மூப்பனார்!

த.மா.கா தலைவர் மூப்பனாரின் பிறந்தநாளையொட்டி ஏ.கோபண்ணா வெளியிட்ட மலரிலிருந்து சில குறிப்புகள்.

* தனக்கு மிகவும் பிடித்தவர்களை ‘செல்லப் பெயர்’ போட்டு அழைப்பார் மூப்பனார்!

* திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தான் வழங்குகிற அன்பளிப்பை அவர் நேரடியாக வழங்காமல் தனது உதவியாளர் மூலமாகத்தான் வழங்குவார். தான் வழங்குகிற அன்பளிப்பு பிறருக்குத் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

* புதுடில்லியில், அவர் தனது காரை தானே ஓட்டிக் கொண்டு செல்வார். மிக நன்றாக கார் ஓட்டுவார். வேகமாக ஓட்டுவார். இது நம்மூர் அரசியல் தலைவர்களிடம் இல்லாத பழக்கம். டில்லியில், தானே காரோட்டும் ஒரே தென்னந்தியத் தலைவர் இவர்தான். கார் ரசிகர்.

* நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்வது மிகவும் பிடிக்கும். யார் விபூதி, குங்குமம், பிரசாதம் கொடுத்தாலும் செருப்பைக் கழற்றிவிட்டுத்தான் வாங்குவார். யார் கார் வாங்கினாலும் இவரிடம் காட்டுவது வழக்கம். அதில் சவாரி செய்து மகிழ்வார்.

* ஜெயகாந்தன் போன்ற நெருங்கிய அறிவு ஜீவிகளை மிகவும் மதிப்பார். அவர்கள் தன் எதிரில் புகைபிடிப்பதை மிகவும் கனிவோடு ரசித்து மகிழ்வார்.

* ஏஸி ஓடினாலும் அறையின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். இயற்கை காற்றோடு ஏஸி ஈரப்பதத்தை விரும்புவார்.

* கர்நாடக சங்கீதம் மிகவும் பிடிக்கும். குறிப்பாக நாதஸ்வரம். திருமண நிகழ்ச்சி களில் நாதஸ்வரக் கச்சேரியை நிறைய நேரம் ரசிப்பார். நாதஸ்வரக் கலைஞர்களும் மிக நன்றாக வாசிப்பார்கள். அவர்களைப் பாராட்டிவிட்டுத்தான் செல்வார்.

நாட்டியங்களை மிகவும் உன்னிப்பாக ரசிப்பார். ஜதி நன்றாகத் தெரியும்.

* வாரிசு அரசியலில் இவருக்கு நம்பிக்கை இல்லை. யாரையும் தன் வாரிசாக முன் நிறுத்தியது இல்லை. எல்லாம், ஓர் அளவோடு இருக்கவேண்டும் என்று விரும்புவார்.

* எப்போதும் வெள்ளையாக ஆடை அணிவார். வேட்டியும், சட்டையும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும். உள்ளாடை உட்பட எல்லாமே கதர்தான். லுங்கி அணியும் பழக்கம் கிடையாது.

* இந்தியாவில் தயாராகும் சாதாரண வாட்ச்களையே அணிவார். சாதாரண கருப்பு லெதர் ஸ்ட்ராப்தான். மோதிரம் உட்பட தங்க நகைகள் எதுவும் அணியமாட்டார்.

* விதவிதமான மூக்குக் கண்ணாடிகள் நிறைய வாங்கி வைத்துக் கொள்வார். யார் கேட்டாலும் கொடுக்கமாட்டார்.

* குளிப்பது வெந்நீர். சோப், பவுடர் பயன்படுத்தமாட்டார். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கிடையாது. அது போன்று வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தவே மாட்டார்.

* பிளாக் காபிதான் அருந்துவார். காலையில் இட்லி, ரொட்டி, ஆம்லெட். பகலில் சாப்பாடு. இரவு இட்லி, தோசை, அரிசி உப்புமா, பூரி. மிளகாய்ப் பொடி ரொம்பப் பிடிக்கும். அசைவ உணவை விரும்பி ருசித்துச் சாப்பிடுவார். பிரியாணி நன்றாகச் சாப்பிடுவார். ஏரியில் பிடித்த விரால் மீன், சுறாப்புட்டு, இறா ரொம்பப் பிடிக்கும். இனிப்பு மீது அலாதி பிரியம்; நிறைய சாப்பிடுவார்.

* காலையில் 5.00 மணிக்கு எழுந்துவிடுவார். ஆனால், இரவு 1.00 மணிக்கு முன்பு தூங்குவது இல்லை.

* விளையாட்டுகளில் கிரிக்கெட், டென்னிஸ் மிகவும் பிடிக்கும். பழைய சினிமா, குறிப்பா சிவாஜி நடித்த தில்லானா மோகனம்பாள், முதல் மரியாதை, மிருதங்க சக்கரவர்த்தி ஆகிய படங்களை நிறைய தடவை போட்டு திரும்பத் திரும்பப் பார்த்துள்ளார். (அரசியலில் சிவாஜியோடு கருத்து வேறுபாடு இருந்த காலங்களிலும்கூட படங்கள் பிடிக்கும்.) அவரது

* நிறைய தொலைபேசி எண்களை ஞாபகம் வைத்திருப்பார். நெருங்கியவர்களிடம் அவரே போன் செய்து குரலை மாற்றிப் பேசி அன்பாகக் கிண் டல் செய்த பிறகே பேச்சைத் தொடங்குவார்.

* சில மாதங்கள் முன்பு வரை செயின் ஸ்மோக்கர். சமீப காலமாக சிகரெட் புகைக்கவும், வெற்றிலை பாக்கு போடவும் டாக்டர்கள் தடை விதிக்க. தற்போது வாய்மணக்க வெறும் ஏலக்காய், கிராம்புதான்.

*விதவிதமான சூட்கேஸ் வாங்கிப் பயன்படுத்துவார். சூட் கேஸில் பொருட்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்.

* திடீரென்று கோபம் வரும். அதுவும் மிகவும் வேண் டியவர்களிடம் மட்டுமே கோபத் தைக் காட்டுவார்.

* நிகழ்ச்சிக்கு தேதி கேட்டால் மிகவும் யோசித்துதான் தேதி கொடுப்பார். தேதி கொடுத்துவிட்டால் எப்படியாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடுவார்.

தொகுப்பு: யூகி

You might also like