ஒவ்வொரு நாளும் பெய்து கொண்டிருக்கிறது மழை! ஒன்றிரண்டு நாட்கள் பலகணி கம்பிகளில் முகம் புதைத்துக் காத்திருந்து ஏமாந்தபின் கம்பிகளின் ஊடாக கையேந்தி நின்றபோது பிச்சைக் கேட்பது போலவே இருந்தது!
பிச்சை என்றதும் ‘திருடாதே பொய் சொல்லாதே, பிச்சை எடுக்காதே’ என பால பாடம் கற்பித்துப் பாச மழை பொழிந்த அப்பனின் நினைவு வந்தது!
தூறல் போடத் தொடங்கியதுமே மாடு கன்றை கொட்டகையில் கட்டவும், கொடியில் காயப் போட்ட துணிகளை எடுக்கவும், மோட்டாரை நிறுத்தி மூடவும், நனையும் முன்பாக வைக்கோலைப் பிடுங்கி வைக்கவுமென திசைக்கு ஒருவராக தெறித்து ஓடும் வேளையில், நான் மட்டும் ‘ஐ மழை!’ என்றபடி உள்ளிருந்து வெளியே ஓடும் பால்யத்தின் நினைவும் வந்தது!
பட்டணத்துப் பவுசு வாழ்வில் நனைவதொன்றும் அவ்வளவு சுலபமில்லை தெரியுமா?
வீதிக்கு ஓடினால் ஒவ்வொரு ஜன்னலிலிருந்தும் பார்வைகள் ஊசியாத் துளைக்கும்!
அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கழிவு நீர் தொட்டிகள் வழிந்து சாலையில் கலக்கும்!
வாகனங்கள் நிமிடத்துக்கு ஒரு முறை சரசரவென விரையும்! எல்லாவற்றையும் தாண்டி, ஆனந்தமாய் நனைவதென்பது நடக்காத காரியம்!
மொட்டை மாடியில் நனையலாம் என்றால், காயப்போட்டத் துணியெடுக்கும் பாவனையில் நனைவதற்காய் ஓடிய பொழுதொன்றில், பளிங்குப் படிக்கட்டின் ஈரம் வழுக்கிவிட்டு உடம்பெல்லாம் அடிபட்ட அச்சமின்னும் அகலவில்லை.
பிள்ளைகளின் துணையோடு நனையப் போகலாமெனக் காத்திருந்தால், பள்ளி விட்டு அவர்கள் திரும்புவதற்குள் விடைபெற்று விடுகிறது மழை!
கூட்டிலடைபட்டக் குயிலுக்கு ஆனந்த ராகமிசைப்பது இயலாதென்பதுபோல் ஆகிவிட்டதெனக்கு இந்த நகரத்து மழைக் காலம்!
பார்க்கக் கூடாதென உள் வந்து அமர்ந்த பின்னும், தாளத்துக்கேற்றபடி தன்னிச்சையாக உடலசைக்கும் இசைக் கலைஞனின் துடிப்போடு, ஆடவாவென அழைப்பதுபோல் மண்டையைக் குடைகிறது இந்த மழைச் சத்தம்!
அன்பிற்கு மட்டுமா அடைக்கும் தாழில்லை? ஆசைக்கும் தான்! எவ்வளவு நேரந்தான் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது?
இதற்கு மேல் தாள முடியாதென எழுந்து ஓடினேன்!
கைகளை அகல விரித்து கண்களை மூடி அண்ணாந்து நின்றபடி குட்டித் தவமிருந்தேன் கொஞ்ச நேரம்!
பின் தட்டாமாலை சுற்றுவது போல ஒற்றை ஆளாய்ச் சுற்றினேன், வானம் பார்த்து தலைச்சிலுப்பி ஆடிக் களித்தேன்!
திறந்திருந்த வாய் வழியே இறங்கிய சில துளிகள் நா நனைத்து தித்தித்தது!
தேவர்கள் பருகுவதாய்ச் சொன்ன அமிழ்தம் இதுதானென அறியாமல் வீடென்ற சிறையிலிருக்கும் நீங்கள்கூட நனையலாம்!
நிஜத்தில் மழைச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே நினைவுகளில் நனையும் என்னைப் போலவாவது!
நன்றி: வாசுகி லெட்சுமணன் ஃபேஸ்புக் பதிவு