தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள்!

-ரவிகுமார் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது.

இதை விசிக எம்.பி  துரை.ரவிகுமார் கேள்விக்கானப் பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்பியான ரவிகுமார் எழுப்பியக் கேள்வியில், ‘விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீட்டுக்கான தொகையை உயர்த்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?

2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கிய தொகை வருட வாரியாக தெரிவிக்கவும்.

இந்தியாவில் இருக்கும் குடிசை வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு? மாநில வாரியாக விவரங்களைத் தருக’ எனக் கேட்டிருந்தார்.

இக்கேள்விகளுக்கு மத்திய ஊரகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில் தெரிவித்ததாவது:

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை 2024 மார்ச் வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது. இதன் கீழ் இந்தியா முழுவதும் 2.95 கோடி வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தற்போதைக்கு வீட்டுக்கான தொகையை உயர்த்தும் திட்டம் அரசிடம் இல்லை.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்படி கோடி ரூபாய்களில் கடந்த 2016-17-ல் ரூ.690.89, 2017-18 இல் ரூ.848.48, 2018-19 இல் ரூ.502.79, 2019-20120 இல் ரூ.487.52, 2020-21 இல் ரூ.78.62 மற்றும் 2021-22 இல் ரூ.928.92 கோடி அளிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் தமிழகத்துக்கு 2016-17 முதல் 2021-22 என கடந்த ஆறு ஆண்டுகளில் 3,536.92 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்துக்கு செலவாகும் தொகையில் 60 சதவிகிதம் மத்திய அரசும், மீதமுள்ள 40 சதவிகிதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர், இந்திய அளவில் மாநில வாரியாக குடிசை வீடுகள் எண்ணிக்கைகளையும் அட்டவணையாக மக்களவையில் சமர்பித்திருந்தார்.

இதில், 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக, பொருளாதார கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குடிசை வீடுகளின் எண்ணிக்கை தரப்பட்டிருக்கிறது.

2.95 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டுவது என்ற இலக்கு அந்த கணக்கெடுப்பில் கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

வழங்கப்பட்டிருக்கும் அட்டவணையின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழ்நாட்டில் சுவர், கூரை இரண்டும் தற்காலிகமானதாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை 3,71,382, சேறு, மூங்கில், முதலானவற்றைக் கொண்டு சுவர் அமைக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4,45,459, கீற்று, இலை, தழை கொண்டு அமைக்கப்பட்ட கூரை உள்ள வீடுகளின் எண்ணிக்கை 18,63,373 என்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதில் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு பெறுவதற்கான தகுதி படைத்தவர்கள் என்பது பல்வேறு வரையறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

அந்த விதத்தில் தான் ஒட்டுமொத்தமாக 2.95 கோடி வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று அரசாங்கத்தால் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்தியாவிலேயே குடிசை வீடுகள் அதிக எண்ணிக்கையிலான மாநிலமாக பிஹார் இருக்கிறது.

இரண்டாவதாக உத்தர பிரதேசமும், மூன்றாவதாக மேற்கு வங்கமும் உள்ளன. புதுச்சேரியில் மொத்தமுள்ள குடிசைகளின் எண்ணிக்கை 59,688 எனப் பதிவாகி உள்ளன.

You might also like