பல ஆண்டுகளுக்குப் பிறகு பெருமழை பெய்து தீர்த்திருக்கிறது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மழையினால் உருவான பாதிப்புகளே பெரும்பாலும் ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதிலும் சென்னையில் வழக்கமாக மழை வந்தாலே பாதிக்கப்படும் வட சென்னை போன்ற இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, போட்கிளப் சாலை, மைலாப்பூர் போன்ற பகுதிகளுக்குள் எல்லாம் வெள்ளப்பாதிப்பு வந்துவிட்டது என்பது முக்கியமான செய்தியாகக் காரணம்- அங்கு வசிக்கும் உயர்குடி மக்கள்.
சென்னை புறநகர்ப்பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வீட்டின் கீழ்த்தளங்களில் குடியிருந்தவர்கள் நொந்து போனார்கள். வீட்டிற்குள் புகுந்த நீரை வெளியேற்ற முடியாத நிலையில், அவர்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியேறினார்கள். முதலை, பாம்புகளின் நடமாட்டம் அவர்களைப் பீதியடைய வைத்தது. நாய், பூனை, எலி போன்றவை தண்ணீரில் உயிரைவிட்டு மிதந்து போனதைப் பார்க்க முடிந்தது.
சென்னையில் ஒரே இடத்தில் இவ்வளவு செ.மீ அளவுக்கு அடர்த்தியான மழை பெய்து தீர்த்திருக்கிறது. நிச்சயம் இந்த மழைக் காலத்தைப் பாதிப்புக்குள்ளான யாரும் சாமானியமாக மறந்துவிட மாட்டார்கள்.
பல மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன. சாலைகளில் திடீர்ப்பள்ளங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் பெருநகர வாசிகள் தவித்துப் போனார்கள். பாலை விநியோகித்த வேன்களில் அதை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.
மின்சாரம் இல்லாத நிலையைச் சில நாட்களுக்குப் பொதுமக்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. போக்குவரத்து முழுக்க சீ்ர்குலைந்து போனது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்குக் கூட விடுமுறை அறிவிக்கப்பட்டன.
ஆனால் இந்த நிலையிலும் மாநகராட்சி, மின்துறை, சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கால நேரம் பாராமல் நகரத்தை ஒழுங்குக்குக் கொண்டுவர தங்களால் இயன்ற அளவுக்குக் கடுமையாக உழைத்தார்கள். வீழ்ந்து கிடந்த மரங்களை அறுத்து சாலைகளைச் சீர்படுத்தினார்கள். மற்ற மாவட்டத் தலைநகரங்களில் இருந்து களப்பணியாளர்கள் சென்னைக்கு வந்து சீர்படுத்தும் பணியில் துணை நின்றார்கள். அரசு உயர் அதிகாரிகளில் குறிப்பிடத்தகுந்த சிலர் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்பட்டார்கள்.
இவ்வளவு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, தொலைக்காட்சிகளில் மழையை எதிர்கொள்வது பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் சில மழை ஆய்வாளர்கள். வழக்கம்போல சமூக ஊடகங்களில் பொங்கித் தீர்த்தார்கள் பலரும். எதிர்க்கட்சிக்காரர்கள் வெள்ளத்தில் கால் நனைத்து 2015 ஆம் ஆண்டுடன் தற்போதைய மழைத்தருணத்தை ஒப்பிட்டுத் தங்களால் இயன்ற அரசியலைப் பண்ணினார்கள்.
“கிரேட்டர் சென்னை’’ என்று நாம் சென்னையைப் பற்றித் தூக்கிப் பிடித்த அடைமொழிகளை இற்றுப் போக வைத்துவிட்டது பெருமழை என்பது தான் கள யதார்த்தம்.
தி.மு.க அரசு என்றில்லை, எந்தக் கட்சி தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும், இப்படியொரு கன மழையை எதிர்கொள்ளத் திணறித்தான் போயிருக்கும்.
பேரிடரின் தாக்கம் இந்த அளவுக்குத் தீவிரத்துடன் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது.
வானிலை எச்சரிக்கைகள் விடப்பட்டு, கடலோரத்தில் மக்கள் கூடுவது கட்டுப்படுத்தப்பட்டு, போதுமான எச்சரிக்கைகள் விடப்பட்டதின் பலன்- உயிர்ச்சேதம் குறைந்திருக்கிறது.
இந்த மழையினால் இனி உருவாகப் போகும் பின்விளைவுகளை, தொற்றுநோய்களை எப்படி நாம் கட்டுப்படுத்தப் போகிறோம்?
இது தான் இப்போதைக்கு ஆரோக்கியம் சார்ந்த முக்கியமான கேள்வி.
மழையின் பின்விளைவுகளில் இருந்து நமது மக்களைக் காப்போம். திரும்பவும் இப்படியொரு மழை வந்தால் திணறிப் போகாத அளவுக்கு நமது நகர்ப்புறக் கட்டுமானத்தை மாற்றியமைப்போம்.
அவரவர் சொந்த இடங்களிலேயே தகுந்த வாழ்வாதாரத்தை உருவாக்கும் சூழ்நிலை அமைந்தால், சென்னை போன்ற பெரு நகரங்களில் இவ்வளவு பெரும் திரளாக மக்கள் தொகை அதிகரித்துச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்காது.
இயற்கையாகச் சென்னையில் இருந்த ஏராளமான ஏரி, குளங்களை எல்லாம் தூர்த்து காங்கிரீட் மயமாக்கி, ஆறுகளைக் கழிவு மயமாக்கி, நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலைக் குலைத்ததின் விளைவைத் தான் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் பின்விளைவாக அனுபவிக்கிறோம் என்பதைக் காலம் கடந்தாவது நாம் உணர வேண்டும். பிறருக்கும் உணர்த்தியாக வேண்டும்.
குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரு நகரங்களில் உள்ள நிலங்களைத் தங்களுக்கு வசதியான ரியல் எஸ்டேட்களாக மட்டுமே கருதித் திட்டங்களை வகுக்கலாம்.
ஆனால் இயற்கைக்கு முன்னால் இந்த வணிகக் கணக்குகள் பொய்த்துப் போய்விடுகின்றன என்பதை உணர வேண்டிய தருணம் இது.
– யூகி