– எழுத்தாளர் நா.பார்த்தசாரதி
நா.பார்த்தசாரதி. குறிஞ்சி மலர் உள்ளிட்ட நிறைய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர்.
தீபம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த அவர் ‘தினமணிக் கதிர்’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
தீபம் இதழில் ‘இலக்கிய மேடை’ என்ற பகுதியில் வாசகர்களுக்குப் பதில் அளித்தார் பார்த்தசாரதி.
அவற்றில் சில உங்கள் பார்வைக்கு :
கேள்வி : அரசியல்வாதிக்கும், சினிமாக்காரர்களுக்கும் கிடைக்கும் விளம்பரம் இலக்கியவாதிகளுக்கோ, விஞ்ஞானிக்கோ கிடைப்பதில்லையே?
நா.பார்த்தசாரதி: நம் நாட்டின் சாபக்கேடு அது. அறிவும், விஞ்ஞானமும் இங்கு இரண்டாம் பட்சமானவையாகக் கருதப்படுகின்றன. சினிமாவும், அரசியலுமே முதலிடம் பெறுகின்றன.
கேள்வி : சராசரி மலையாளிக்கும், சராசரித் தமிழனுக்கும் என்ன வித்தியாசம்?
நா.பார்த்தசாரதி: சராசரி மலையாளி தாய்மொழிப் பற்றைச் சொல்லிலும், செயலிலும் காட்டுவான். கடைப்பிடிப்பான். தாய் மொழிப் பத்திரிகைகள், புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கி ஆதரிப்பான். புகழ்வான். போற்றிப் பாதுகாப்பான்.
சராசரித் தமிழன் தாய்மொழிப் பற்றை மேடைகளில் ஆவேசமாகக் காண்பிப்பான். ‘உயிர் தமிழுக்கு – உடல் மண்ணுக்கு’ என்று டயலாக் பேசுவான். சுவர்களில் எழுதி முழுக்குவான்.
நடைமுறையில் சினிமாவுக்கும், சாராயக் கடைக்குமே காசு செலவழிப்பான். தமிழைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்க மாட்டான்.
கடன் வாங்கியாவது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்ப்பான். ஆங்கிலேயரைப் போல் உடையணிவான். அப்படித் துரையாகத் தலை கனத்துத் திரிவான்.
– இது தான் வித்தியாசம்.
கேள்வி :எழுத்தாளர்கள் எதிலாவது ஒற்றுமையாக இருக்கிறார்களா?
நா.பார்த்தசாரதி: எதிலும் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் திடமான ஒற்றுமையோடு இருந்து வருகிறார்கள்.
கேள்வி :தமிழ்ப் பத்திரிகைகளின் போட்டியில் ஆரோக்கியம் இருக்கிறதா?
நா.பார்த்தசாரதி: நாகரிகம் கூட இல்லை. அப்புறம் எப்படி ஆரோக்கியம் இருக்க முடியும்.
பல பத்திரிகைகள் விஷயத்தின் தரத்தை நம்புவதைவிட, கவர்ச்சிப் படங்களைக் காட்டி மயக்குவதற்குத் தொடங்கிவிட்டன.
– வல்லிக்கண்ணன் தொகுத்த ‘தீபம் யுகம்’ என்ற நூலில் இருந்து ஒரு பகுதி.