ஜிகிரி தோஸ்து – நண்பர்களின் சாகசப் பயணம்!

ஒரு திரைப்படம் பார்ப்பதற்கு நடிப்புக் கலைஞர்கள், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களைத் தாண்டி அது குறித்த தகவல்களும் கூட முக்கியக் காரணமாக இருக்கும்.

அந்த வகையில், ‘ஜிகிரி தோஸ்து’ என்ற டைட்டிலே நம் கவனத்தை ஈர்த்தது. அதற்கேற்றவாறு படத்தின் ட்ரெய்லரும் கூட ஈர்க்கும் வகையிலேயே இருந்தது.

அதேநேரத்தில், படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவு என்பதையும் உணர்த்தியது. அது சில தடைகளையும் மனதுக்குள் ஏற்படுத்தியது.

அதனை மீறி, இப்படம் தரும் அனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

நண்பர்களின் பயணம்!

ரிஷி (ஷாரிக் ஹாசன்), விக்னேஷ் (அரன்), லோகி (விஜே ஆஷிக்) மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத அளவுக்கு, அவர்களிடையே நட்பு வலுவாக இருந்து வருகிறது.

சினிமாவில் நாயகனாக நடிப்பதற்காக வாய்ப்பு தேடுகிறார் ரிஷி. லோகி செம ஜாலியான பேர்வழியாக ஊரைச் சுற்றி வருகிறார்.

பொறியியல் கல்லூரியில் பயிலும் விக்னேஷோ, ’டெரரிஸ்ட் ட்ராக்கர்’ எனும் மின்னணுக் கருவி கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் மூலமாக, அரை கிலோமீட்டர் சுற்றளவில் மேற்கொள்ளப்படும் மொபைல் அழைப்புகளைப் பதிவு செய்ய முடியும்.

கல்லூரியில் நடைபெறும் செயல்முறைத் தேர்வில் தான் கண்டறிந்த ’டெரரிஸ்ட் ட்ராக்கர்’ சாதனத்தின் ‘செயல்விளக்கத்தை’ காட்ட முனைகிறார் விக்கி.

அதில் அவருக்குத் தோல்வி கிடைக்கிறது. அதையடுத்து, தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.

அந்த விரக்தியோடு இருக்கும் விக்கியைக் கல்லூரிக்குச் சென்று சமாதானப்படுத்துகின்றனர் ரிஷியும் லோகியும்.

மூவரும் சேர்ந்து மகாபலிபுரத்திற்கு காரில் பயணிக்கின்றனர். செல்லும் வழியில், ஒரு இளம்பெண்ணை இரண்டு பேர் காரில் கடத்திச் செல்வதைப் பார்க்கின்றனர்.

அப்பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார் ரிஷி. அதற்கு விக்கியும் உடன்படுகிறார். லோகி மட்டும் அதனை ஏற்பதாக இல்லை. ஆனாலும், நண்பர்களைத் தனியே விட மனமில்லாமல் அவர்களோடு பயணிக்கிறார்.

அப்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லா வீடொன்றில் மறைத்து வைக்கிறது அக்கும்பல். அதனை ரிஷியும் நண்பர்களும் அறிந்துகொள்கின்றனர்.

அங்கு எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியாத காரணத்தால், அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து காவல் துறையிடம் கொடுக்க முடிவு செய்கின்றனர்.

தான் கண்டறிந்த சாதனம் மூலமாக, அப்பெண்ணைக் கடத்தியவர்கள் ஏதேனும் பணயத்தொகை கேட்கிறார்களா என்று சோதிக்கிறார் விக்கி. அவரது முயற்சிக்குப் பலன் கிடைக்கிறது.

அதையடுத்து, கட்டட ஒப்பந்ததாரராக இருக்கும் அப்பெண்ணின் தந்தை குறித்தும், இந்த கடத்தலில் ஈடுபட்ட கும்பலுக்குக் காவல் துறையிலும் அமைச்சர் அளவிலும் செல்வாக்கு இருப்பதைக் கண்டறிகிறார் விக்கி.

போலீஸை நாட முடியாது என்ற சூழலில், அவர்களே களமிறங்கினார்களா? அப்பெண்ணைக் காப்பாற்றி சாகசம் புரிந்தார்களா இல்லையா என்று சொல்கிறது ‘ஜிகிரி தோஸ்து’.

படத்தின் தலைப்பே இது எப்படிப்பட்ட முடிவைக் கொண்டிருக்கும் என்பதைச் சொல்லிவிடும். மூன்று நண்பர்களின் பயணம் என்பதாக அமைந்த கதையில், மொத்தம் ஒரு டஜன் பாத்திரங்கள் இடம்பெற்றிருந்தால் அதிகம். இப்படத்தின் பலமும் பலவீனமும் அதுவே!

காப்பாற்றும் இசை!

ஷாரிக் ஹாசன் இதில் பிரதான நாயகனாகத் தோன்றியிருக்கிறார். ரொமான்ஸ், டான்ஸ், பைட் ஆகியவற்றில் தனது திறமையைக் காண்பித்திருக்கிறார். இருந்தாலும், ’இன்னும் மெருகேற வேண்டும்’ என்ற வகையிலேயே உள்ளது அவரது நடிப்பு.

ஒரு பாடல், நான்கைந்து காட்சிகள் என்று கணக்கு வழக்கோடு இதில் நாயகியாக வந்து போயிருக்கிறார் அம்மு அபிராமி.

இயக்குனர் அரண் இப்படத்தில் விக்கியாக நடித்துள்ளார்.

எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும், அவரது முகத்தில் சிறிதளவு புன்னகை தென்படுவது மைனஸ். அதைத்தாண்டி, அவரது வாய்ஸ் மாடுலேஷனும் காமெடி டைமிங்கும் கவர்கிறது.

பார்வையாளர்கள் தியேட்டரில் கத்திவிடக் கூடாதே என்ற நோக்கில், அதே தொனியில் அமைந்திருக்கின்றன விஜே ஆஷிக் படத்தில் பேசும் வசனங்கள். ‘கொஞ்சம் போரடிக்குதே’ என்று எண்ணவிடாமல் தடுத்திருக்கிரது அவரது இருப்பு.

இவர்களைத் தாண்டி, அர்ஜுனன் என்ற பாத்திரத்தில் பாடகர் சிவம் வில்லத்தனம் செய்திருக்கிறார். அவருடன் வரும் இரண்டு பேரில் கேபிஒய் சரத் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.

குபீர் சிரிப்பை வரவழைக்காவிட்டாலும், அக்காட்சிகள் லேசாகச் சிரிப்பூட்டுகின்றன.

அமைச்சராக வரும் துரை சுதாகர், போலீஸ் அதிகாரிகளாக வரும் அனுபமா குமார், கௌதம் ஆகியோரும் நான்கைந்து காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர்.

இவர்கள் தவிர்த்து மறைந்த ஆர்.என்.ஆர். மனோகர், பவித்ரா லட்சுமி, ‘ஜாங்கிரி’ காமெடியில் நடித்த மதுமிதாவும் இதிலுண்டு.

குறும்பட அனுபவத்தைத் தராமல், பெரிய திரைக்கேற்ற காட்சியாக்கத்தை வழங்கியிருக்கிறது சரண் ஆர்வியின் ஒளிப்பதிவு.

கிஷோரின் கலை இயக்கம், மகேஷ் மேத்யூவின் சண்டை வடிவமைப்பு ஆகியன இயக்குனரின் எண்ணத்திற்கு உருவம் தந்துள்ளது.

அருள்மொழி வர்மனின் படத்தொகுப்பு, காட்சிகளை நேர்த்தியாகத் திரையில் வரிசைப்படுத்தியுள்ளது.

எல்லாம் இருந்தும், ‘ஜிகிரி தோஸ்து’ நமக்கு முழுமையான அனுபவத்தைத் தருவதாக இல்லை. காரணம், இப்படத்தின் பட்ஜெட். அதனை மனதில்கொண்டே, பெரும்பாலான காட்சிகள் மிகச்சாதாரணமான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன.

இடைவேளைக்கு முன்னதாக, இளம்பெண் கடத்தலில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அடுத்தடுத்த மொபைல் அழைப்புகளில் இருந்து கண்டறிவது அதற்கான ஒரு உதாரணம்.

பட்ஜெட் பெரிதாக இருந்திருந்தால், அந்தக் காட்சியமைப்பு வேறுவிதமாக இருந்திருக்கலாம். யார் கண்டது?

அது போன்ற குறைகளே, முதல் இருபது நிமிடங்களில் படத்தின் உள்ளடக்கம் எப்படியிருக்கும் என்பதைப் புரிய வைக்கிறது. அதன்பிறகு, அதற்கேற்ற திருப்தியை மட்டுமே நாம் எதிர்பார்க்கிறோம்.

இரண்டாம் பாதியில், அதுவும் கிடைக்காதவாறு விறுவிறுப்பை நழுவ விட்டிருக்கிறது திரைக்கதை.

அதனால், மூன்று நண்பர்களின் பயணம் முழுமை பெறாமல் அரைகுறையாக முடிந்த உணர்வே ஏற்படுகிறது.

அதேநேரத்தில், ‘ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து’ என்றொலிக்கும் பின்னணி இசையின் வழியே ஆங்காங்கே நம்மை உற்சாகமூட்டுகிறார் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி.

அவரது ஈடுபாடே, படத்தின் சாராம்சம் கெடாமல் காப்பாற்றியிருக்கிறது. இப்படத்தை ஒரு வடிவத்திற்குள் அடக்கப் பெரிதும் உதவியிருக்கிறது அவரது பங்களிப்பு.

நல்லதொரு முயற்சி!

சற்றே பெரிய குறும்படம் என்று சொல்லத்தக்க ஒரு படைப்பு. அதனைத் திரைப்படமாகத் தர முயற்சித்ததில் சிறிது சறுக்கியிருக்கிறார் இயக்குனர் அரன் வி.

அதேநேரத்தில், பெரிதாகப் பார்வையாளர்களைக் குழப்பாமல் சுவாரஸ்யமான காட்சியனுபவத்தை வழங்க முயற்சித்திருக்கிறார்.

அந்த வகையில் இது நல்லதொரு முயற்சி. அதனை ஆதரிக்கும் மனமுள்ளவர்கள் இதனைப் பார்க்கலாம்.

டைம்பாஸுக்கு வருபவர்களும் கூட, பெரிதாக அயர்ச்சியுறத் தேவையில்லாத இதுவும் கூட, ’ஜிகிரி தோஸ்து’ பார்த்துவிட்டு வெளியே வருபவர்களின் முகக்குறிப்புகளில் இருந்து கண்டறிந்தது தான்!

– உதய் பாடகலிங்கம்

You might also like