கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்புக் கூட்டத் தொடரில், காலாவதியான 76 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சர் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த ஜூலையில் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மாநிலங்களவையில் விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், “கடந்த 2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் வாழ்வையும் தொழில் புரிவதையும் எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை 1,562 காலாவதிச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.