சீராகுமா சிங்காரச் சென்னை?

சுனாமி, 2015 வெள்ளம் என்று ஒவ்வொரு முறையும் இயற்கை தங்கள் இருப்பிடத்தை நாம் அநியாயமாய் ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியபோதும் அரசும், அரசு நிர்வாகமும், நாமும் கொஞ்சமும் திருந்தியதாகத் தெரியவில்லை.

விளைவு மீண்டும் சென்னை நகரம் மழை வெள்ளத்தில் சூறையாடப்பட்டு நரகமாயிருக்கிறது.

2015-ம் ஆண்டு வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புக்குப் பின்னும் கூட, மழை நீர் தேங்காமல் நிற்கவோ, மழைக்காலத்துப் பேரிடர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவோ நாம் முயற்சிக்கவே இல்லை என்பதை மிக்ஜாம் புயல் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது உண்மை .

அரசின் திட்டங்களைச் சரியாக செயல்படுத்தாத நிர்வாகத்தாலும், அதிகாரிகளாலும் அரசின் திட்டங்கள் சரியானபடி மக்களுக்கு சென்றடைவதில்லை என்பதற்கு இந்த மழை நீர் வடிகால் திட்டம் ஒரு எடுத்துக் காட்டு .

“எல்லா மக்களும் அரசு தொடர்புடைய காரியங்களுக்குச் சென்னைக்கு படையெடுப்பதைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தமிழ்நாட்டுக்கு திருச்சியிலும் ஒரு தலைநகர் இருக்கலாம்” என்று அன்று எம்ஜிஆர் சொன்னபோது கிண்டல் செய்து எதிர்த்ததன் விளைவை இன்று சென்னை நகரம் அனுபவித்துக் கொண்டுள்ளது.

சென்னை நகரம் மக்கள் தொகையால் பிதுங்கியிருக்கிறது. தன் எல்லையை 100 கி.மீ. வரை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினால் ஏரிகளை, ஏரியாக்களாக மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு மக்களும் அரசும் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. இதனால் ஒவ்வொரு முறையும் புண்ணுக்குப் புனுகு தடவும் தற்காலிகத் தீர்வை மட்டுமே காண்கிறோம்.

ஏரிகளை ஏரியாக்களாக்கி வீடு கட்டிக்கொண்டுவிட்டு, “நாங்க ஏரியிலே மிதக்கறோம்” என்று புலம்புகிற படித்த முட்டாள்கள் இருக்கும் வரை இந்த மழைக்கால அவலங்களுக்குத் தீர்வு காண்பது கடினம்.

ஏரிகளை ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக்குவதைத் தடை செய்வதும், ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்து கட்டியவற்றை இடித்துவிட்டு அவற்றை மீண்டும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக மாற்றுவதும், மழை நீர் விரைந்து கடலில் கலப்பதற்கான வழி காண்பதும் தமிழக அரசின் உடனடி அதிரடி நடவடிக்கையாக இருக்க வேண்டும். அது மட்டுமே நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

இயற்கையை வெல்ல முடியாது. இயற்கைக்கு பயந்து எங்கும் ஓடி ஒளியவும் முடியாது என்பது உண்மைதான்.

ஆனால் இயற்கையின் சீற்றத்தை, இயற்கையினால் ஏற்படும் இடர்ப்பாடுகளை உரத்து சிந்தித்து இணைந்து செயலாற்றினால் தைரியமாய் எதிர்கொள்ள முடியும்.

எதிர்பாராமல் உள்ளே நுழைந்த உயிர் கொல்லி கொரோனாவையே சமாளித்து சாதித்த நம்மால், அவ்வப்போது வந்து போகும் வார்தாவையும், மிக்ஜாமையும் சமாளிக்க முடியாததா என்ன?

மழையில் வாழ்க்கையைத் தொலைக்கும் தொடர் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்காரச் சென்னையை உருவாக்க எல்லோரும் ஒன்றிணைவோம்!

– உதயம் ராம்

You might also like