நாடாளுமன்ற மக்களவையில், “ECLG திட்டத்துக்கு எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டது?; நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் MSME இன் பங்கு என்ன? அந்தத் துறை மூலம் உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாகத் தருக.?” ஆகிய கேள்விகளை விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை. ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.
அதற்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான (MSME) இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில், “கோவிட் – 19 தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னணியில், MSMEகளுக்கு ஆதரவாக ஆத்மநிர்பரின் ஒரு பகுதியாக எமர்ஜென்சி கிரெடிட் லைன் கியாரண்டி திட்டம் (ECLGS) மே, 2020 இல் தொடங்கப்பட்டது. 31.03.2023 வரை அத்திட்டம் செயல்பாட்டில் இருந்தது.
நிதிச் சேவைத் துறை அறிக்கையின்படி, ECLGS இன் கீழ் ரூ. 3.68 லட்சம் மதிப்பிலான 1.19 கோடி உத்தரவாதங்கள் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட சமீபத்திய தகவலின்படி, 2021-22 ஆம் ஆண்டில் அகில இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் MSME இன் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட பங்கு சுமார் 29% ஆகும்.” எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ‘உதயம் போர்ட்டல், உதயம் அசிஸ்ட் இணையதளம்’ ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலின்படி 01.07.2020 முதல் 15.12.2023 வரையிலான கடந்த மூன்றரை ஆண்டுகளில் MSME துறையில் மாநிலவாரியாக எவ்வளவு வேலைகள் உருவாக்கப்பட்டன என்ற பட்டியலை அமைச்சர் தந்துள்ளார்.
அதில், ‘இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் 1,82,42,677 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் MSME துறை மூலம் 1,68,21,206 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாகக் கூறப்படும் குஜராத்தில் 94,91,616 வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.