ததில் ‘மிகச்சிறந்த படங்களில் ஒன்று’ என இதனைத் தாராளமாகச் சொல்லலாம்.
லிங்குசாமியின் ‘பீமா’ போலவே, இதிலும் நாயகன் எதிர்ப்படும் எல்லோரையும் அடி வெளுத்தெடுப்பார். ஆனால், அந்த ’அதீத ஹீரோயிசம்’ நமக்கு போராடிக்காத அளவுக்குத் திரைக்கதையில் திருப்பங்களைப் புகுத்தியிருப்பார் மகிழ் திருமேனி.
வில்லனை நாயகன் கண்காணிப்பது போலவே, நாயகன் தரப்பையும் வில்லன் குரூப் சுற்றி வருவதை, கழுகின் நிழல் வழியே நமக்கு உணர்த்தியிருப்பார் இயக்குனர்.
இது போன்ற ‘முன்னுணர்த்தல்களை’ திரைப்படத்தில் மறைந்திருக்கும் தகவல்களாகக் கொண்டாடி வருகின்றனர் சில ரசிகர்கள். அவர்களை மகிழ்ச்சியூட்டவே பல அம்சங்களைப் பொதித்து வைத்து தருகிறார் மகிழ் திருமேனி.
தனித்துவமான காட்சியனுபவம்!
ஒரு திரைப்படம் பற்றி தெரிய வரும்போது, ‘யார் ஹீரோ’ என்பதையடுத்து ‘ஹீரோயின் யாரு’ என்று கேட்பது இயல்பு.
நாயகி என்றில்லை, ஒரு திரைப்படத்தில் பெண் பாத்திரங்கள் குறைவாக இருப்பது பலருக்குத் திருப்தியைத் தராது.
ஆனால், அதையே தனது படங்களின் சிறப்பம்சங்களில் ஒன்றாகக் கருதுபவர் மகிழ் திருமேனி. உண்மையைச் சொன்னால், இவரது படங்கள் அனைத்தும் ‘ஆண் மையவாத’ படங்களாகத் தோற்றம் தரும்.
இவரது படங்கள் அனைத்துமே ‘சேவல் பண்ணைக்குள்’ புகுந்தது போலிருக்கும். அதனாலேயே, அப்படங்களில் பெண்களைப் பார்க்கும்போது வாகன உதிரிபாகங்களுக்கு நடுவே பசுமையாக ஒரு தாவரம் துளிர்த்தாற்போலத் தெரியும்.
அதேநேரத்தில், அனைத்து படங்களிலும் நாயகன் நாயகி இடையிலான காதலைத் திகட்டும் அளவுக்குத் திரையில் காட்டியிருப்பார்.
இதனை அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் பார்க்க முடியும்.
அந்த வரிசையில், ‘மீகாமன்’னில் ஹன்சிகா மோத்வானி – ஆர்யாவின் கனவுப்பாடலும், காதல் காட்சிகளும் இருக்கும்.
ஹன்சிகாவும் ஆனந்தியும் இடம்பெறும் காட்சிகள் நம்மைச் சிரிக்க வைக்கும். மற்றனைத்தும் ‘சீரியஸாக’ அமைக்கப்பட்டிருக்கும்.
’தடம்’, ‘கலகத்தலைவன்’ உட்படத் தான் இயக்கிய அத்தனை படங்களிலும் வித்தியாசமான காட்சியனுபவத்தை நமக்குப் பரிசளித்திருப்பார் மகிழ் திருமேனி.
அதுவே, ‘விடாமுயற்சி’ குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. அந்த படம் வெளிவருவதற்குள், மகிழ் திருமேனியின் முந்தைய படங்களை ஒவ்வொன்றாக ‘ரீ-ரிலீஸ்’ செய்யலாம். அந்த வரிசையில், ‘மீகாமனுக்கு’ முதலிடம் தரலாம்.
ஏன் இந்த ஐடியா?
ஒரு படம் வெளியான காலகட்டத்தைவிட, பிந்தைய காலத்தில் அதற்கான வரவேற்பு இன்னும் அதிகம் கிடைக்கலாம். அதற்கான அத்தனை கூறுகளும் ‘மீகாமன்’ படத்திற்கு உண்டு.
முக்கியமாக ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸ் என்று முழுக்கவே குறிப்பிட்ட வகைமை சார்ந்த படங்கள் வெற்றி பெறுவது தற்போது இயல்பாக மாறிவிட்டது. தற்போதைய சூழலில், முழுக்க ஆக்ஷன் நிறைந்த ‘மீகாமன்’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.
‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்பவர்களை ஆசுவாசப்படுத்த, இந்த ஐடியா உதவலாம்.
இது போன்ற படங்களைத் தேர்ந்தெடுக்கும் திசை நோக்கி ஆர்யாவைத் திருப்பலாம். குறைந்தபட்சமாக, இதனைப் பிரதியெடுத்தாவது சில நல்ல முயற்சிகள் காணக் கிடைக்கலாம்.
’எது நிகழ்ந்தாலும் நன்மைக்கே’ என்று சொல்லத்தக்க வகையிலேயே ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் ‘மீகாமன்’.
இப்படம் தியேட்டரில் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது, இதனை மறுவெளியீட்டுக்கு உட்படுத்தலாம்; அப்படியே சில தீவிர ‘மகிழ் திருமேனி’ ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கலாம்!
– உதய் பாடகலிங்கம்