மண் வாசனைக் கலைஞன் – வினுசக்கரவர்த்தி!

வினுசக்கரவர்த்தியும் தானும் ரஜினியின் ‘சிவா’ படத்தில் நடித்தபோது நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் ராதாரவி.

 “வினுசக்கரவர்த்தி அண்ணன் எப்போதும் நல்லா டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணுவார். வீட்டிலிருந்து வெள்ளைப் பேண்ட், வெள்ளை சட்டை எல்லாம் போட்டுக்கிட்டு இன் பண்ணி, கூலிங் க்ளாஸ் மாட்டிக்கிட்டு வந்தார்.

அப்போது இவர் நடிக்கும் வேறு ஒரு படத்தோட ஷூட்டிங் பம்பாய்ல நடக்க இருந்தது. சிவா படத்தோட ஷூட்டிங் முடித்துக்கொண்டு மும்பை செல்ல வேண்டும் என்பது அவரது திட்டம். அதற்காகவே அவர் வெள்ளை உடையில் வந்திருந்தார்.

அப்போது, “ஏன்ணே இப்படி வேஷம் கட்டி வந்திருக்கீங்க? அங்க ஃபைட் சீன்ல வில்லனான உங்களை ஹீரோ கீழே போட்டுப் புரட்டி எடுக்கப்போறார். அதுக்கா இப்படி?”னு கேட்டேன்.

“இல்லை ரவி, ஷூட்டிங் முடிஞ்சதும், குளிச்சிட்டு ஃபிளைட்ல ஏறி உக்கார்ந்தா ச்சும்மா ஜம்முன்னு தூங்கிட்டு போகணும். அதுக்குத்தான் இப்படி”ன்னு சொன்னார்.

ஆனா, சண்டைக் காட்சி முடிய நேரமாகி அப்படியே அழுக்குத் துணியோடு ஃபிளைட் பிடிக்க ஓடினார் வினுசக்கரவர்த்தி அண்ணன். இதை எல்லாம் பார்த்த ரஜினி அன்னைக்கு விழுந்து விழுந்து சிரிச்சார். இதுதான் வினுசக்கரவர்த்தி அண்ணன்.

இன்னொரு சம்பவம் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். அவர் ஒரு படம் எடுக்க ஆரம்பித்து ஒரே நாள் ஷூட்டிங்கோடு நிறுத்திக் கொண்டார்.

”ஏன்ணே?”னு கேட்டேன்.

“இல்லை… இந்தப் படம் சரியா வந்தாலும், போட்ட காசுகூட கைக்கு வராதுன்னு தோணுது. அதான் நிறுத்திக்கிடேன்”னு சொன்னார்.

அந்தப் படத்துல நடிக்க நடிகர் நடிகையருக்கு அட்வான்ஸாகக் கொடுத்திருந்த பணத்தைக்கூட அவர் திரும்பக் கேட்கவில்லை’’ என்கிறார்.

வினுசக்கரவர்த்தி வாழ்வின் இன்னொரு கோணத்தைச் சொல்கிறார், அவரோடு மிகவும் நெருங்கிப் பழகிய நடிகர் சிவகுமார்.

“அந்தக் காலத்தில் இருந்துவந்த நீள நீள வசன பாணியை  ‘வண்டிச்சக்கரம்’,  ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ போன்ற படங்களில் உடைத்திருப்பார் வினுசக்கரவர்த்தி.

எனக்குத் தெரிந்தவரை சினிமா வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்து நடத்திக்கொண்டு போனவர்களில் வினுசக்கரவர்த்தி முக்கியமானவர்.

கரடுமுரடானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் அவரைப் பற்றிச் சொல்வார்கள்.

இவையெல்லாம் ஒழுக்கமாக இருக்க அவர் எடுத்துக் கொண்ட மெனக்கெடல்களாகத்தான் இருக்கும்.

அதனால்தான் அவரது பிள்ளைகளை நல்லவிதமாக வளர்த்து ஆளாக்கினார். ஒரு மகன்; ஒரு மகள். மகன் சரவணபிரியன் லண்டனில் மருத்துவர். மகள் சண்முகபிரியா அமெரிக்காவில் பேராசிரியர்.

பரபரப்பான சினிமா வாழ்வையும் அமைதியான குடும்ப வாழ்க்கையும் பெற்ற, எனது நண்பர் வினுசக்கரவர்த்தியின் புகழ் நிலைத்து நிற்க வேண்டும்’’ என்றார் சிவகுமார்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like