நெல்லை வெள்ள பாதிப்பு விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி மற்றும் நிவாரணப் பணிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயரதிகாரிகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நெல்லையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒரு நபருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் என்ற வகையில் மொத்தமாக 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

67 மாடுகள் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு மாட்டிற்கு தலா 37 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் என்ற வகையில் மொத்தமாக 25 லட்சத்து 12,500 ரூபாய் இழப்பீடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

1,064 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஒரு வீட்டிற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்ற வகையில் 1 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

504 ஆடுகள் உயிரிழந்த நிலையில், ஒரு ஆட்டுக்கு தலா 4,000 ரூபாய் என்ற வகையில் 20 லட்சத்துக்கு 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

135 கன்றுக் குட்டிகள் உயிரிழந்த நிலையில், ஒரு கன்று குட்டிக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்ற வகையில், 27 லட்சம் ரூபாய் இழப்பிடு ஒதுக்கப்பட்டுள்ளது.

28,392 கோழிகள் உயிரிழந்த நிலையில், ஒரு கோழிக்கு 100 ரூபாய் என்ற வகையில் 28 லட்சத்து 39 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்படியாக மொத்தக் கணக்கீட்டின்படி 2 கோடியே 87 லட்சத்து 7ஆயிரத்து 700 ரூபாய், முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால் 21 நபர்களுக்கு 58 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

You might also like