குரங்கு மனம் வேண்டும்!

வாழ்க்கைக்கான பாடங்களை நாம் எதிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.

பிறரை குளிர வை என்கிறது மின்விசிறி.
பிறருக்கு இடம் கொடு என்கிறது நாற்காலி.
இணைந்து செயல்படு என்கின்றன விரல்கள்.
உயர்ந்து நில் என்கின்றது சிகரம்.

இந்த விதத்தில் குரங்குகளின் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களை நூலாக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர்.

நூலிலிருந்து தேவையில்லாமல் பிறரது பிரச்சனைகளை உள்வாங்கிக் கொண்டு நீங்கள் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்களை செய்யாமல் இருந்து விடக் கூடாது.

சுதந்திரமான சூழலிலும் கூண்டில் அடைக்கப்பட்ட சூழலிலும் தன் இயல்பு மாறாமல் இருக்கிறது குரங்கு. மாற்றம் ஒன்றே மாறாதது என்று யாரும் அதற்கு போதிக்கவில்லை.

ஒன்றை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வது அரிய கலை. மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை வடிவமைத்துக் கொள்வது என்பது மேலும் சிறப்பு. இந்த இரண்டையும் புரிந்து கொள்ளாதவர்கள் தான் மன அமைதி இழக்கிறார்கள். சுயபச்சாதாவையும் தவிக்கிறார்கள்.

தன்னை ஈரப்படுத்திக் கொண்டுவிட்ட ஒரு குழந்தையைத் தவிர யாருமே மாற்றங்களை விரும்புவதில்லை

உங்களுக்கு உள்ள மனப்பிரச்சனை என்ன என்று கண்டறியுங்கள். பெரும்பாலும் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதாகத்தான் இருக்கும். குரங்கை பின்பற்றுங்கள் குறைகள் மறைந்துவிடும்.

புதுமைகளுக்கு தயாராக இருப்பதும் முதன்முதலாக இருப்பதும் தனிப்பெருமை தான் முதல் என்பதற்கு இருக்கும் மகத்துவம் அது.

புதியவற்றுக்கு மனம் தயார் நிலையில் இருக்கும்போது வாழ்வில் பிரமிக்கத்தக்க மாறுதல்கள் உண்டாகும்.

எதுவும் தவறே இல்லை அது பிறரை பாதிக்காத வரை. 

எங்கே பேசுவது என்பதை விட முக்கியம் எங்கே பேசாமல் இருப்பது என்பதை அறிந்து கொள்வது.

அமில வாக்கியங்களும், அனாவசிய வார்த்தைகளும் தேவையா?
வார்த்தைகளை கொட்டுவானேன். நமது பலவீனத்தை வெளிப்படுத்துவானேன்.

மௌனமாக ஒரு புன்னகை மனதில் உள்ளதை உணர்த்தி விடும், பிறருக்கு காயம் படாமல்.

ஆக்கபூர்வமான விஷயங்கள் அமைதியில் பிறக்கின்றன. அழிவு தான் அதிக ஒலியைக் கிளப்பும்.

முன்னெச்சரிக்கையும் அடுத்து வரக்கூடியதை யூகிக்கும் தன்மையும் வாழ்க்கைக்கு மிக அவசியம்.

விசுவாசமான வேலையாட்களை கௌரவத்துடனும் மனிதாபிமானத்துடன் நடத்தத்தான் வேண்டும் .

ஒரே ஒரு தனித்தன்மையை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கூட மாபெரும் வெற்றி ஈட்ட முடியும்.

போட்டி என்பது நாம் எதிர்பாராத கோணங்களில் இருந்து வரலாம்.
நமது புகழும் பதவியும் மேலேறும் போது நாம் எதிர்பாராத கோணங்களில் இருந்து போட்டி எட்டிப்பார்க்கும்.

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளும் தோன்றுவார்கள். கவனம் தேவைப்படும். தொடர்ந்து நம் முக்கியத்துவத்தை பிறருக்கு உணர வைக்க வேண்டும்.

போட்டிகளைத் தாண்டி வர சிறிய வித்தியாசமான சிந்தனைகள் கூட உதவும். மற்றபடி போட்டியை உணராது இருப்பது தான் பல சமயங்களில் பெரிய சரிவுக்கு வழி வகுக்கும்.

மனிதர்கள் என்பவர்கள் தீதும் நன்றும் கலந்து உள்ளவர்கள் தான். நல்லதை மட்டுமே முன் நிறுத்துவோம். அதன் மூலம் மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்வோம்.

குரங்குகள் மிக மிக தூரத்தில் இருக்கும் மரத்திற்கு தாவுவதில்லை. முட்கள் நிறைந்த மரத்திற்கும் தாவுவதில்லை. இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளும்.
அதுபோல நாமும் இருப்போம். இலக்கை அடைவதில் தன்னம்பிக்கை தொடர் முயற்சி இரண்டும் வேண்டும்.

எளிய விதத்தில் இலக்கை அடைவதற்கான தீர்மானமும் பயிற்சி வேண்டும். வாழ்வில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றால் முன்னேற்றத்தை மறந்து விடுங்கள். வேண்டியதை பெற இருப்பதை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலி தனம்.

கொஞ்சம் மாறுபட்ட சிந்தனை, கொஞ்சம் உள்ளுணர்வு, கொஞ்சம் சுறுசுறுப்பு ஆகியவை இணைவதால் இருப்பவற்றைக் கொண்டே நாம் வாழ்வில் பெரும் மாறுதல்களை செய்து கொள்ள முடியும்.

புத்திசாலித்தனமான எளிய பயன்பாடுகளுக்கு நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய தன்மை உண்டு

பிறரது எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து செயல்பட்டால் நம்மை பிறருக்கு அதிகம் பிடிக்கும்.

ஒரு சில நிகழ்வுகள், ஒரு சில வார்த்தைகள் போன்றவற்றால் முறிந்து போன உறவுகளையும் நட்புகளையும் சீர் செய்யுங்கள்.

அவர்கள் இந்த அளவுக்கு நான் பணிந்து போகத் தகுதியானவர்களா என்ற கோணத்தை ஒதுக்குங்கள் அவர்கள் தகுதியானவர்களோ இல்லையோ நீங்கள் பக்குவப்பட்டவர்கள்.

உறவுகள் மட்டும் நட்புகளின் மேன்மையை அறிந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் செயல் அது.

நம்மைச் சுற்றி நாம் எழுப்பிக்கொள்ள வேண்டியது சுவர்களல்ல பாலங்கள்.

சிம்பதி என்ற ஆங்கில வார்த்தைகள் நமக்கு தெரிந்திருக்கும் பரிவு, இரக்கம், கருணை, அனுதாபம்.

ஆனால் நம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கை கலை எம்பதி. ஒன்றின் பிறர் கோணத்திலிருந்து பார்ப்பதே எம்பதி என்பார்கள்.

பிறரது எண்ணங்களை புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்வதோடு நிற்காமல் கை கொடுங்கள். அதுதான் உங்களுடைய உண்மையான புரிதலின் அடையாளம்.

தற்கால நிகழ்வுகளின் வினோதங்களையும் வளங்களையும் சுட்டிக்காட்டுவதற்கும் குட்டிக் கேட்பதற்கும் குறும்பு ஒரு அற்புதமான ஆயுதமாக பயன்படுகிறது.

நாம் சமூகத்துடன் இணக்கமாக வாழ்வது என்பது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவி.

உங்கள் கவலைகளைத் தீர்க்க என்னால் ஆன யோசனைகளை கூறலாம். மற்றபடி கவலைப்படாதே இனி உன் பிரச்சனை தீர்ப்பது என் வேலை என்று கூற முடியாது.

இலக்குகளில் தெளிவு மற்றும் கவனம் சிதறாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.

குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்காதீர்கள். போன்சாய் மரங்கள் ஆகிவிடுவார்கள். அவர்களின் வேர்கள் பூமிக்குள் நன்றாக செல்லட்டும்.
அவர்களின் கிளைகள் நான்கு விரிந்து பரவட்டும்.

மறந்தும் உங்கள் மனதின் வக்கிரங்களை உங்கள் குழந்தைகளின் மனதில் புகுத்தி விடாதீர்கள்.

பட்டாம்பூச்சியை உங்களுக்கு நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதை கைகளுக்கும் பொத்தி வைக்கக் கூடாது. சுதந்திரமாக பறக்க விடுங்கள். அது சுற்றி அலைந்து விட்டு உங்கள் தோள்களில் வந்து உட்காரும். அதுதான் தெளிந்த உறவு.

பிறரிடமிருந்து எதை கற்றுக் கொள்கிறோம் என்பது ஒரு கலை. சில சமயம் எதிர்பாராத கற்றல்களும் நடைபெறும்.

அநீதியை பார்க்கும்போது அமைதியாய் இருக்காதீர்கள். கல்லறையில் இருக்கும் போது நீங்கள் அமைதியாக இருப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும்.

முக்கியமாக நம்மைச் சுற்றி நடக்கும் அநீதிகள் நம் ஆர்வத்தையும் முன்னேற்றத்தையும் ஒருபோதும் குலைத்து விடக்கூடாது. அநீதிகள் ஒருபோதும் உங்கள் மனதில் உள்ள தீப்பொறியை அணைத்து விட அனுமதிக்காதீர்கள்

மறுப்பதற்கான காரணத்தைச் சொல்லும்போது அது சுருக்கென்று சில வார்த்தைகள் மட்டும் அமைய வேண்டும். 

சிலர் தொடக்கத்தில் தவறான நம்பிக்கை கொடுத்துவிட்டு கடைசியில் மறுப்பார்கள். இதில் தான் உறவு சிக்கல்கள் உண்டாகும் .

மனசாட்சியின் மறுப்புக்கு சவால் விடக்கூடிய சூழல்களில் நாம் உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

உங்களுக்கான சவால்களை குறைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் எல்லைகளை பெருக்கிக் கொள்ளுங்கள்.

உணர்வுகளை வெளிக்காட்டும் போதுதான் உறவுகள் பலப்படுகின்றன.

மானிடர்களுக்கு தேவை மௌனம் அல்ல. அன்பின் வெளிப்பாடு அதுவும் வார்த்தைகளாய்.

வாழ்வில் வெற்றி பெற, புதுரத்த பாய்ச்சலோடு புறப்பட, சவால்களின் எதிர்கொள்ள, சாதித்த மனிதர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள முடியும் என்பது இல்லை.

சாதாரணமாக நாம் நினைக்கும் குரங்கிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம் என்று மாத்தி யோசிக்க வைக்கிறது இந்நூல்.

சீனி சந்திரசேகரன்

நூல்: குரங்கு மனம் வேண்டும்
ஆசிரியர்: ஜி.எஸ்.எஸ்
பதிப்பகம்: புதிய தலைமுறை
விலை: ரூ.76
பக்கங்கள்: 112

You might also like