நாடு – மருத்துவர்கள் எங்கு பயிற்சி பெற வேண்டும்?!

எளிய மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும் படமொன்றைப் பார்க்க வேண்டும். யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதோடு, சினிமாவுக்கான சுவாரஸ்யமும் கலந்திருக்க வேண்டும்.

இவ்விரண்டு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்த திரைப்படங்களை இதற்கு முன்பும் நாம் கண்டு ரசித்திருக்கிறோம். அந்த வரிசையில் இடம்பெறுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கியுள்ள ‘நாடு’ படத்தின் ட்ரெய்லர்.

படமும் அது போன்றதொரு எண்ணத்தை உருவாக்குகிறதா?

மலைநாட்டில் மருத்துவமனை!

கொல்லிமலை அருகேயுள்ள தேவநாடு கிராமத்தில் அரசு மருத்துவமனைக்கான கட்டடம் இருக்கிறது. ஆனால், அங்கு எந்த மருத்துவரும் பணி செய்யத் தயாராக இல்லை. இதனால், அது பூட்டியே கிடக்கிறது.

தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மருத்துவராக வந்தால் மட்டுமே அப்பிரச்சனை தீருமென்று அக்கிராம மக்கள் எண்ணுகின்றனர். அதற்கேற்ப, அமுதா என்ற மாணவி மருத்துவம் படிக்கத் தயாராகிறார். ஆனால், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

தங்களிடம் இருந்த நம்பிக்கையை அந்த மரணம் துடைத்தெறிந்த பிறகு, தங்கள் ஊருக்கு ஒரு மருத்துவர் வேண்டுமென்று அம்மக்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். அவர்களோடு சமரசம் பேச வந்த மாவட்ட ஆட்சியர், ஒரு மருத்துவரை பணியமர்த்துவதாக வாக்களிக்கிறார். அதேநேரத்தில், அந்த ஊரை விட்டுச் சென்றுவிடாதவாறு அவரை நன்றாகக் கவனித்துக் கொள்வது உங்கள் பொறுப்பென்றும் தெரிவிக்கிறார். அதன் தொடர்ச்சியாக, அமுதாவின் சகோதரர் மாரி (தர்ஷன்), அதுவே தங்களது முழு நேர வேலையாக இருக்க வேண்டுமென்று ஊர் மக்களிடம் கூறுகிறார்.

அடுத்த சில நாட்களில், ஷோபனா (மஹிமா நம்பியார்) எனும் மருத்துவர் தேவநாடு மருத்துவமனைக்கு வருகிறார். அவரது பாட்டியும் உடன் வருகிறார். ஒரு ஆண் மற்றும் பெண் செவிலியரும் அங்கு பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள்: இருவருமே சில நாட்கள் இடைவெளியில் வேறு பகுதிகளுக்கு மாற்றலாகிச் சென்றுவிடுகின்றனர்.

வேண்டாவெறுப்பாக தேவநாட்டில் பணியாற்றும் ஷோபனா, மெல்ல மெல்ல மாரி மற்றும் அக்கிராமத்து மக்களின் அன்புக்கு அடிமையாகிறார். மாரியின் தந்தையோ (ஆர்.எஸ்.சிவாஜி), ‘நான் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் இங்கு பணியாற்ற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார். அதற்கு ஷோபனாவும் சம்மதிக்கிறார்.

இந்தச் சூழலில், மாரியின் தந்தைக்குப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதைக் கண்டறிகிறார் ஷோபனா. நோய் என்னவென்று தெரியாவிட்டாலும், தன்னை மரணம் நெருங்குவதை உணர்கிறார் மாரியின் தந்தை. தனது மரணத்தை மருத்துவர் ஷோபனாவிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கிராம மக்களிடம் அவர் கேட்டுக்கொள்கிறார். அதே நேரத்தில், இரட்டையராகத் தன்னுடன் பிறந்த சகோதரனை ஊருக்கு அழைத்து வருமாறு மாரியிடம் கூறுகிறார்.

அவரது இறப்புக்குப் பிறகு, சித்தப்பாவைத் தேடி காடு மேடு மலைகளில் சுற்றித் திரிகிறார் மாரி. ஒருவழியாக, அவரைக் கண்டுபிடிக்கிறார். தேவநாட்டுக்கு அழைத்து வருகிறார். ஆனால், அவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது அடுத்த சில நாட்களில் தெரிகிறது. இதற்கிடையே, அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர் அவரது பெற்றோர்.

தான் செய்த சத்தியத்திற்காக, அந்த மலைநாட்டில் ஷோபனா தொடர்ந்து மருத்துவராகப் பணி செய்தாரா அல்லது திருமணம், வெளிநாட்டு வேலை போன்ற காரணங்களுக்காக அங்கிருந்து கிளம்பினாரா என்பதைச் சொல்கிறது ‘நாடு’ படத்தின் மீதி.

ஊருக்கு வந்த மருத்துவர், அங்கிருந்து மாற்றலாகிவிடக் கூடாது என்று மக்கள் செய்யும் அலப்பறைகளே இக்கதையைச் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. அதேநேரத்தில், இது போன்று நம் நாட்டில் எத்தனை மலைக்கிராமங்கள் மருத்துவர்கள் இல்லாமல் உள்ளன என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ஈர்க்கும் நடிப்பு!

தர்ஷன் இதில் நாயகனாக நடித்துள்ளார். படம் முழுக்க இறுக்கமான முகத்துடனும் வெள்ளந்தியான பேச்சுடனும் திரிகிறார். அவரது கட்டுமஸ்தான உடல்வாகையும் மீறி, அழும் காட்சிகளில் நம்மைக் கலங்க வைக்கிறார். அது போன்ற தருணங்களே, இப்படத்தில் தான் ஏற்ற பாத்திரத்திற்காக அவர் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

போலவே, இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் மஹிமா நம்பியாரின் மீதிருந்து நம்மால் பார்வையை அகற்ற முடிவதில்லை. அந்த அளவுக்கு அவரது நடிப்பு நம்மை ஈர்க்கிறது.

ஊர்த் தலைவராக வரும் சிங்கம்புலியும், அவரது மகன் ஜோகியாக வரும் இன்பா ரவிக்குமாரும் அவ்வப்போது ‘காமெடி ஒன்லைனர்’களால் சிரிப்பூட்டுகின்றனர்.

சோகமே உருவாக படத்தில் வந்து போயிருக்கிறார் மறைந்த ஆர்.எஸ்.சிவாஜி. அவரது இருப்பே, இப்படம் நீண்டநாட்கள் காத்திருப்பில் இருந்ததைச் சொல்லிவிடுகிறது.

நீரோடை போலப் பெரிதாகத் திருப்பங்கள் இல்லாத ‘நாடு’ திரைக்கதையில், லேசான திருப்பத்தைத் தருவது அருள்தாஸ் வரும் காட்சிகள் தான். ஒரு அரசு அதிகாரியாக அவர் தோன்றியிருப்பது இதுவே முதன்முறை என்று எண்ணுகிறேன்.

இவர்கள் தவிர்த்து தேவநாடு மக்கள், மருத்துவமனை பணியாளர்கள், அருள்தாஸ் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என்று நூற்றுக்கணக்கானோர் இப்படத்தில் தலைகாட்டியுள்ளனர். அந்த ஒரு விஷயமே, இது மினிமம் பட்ஜெட் படம் என்ற எண்ணத்தை மறக்கடித்துவிடுகிறது.

பசுமையான மலைப்பகுதிகளை அழகுறக் காட்டி அசரடிக்கிறது கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு. முக்கியமாக, அங்குள்ள வீடுகளின் உட்புறத்தைக் காட்டும் ஷாட்களில் அவரது பணி வியப்பூட்டுகிறது.

துள்ளலை விதைக்கும் பாடல்களைத் தந்துள்ள இசையமைப்பாளர் சி.சத்யா, பின்னணி இசையில் நம் மனதை வருடுகிறார்.

லால்குடி இளையராஜாவின் கலை வடிவமைப்பு ஆங்காங்கே அழகியலை முன்னிறுத்தினாலும், ஒரு மலைக்கிராமத்து மக்களின் வாழ்வை நேரில் பார்க்கும் உணர்வை ஊட்ட உதவியிருக்கிறது.

நேர்கோடு போலத் தொடரும் கதையைப் பார்வையாளர்கள் பின்தொடரும் வகையில் அமைந்துள்ளது பொன் கதிரேஷின் படத்தொகுப்பு. ஆடை வடிவமைப்பு, ஒப்பனை துறை கலைஞர்கள் கூட அதிகம் மெனக்கெடாதது போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக, அதிக உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர்.

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ படங்கள் தந்த இயக்குனர் எம்.சரவணன், சமீபத்தில் ‘ராங்கி’ படம் மூலமாக நம் கவனத்தை ஈர்த்தார். அதிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட வகையில் ‘நாடு’ தந்திருக்கிறார்.

இந்த ஒரு விஷயமே மிகப்பெரிய அளவில் அவர் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்க வேண்டும். ஆனால், நாடு படத்திற்கான விளம்பர உத்திகள் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

அதனாலேயே, இது ஒரு வழக்கமான படம் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் உருவாகிவிட்டது. உண்மையில், இது வழக்கத்திற்கு மாறான அனுபவத்தைத் தரும் ஒரு நல்ல படம்.

ஏன் பார்க்க வேண்டும்?

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக நாடு படத்தின் மீது ரசிகர்கள் பெரிதாக அக்கறை காட்டவில்லை. மழை நீர் வடிவதற்குள் இப்படம் திரையரங்குகளில் இருந்து அகன்றுவிட்டது. இது, உண்மையிலேயே சோகமான விஷயம் தான்.

அதேநேரத்தில், ஓடிடியில் வெளியாகும்போது இப்படம் கொண்டாடப்படுவதற்கான வாய்ப்புகள் அனேகம் என்பதை மறுக்க முடியாது. அதற்காகவே, இந்த விமர்சனத்தை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உணர்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ ஆயிரம் மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் பூர்த்தி செய்கின்றனர். அதனை நிறைவு செய்வதற்கு, அவர்கள் பயிற்சி மருத்துவராகவும் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.

அப்படிப்பட்ட மாணவ மாணவியர் அனைவரையும் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை போக்குவரத்து வசதிகளற்ற இடங்களில், மலைப்பாங்கான பிரதேசங்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டுமென்ற முடிவை ஏன் அமல்படுத்தக் கூடாது? வெளிநாடுகளில் ராணுவத்தில் கட்டாயம் சில காலம் பணியாற்ற வேண்டும் என்றிருப்பது போல, மருத்துவத் துறையிலும் அப்படியொரு நிலையை உருவாக்கினால் அரசு மருத்துவமனைகளின் சேவை அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் நிலை உருவாக வாய்ப்பு ஏற்படும் அல்லவா?

நன்றாகத் தேர்ந்த, முதிர்ந்த, அனுபவச் செறிவு கொண்ட மருத்துவரின் வழிகாட்டுதல் அம்மக்களுக்குக் கிடைக்காமல் போனாலும், குறைந்தபட்ச சிகிச்சைகள் கிடைக்க இது வழி செய்யும் அல்லவா?

அம்மக்களோடு பேசிப் பழகும் தருணங்கள் அம்மாணவர்களிடத்தில் அங்கேயே சேவையாற்றும் எண்ணத்தையும் விதைக்கக்கூடும் அல்லவா? இந்தக் கேள்விகளை நம்முள் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது ‘நாடு’ திரைப்படம். இம்முடிவை எடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு என்றபோதும், இதனை அமல்படுத்தினால் குறைந்தபட்சத் தீர்வுகள் கிடைக்கும் என்பதைக் கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும் கவனத்தில் கொள்ளலாம்.

வழக்கமான சினிமாத்தனமான முடிவு இப்படத்தில் கிடையாது. படம் பார்க்கும் நாமும் அதனை எதிர்பார்ப்பதில்லை என்பதே இக்கதையின் வலுவைக் காட்டுகிறது.

இன்னும் சில நாட்களில் ‘நாடு’ படம் ஓடிடியில் வெளியாகும்போது சமூகவலைதளங்களில் சிலர் ‘இதனை திரையரங்குகளில் பார்க்காமல் விட்டோமே’ என்று உச்சுக் கொட்டுவார்கள். அந்த ‘ச்சே…’ ஒவ்வொரு முறையும் ‘கோலிவுட் பண்டிதர்கள்’ காதுகளை எட்டாமலிருப்பது தான் பெருஞ்சோகம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like