நூல் விமர்சனம்:
வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் “ஒவ்வொரு பூக்களுமே” பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். திரைப்படப் பாடல் ஆசிரியர் என்பதையும் தாண்டி, சிறந்த படைப்பாளி அவரது பல்வேறு படைப்புகளைப் படித்திருக்கிறேன்.
அதில் என்னை மிகவும் கவர்ந்தது ‘நட்பின் நாட்கள்’! இந்த நூல் நட்பின் மேன்மையை பறை சாற்றுகின்றது.
நூலின் அட்டைப்படம் மிக நன்று. காதல் கவிதைகளுக்கு தபூ சங்கர் என்றால் நட்புக் கவிதைகளுக்கு பா.விஜய் என்று சொல்லலாம்.
நூலில் அணிந்துரை, ஆசிரியரின் என்னுரை என்று வழக்கமான மரபுகள் இன்றி நேரடியாக கவிதையுடன் தொடங்குகின்றது இந்த ‘நட்பின் நாட்கள்’. நூலில் சிறு கவிதைகளாக 62 கவிதைகள் உள்ளது. நூலில் தேவையற்ற சொற்கள் எதுவுமின்றி மிக நேர்த்தியாக உள்ளது.
நூலில் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.
நண்பன் ஒரு கண்ணாடி
நாம் முகம் பார்க்க..
நாம் கோபப்பட்டால் உடைக்க..!
நண்பன் ஒரு போதிமரம்
நாம் ஊஞ்சல் ஆட
நாம் கிடந்து தூங்க!
நண்பன் ஒரு புத்தகம்
நாம் படிக்க..
நாம் கிழிக்க..!
இனிய நண்பர் பா. விஜய் அவர்கள் எழுதிய கவிதைகள் முழுவதையும் முக்கியமான கவிதைகள் என்று அனைத்து பக்ககங்களையும் மடித்து வைத்து விட்டேன்.
நூல் விமர்சனத்தில் எல்லா கவிதையையும் மேற்கோள் காட்டக் கூடாது என்பதால் மிக, மிக முக்கியமான கவிதைகளை மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன்.
நட்பை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. நட்பை விரும்பும் அனைவரும் இந்த நூலையும் விரும்புவார்கள் என்பது உறுதி.
நண்பர்களுக்கு பரிசாகத் தர சிறந்த நூல் இது. இந்த நூலை எனக்கு பரிசாகத் தந்தது இனிய நண்பர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின் அவர்கள்.
பள்ளியில் மாணவர்கள் மதிய உணவைப் பகிர்ந்து உண்ணும் காட்சியை நம் மனக் கண் முன் கொண்டு வந்து, நாம் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட, மலரும் நினைவுகளை தோற்றுவிக்கும் கவிதை இதோ!
மதியவேளை
வீட்டிலிருந்து
கொண்டுவந்த உணவை
கொண்டு வந்தவனே
உண்ட வரலாறு
ஈராயிரம் ஆண்டு
இரைப்பைகளிலும்
இல்லை ..!
இளம் ஆண் நண்பர்கள் குழுமினால் பெண் பற்றிய பேச்சு இல்லாமல் இருக்காது. அந்த இயல்பான உணர்வை நன்கு பதிவு செய்துள்ளார்.
அகில உலகமெங்கும்
நண்பர்கள் சபையில்தான்
முதன் முதலில் துவங்குகிறது
ஆய்வரங்கம்!
தலைப்பு – பெண்.
இந்தக் கவிதையைப் படிக்கும் எல்லா ஆண்களுக்கும் அவர்களது பழைய தோழியை நினைவூட்டும் விதமாக நாம் கேட்க விரும்பும் கேள்வி போல ஒரு கவிதை.
சொல்லியிருக்கிறாயா…?
உன் கணவனிடம்
என்னைப் பற்றி!
எப்படி முடியும்?
ஒரு உறவு
வளையமே இருக்குமே
உன்னைச் சுற்றி..!
உன் படுக்கையறையின்
ஏதாவதொரு கண
உறக்கப் பிசிறுகளில்..
உனக்கும் நினைவில்
வருமா?
நாம் முதல்நாள் சிரித்ததும்
கடைசிநாள் அழுததும்…!
இதில் பல கவிதைகள் நமது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்து பெண் தோழிகளை நினைவூட்டும் விதமாக உள்ளது. சில கவிதைகள் நண்பர்களை நினைவூட்டும் விதமாக உள்ளது .
கபடியில் விழுந்த
காயத்திற்கு மருந்து
உற்ற நண்பன் தூவும்
ஒருபிடி மண்!
அகோரப் பசிக்கு
அதிருசி விருந்து
உயிர்த் தோழி வீட்டு
அகத்திக்கீரை சாதம்!
நண்பர்கள் சிரித்துப் பேசுவது ஒரு சுகம்தான். அம்மா, அப்பா ஏன் மனைவியிடம் சொல்ல முடியாததைக் கூட நண்பனிடம் சொல்லி ஆலோசனை கேட்பதுண்டு. நட்புக்கு உயர்ந்த இடம் என்றும் உண்டு.
பள்ளிக்கூடங்களில்
பெல் சத்தங்களைப் போலவே
எத்தனை இனிமையானது
நண்பர்களின் கூட்டுச் சிரிப்பு!
நண்பனுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்து விடுவோம். நமக்கு ஒரு ஆபத்து என்றால் நண்பன் துடிப்பான். தன்னால் முடிந்த உதவிகளை நாம் செய்வோம். அவனால் முடிந்த உதவிகளை நண்பன் செய்வான். நட்பு என்பது மிகவும் உயர்வானது. உன்னதமானது.
ஒரு புள்ளியாய்தான்
உருவானது நட்பு.
வானமாய் அது
வியாபிக்கிறது…!
காலத்தின் சக்கரத்தில்
நட்பொரு
ஞாபக அச்சு ..!
நட்பில் நம்பிக்கை மிக முக்கியம். நண்பனை சந்தேகிப்பது தவறு என்பதை உணர்த்தும் வைர வரிகள் இதோ!
நட்பில் பொய்யில்லை
நண்பனிடம்
பொய்கூறத் தேவையில்லை..!
ஏனெனில்
நட்பில்
அவநம்பிக்கை இல்லை.
நமது பள்ளி நண்பனை எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் முகம் மறக்காது. கல்வெட்டாக முகம் பதிந்து இருக்கும். ஆசிரியர்கள் முகமும் மறப்பதே இல்லை.
உருவம் திரிந்து
உறவுகள் பிரிந்த
எண்பது வயசின்
சுருக்கத்திலும்
மறப்பதே இல்லை.
நண்பனின் முகங்கள்..!
தோழிகளின் முகவரிகள்..!
நூல் முழுவதும் பிடித்த கவிதைகள். எதை எழுதுவது? எதை விடுவது? குழப்பத்தில் ஆழ்ந்தேன். நூலைப் படித்து முடித்ததும், கவிஞர் பா.விஜய் உள்பட என்னுடைய அனைத்து நண்பர்களின் நட்பு பற்றி அசை போட்டு மகிழ்ந்தேன்.
– கவிஞர் இரா. இரவி
நூல்: நட்பின் நாட்கள்
ஆசிரியர்: வித்தகக் கவிஞர் பா.விஜய்
குமரன் பதிப்பகம்
19.கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை-17
விலை: ரூ.60