‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு நேற்று 73 வயது முடிந்து, 74 வயது பிறந்துள்ளது. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அமிதாப்பச்சன், கமல்ஹாசன், ஆமிர்கான், ஷாருக்கான், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட நட்சத்திரங்களும் வாழ்த்து கூறினர். ரஜினியைப் பார்க்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
படப்பிடிப்பில் இருந்ததால் ரஜினியை அவர்களால் பார்க்க முடியவில்லை. ரசிகர்களுக்கு ரஜினியின் உதவியாளர் இனிப்பு வழங்கினார்.
பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் 170 வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. படத்துக்கு ‘வேட்டையன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.
ஜெய் பீம் படத்துக்கு பிறகு த.செ.ஞானவேல் டைரக்ட் செய்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும் அமிதாப் பச்சன் வழக்கறிஞராகவும் நடிக்கின்றனர். பட அறிவிப்புடன் நேற்று டீசரும் வெளியிடப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புத்தகத்தை ரஜினி படித்துக் கொண்டிருப்பது போல் டீசர் தொடங்குகிறது. அடுத்த ஷாட்டில் லத்தியுடன் நடந்து வருகிறார்.
இந்தக் காட்சி ரஜினி, காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது. ‘குறி வச்சா இரை விழணும்’ என ரஜினி பேசும் வசனத்துடன் டீசர் முடிகிறது.
‘ஜெயிலர்’ படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் காணப்பட்ட ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் கறுப்பு முடியும், ட்ரீம் செய்யப்பட்ட வெள்ளை தாடியுமாக மிடுக்குடன் காட்சியளிக்கிறார்.
‘வேட்டையன்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது.
மும்பையில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இப்போது கன்னியாகுமரி பகுதியில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழில் ஏற்கனவே வேட்டைக்காரன், வேட்டையாடு விளையாடு, வேட்டை ஆகிய பெயர்களில் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-பாப்பாங்குளம் பாரதி.