காதலும் நகைச்சுவையும் கலந்த படங்கள் தமிழில் அரிதாக வெளியாகும். அவையும் கூட முழுக்கச் சினிமாத்தனமாக இருக்கும். மிகச்சில படங்கள் மட்டுமே யதார்த்த வாழ்வின் அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லும்.
அப்படியொரு உறுதியைத் தந்தது அசோக் செல்வன், மேகா ஆகாஷ், புதுமுகங்கள் கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில், புதுமுக இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான ‘சபாநாயகன்’ பட ட்ரெய்லர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
இப்படம் நமக்கு எத்தகைய காட்சியனுபவத்தை வழங்குகிறது?
நாயகன் ஆகும் ‘சபா’!
ஈரோடு பகுதியிலுள்ள பள்ளியொன்றில் ப்ளஸ் ஒன் படிக்கிறார் அரவிந்த் (அசோக் செல்வன்). அவரது ச.பா. எனும் இனிஷியலை வைத்து, நண்பர்கள் அவரை ‘சபா’ என்றழைக்கின்றனர்.
விடுதியில் தங்கிப் படிக்கும் அவருக்கு, ஹாக்கி விளையாட்டு வீரரான தனது சீனியர் அஸ்வினைப் போல பள்ளி முழுக்கப் பிரபலமாக வேண்டுமென்று ஆசை.
புதிதாகப் பள்ளியில் சேர்ந்த இஷாவின் (கார்த்திகா முரளிதரன்) கவனத்தைக் கவரும் எண்ணம் அதன் பின்னிருக்கிறது. அவர் சாதிக்கும் வாய்ப்புகள் வாய்த்தாலும், அவர் செய்யும் தவறுகள் இஷாவை எட்டவிடாமல் தடுக்கின்றன.
உருகி உருகிக் காதலித்தாலும், இஷாவின் பின்னால் சுற்றினாலும், பன்னிரண்டாம் வகுப்பு வழியனுப்பு விழா வரை அதனை அவரிடம் அரவிந்த் சொல்லவே இல்லை. இதனால், அந்த காதல் முறிகிறது.
அதன்பிறகு, கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியொன்றில் சேர்கிறார். அங்கு வேறொரு பாடப்பிரிவைச் சேர்ந்த ரியாவின் (சாந்தினி சவுத்ரி) அறிமுகம் கிடைக்கிறது.
அவரது வீட்டைச் சுற்றும்போது, ஒரு சிறுவன் ‘சபாண்ணா..’ என்றழைக்கிறான். அது, அப்பெண்ணின் சகோதரன்.
அப்போதுதான், அச்சிறுவன் தனது பள்ளியில் ஜூனியராக இருந்தவன் என்பதை அறிகிறார் அரவிந்த்.
அதுவே, மெல்ல ரியாவோடு பழக ஏதுவாகிறது. ஆனால், ஒருகட்டத்தில் அந்தக் காதலும் முறிந்து போகிறது.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, தனது உறவினர் நடத்திவரும் பெண்களுக்கான பிரத்யேக ஆடை விற்பனையகத்தில் மீண்டும் இஷாவைச் சந்திக்கிறார் அரவிந்த். அது, அவரிடத்தில் காதலை விதைக்கிறது. இருவரும் நெருங்கிப் பழகுகின்றனர்.
எல்லாம் சுமூகமாகச் செல்வதாகக் கருதுகையில் மீண்டும் ஒரு பிரிவு. ‘பள்ளியிலேயே நீ உன் காதலைச் சொல்லியிருக்கலாமே.. இப்போது எனக்கொரு பாய்பிரெண்ட் இருக்கிறான்’ என்று சொல்லிச் செல்கிறார் இஷா.
அதன்பிறகு, எம்பிஏ படிக்கச் செல்கையில் அரவிந்த் வாழ்வில் இன்னொரு காதல். அங்கு, அவர் மேகாவைச் (மேகா ஆகாஷ்) சந்திக்கிறார். அவர்களது நட்பு மெல்லக் காதலாகிறது. அதுவாவது தொடர்ந்ததா?
அரவிந்திடம் காதல் கதை கேட்கும் போலீசாரிடமும் அந்தக் கேள்வியே மீதமிருக்கிறது.
மேற்சொன்ன அத்தனை காதல் அனுபவங்களையும் தன்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரிடமும் கான்ஸ்டபிள்களிடமும் அரவிந்த் சொல்லி வருவதாகவே ‘சபாநாயகன்’ திரைக்கதை அமைந்துள்ளது.
அவர் ஏன் போலீஸில் சிக்கினார்? அவரது காதல் என்னவானது என்பதைச் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.
சபா எனும் செல்லப்பெயரை வைத்துக்கொண்டு டைட்டில் வைத்தாலும், அசோக் செல்வனை கமர்ஷியல் நாயகனாகக் காட்டும் வகையிலேயே இப்படம் அமைந்துள்ளது. அது படத்திற்குப் பொருத்தமாகவும் உள்ளது.
படம் முழுக்க நகைச்சுவை!
‘ஆட்டோகிராஃப்’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘96’, ‘3’, ‘பிரேமம்’, ‘நித்தம் ஒரு வானம்’ பாணியில் ஒரு நாயகன், ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகளை முன்வைத்து ‘சபாநாயகன்’ கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தனது வாழ்வில் வெவ்வேறுபட்ட பெண்களை ஒரு ஆண் எதிர்கொள்வதாகக் கதை அமைந்துள்ளதா என்றால், ‘ஆமாம்’ என்றும் ‘இல்லை’ என்றும் ஒருசேரச் சொல்லும் வகையில் திரைக்கதை உள்ளது.
தொடக்கம் முதல் இறுதி வரை வாய்விட்டுச் சிரிக்கும் அளவுக்குப் படத்தில் நகைச்சுவையைக் காட்சி வழியாகவும், வசனங்கள் மூலமாகவும் தூவியிருக்கிறார் புதுமுக இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன்.
அதேநேரத்தில், ஒரே ஒரு இடத்தைத் தவிரப் படத்தில் எங்குமே இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெறவில்லை. அதற்காகவே, இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
வெறுமனே பள்ளி, கல்லூரி மற்றும் அதன்பிறகான காலகட்டத்தில் ஏற்படும் காதல்களைப் பற்றிச் சொல்வதால், கனமான கதையையோ அல்லது ரொம்பவும் சீரியசான படத்தையோ எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் பிடிப்பது கடினம்.
இன்றைய யூடியூப் தலைமுறையினரின் அனுபவங்களைச் சொல்வது முந்தைய தலைமுறையினரை ஈர்க்காமல் போகவும் வாய்ப்புகள் அதிகம்.
அதையும் தாண்டி, பின்பாதியில் திரைக்கதையில் தொய்வு இருப்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும். போலவே, கிளைமேக்ஸ் திருப்பம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
அதுவரையிலான திரைக்கதை போக்கை முற்றிலும் எதிர்த்திசையில் நகர்த்துவதாகத் தோன்றலாம். அது போன்ற குறைகளைப் புறந்தள்ளிவிட்டால், நல்லதொரு காட்சியனுபவத்தைத் தரும் ‘சபா நாயகன்’.
ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியெம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என்று மூன்று ஒளிப்பதிவாளர்களின் கைவண்ணத்தில் இப்படம் உருவாகியிருக்கிறது.
அதற்கேற்ப பள்ளி, கல்லூரி மற்றும் நிகழ்காலத்தை வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளில் அவர்களது பங்களிப்பு அமைந்திருக்கிறது.
வெவ்வேறு திறமையாளர்களின் உழைப்பு அதிலுள்ளது என்று பேதம் காண முடியாத அளவுக்கு, நம் கண்களில் ஒவ்வொரு பிரேமும் வண்ணத்தை வாரியிறைக்கின்றன.
கலை இயக்குனர் ஜி.சி.ஆனந்தன், ஆடை வடிவமைப்பாளர் நிகிதா நிரஞ்சன் பங்களிப்பு, எவ்வித உறுத்தல்களும் இல்லாமல் ‘கலர்ஃபுல்’லான படம் பார்த்த திருப்தியை வழங்க உதவுகிறது.
கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு எந்தவிதக் குழப்பமுமின்றிக் கதையை உள்வாங்கத் துணை நிற்கிறது.
ராஜு சுந்தரம், பிருந்தா மற்றும் லீலாவதியின் கொரியோகிராஃபியில் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும் நடன அசைவுகள் இடம்பெற்றிருக்கின்றன.
பில்லா ஜெகனின் வடிவமைப்பில் இதில் இரண்டு சண்டைக்காட்சிகளும் உண்டு. அவை அசோக் செல்வனை ‘கமர்ஷியல் ஹீரோவாக’ மாற்ற முயன்றிருக்கின்றன.
‘பேபிமா’, ‘சீமக்காரியே’, ‘சிக்கிட்டா’ பாடல்கள் வழியே நம்மில் துள்ளலை விதைக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.
அவற்றை விடப் பின்னணி இசையில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்.
முக்கியமாக, அசோக் செல்வனின் நண்பர்கள் குழாம் அடிக்கும் லூட்டியின் போது அவரது இசை ‘அட்ராசிட்டி’ பண்ணுகிறது.
எங்கும் அழகு!
‘போர்தொழில்’ படத்திற்குப் பிறகு, அசோக் செல்வனுக்கு வெற்றியைத் தரும் விதமாக உள்ளது ‘சபாநாயகன்’. அதற்கேற்ற நடிப்பை, அவரும் மிக அளவாக, பாந்தமாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் பின்பாதியில் வந்து போயிருக்கிறார் மேகா ஆகாஷ். ஒரு பாடல், சில காதல் காட்சிகள் என்று அவரது இருப்பு கனகச்சிதமாக அமைந்துள்ளது.
புதுமுகம் சாந்தினி சவுத்ரி தமிழுக்கு இனிய வரவு. நகைச்சுவையும் காதலும் கொப்பளிக்கும் காட்சிகள் அவருக்குத் தரப்பட்டுள்ளன. அது போதாதென்று நடனத்திலும் பின்னியெடுத்திருக்கிறார்.
மற்றொரு புதுமுகமான கார்த்திகா முரளிதரன் தான், இந்த படத்தின் பிரதான நாயகி. அதற்கேற்ப முழுப்படத்திலும் அவரது இருப்பு அமைந்துள்ளது.
பதின்பருவம் மற்றும் இளம் வயதுப் பெண்ணாக, நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர் தோன்றியிருக்கிறார். ‘இவரா அவர்’ என்று நினைத்துப் பார்ப்பது, நிச்சயம் இப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும்.
இவர்கள் மூவரையும் தாண்டி, அசோக் செல்வனின் உறவினராக விவ்யா சந்த்.
கார்த்திகாவின் தோழியாக வரும் ஷெர்லின் சேத் உட்படப் பல பெண்கள் இதில் அழகுறக் காட்டப்பட்டுள்ளனர். அசோக் செல்வனுக்கு அறிமுகமாகும் பெண்களாகவும் இரண்டொரு பேர் வந்து போகின்றனர்.
அவர்கள் அழகு நாயகிகளாகத் தோற்றமளிக்கின்றனர். அந்த வகையில், இப்படமே ஒரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டலாம்.
அதனைப் புறந்தள்ளும் வகையில், இதில் நாயகனின் நண்பர்களாக வருபவர்களையும் அவருக்கிணையாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். இது போதாதென்று அழகான லொகேஷன்களை புகுத்தி, எங்கும் அழகு என்று சொல்ல வைத்திருக்கிறார்.
கான்ஸ்டபிளாக வரும் உடுமலை ரவி மற்றும் மறைந்த மயில்சாமி நம்மைக் கலகலப்பூட்டுகின்றனர். குறிப்பாக, ‘பாட்டெல்லாம் வேணாம், நேரா கதைக்கு வா’ என்று அசோக் செல்வனிடம் மயில்சாமி சொல்லுமிடத்தில் தியேட்டரே அல்லோகலப்படுகிறது.
நாயகனின் நண்பர்களாக ‘நக்கலைட்ஸ்’ அருண்குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ் வந்து போயிருக்கின்றனர் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கின்றனர் என்று சொல்வதே சாலப் பொருத்தமாக இருக்கும். அந்தளவுக்கு அவர்களது பங்களிப்பு அமைந்துள்ளது.
முன்பாதி முழுக்கப் பதின்பருவத்து நகைச்சுவை என்றால், இரண்டாம் பாதியில் வாலிபப் பருவத்திற்கேற்ற விஷயங்களை விரசமின்றித் தந்திருக்கின்றனர்.
குறிப்பாக, டாக்டர் என்று சொல்லிக்கொண்டு ரெஸ்டாரெண்டில் தனது கேர்ள்ப்ரெண்ட் முன்னால் அருண்குமார் வந்து நிற்கும் காட்சி வயிறைப் பதம் பார்க்கும் ரகம்.
இன்னொரு நாயகன் என்று சொல்லாமுடியாவிட்டாலும், முக்கியமானதொரு பாத்திரத்தில் மைக்கேல் தங்கதுரை இடம்பிடித்திருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து ஒரு டஜன் பேராவது வசனம் பேசியிருப்பார்கள். குறைந்தது நூறு பேராவது பின்னணியில் முகம் காட்டியிருப்பார்கள்.
‘எல்கேஜியிலேயே லவ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க’ என்பது போன்ற ஒரு சில வசனங்கள் பள்ளி, கல்லூரிக் காலத்து காதல்களை நியாயப்படுத்துவதாக உள்ளன. அவற்றைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
போலவே, ஆணும் பெண்ணும் ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களைக் கடந்தே தீர வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருப்பதும் கூடக் கலாசாரப் பாதுகாவலர்களால் கண்டனத்திற்கு உள்ளாகலாம்.
அனைத்தையும் தாண்டி, காலத்தோடு இயைந்து கதாபாத்திரங்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காட்டிய வகையிலும், யதார்த்தமான வாழ்வில் நிகழும் நகைச்சுவையைச் சொன்ன வகையிலும் நம்மைக் கவரும் இந்த ‘சபாநாயகன்’.
திரைக்கதையில் நாம் குறைகளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
ஆனால், ‘சிரிக்கத் தயார்’ என்ற எண்ணத்தோடு தியேட்டருக்குள் நுழைந்தால் இப்படம் நிச்சயம் நல்லதொரு பொழுதுபோக்காக அமையும். ’அது என்னால் முடியாது’ என்பவர்களுக்குத் திண்டாட்டமாக இருக்கும்.
படமாக்கத்தில் நெடுங்காலத்தை எடுத்துக்கொண்டாலும், ‘சபாநாயகன்’ படம் தரும் அனுபவம் அசோக்செல்வனின் ஸ்கிரிப்ட் தேர்வை மெச்ச வைக்கிறது. தியேட்டரில் கொண்டாட்டத்தை விதைக்க முயற்சித்துள்ள இப்படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
– உதய் பாடகலிங்கம்