நாம் தினமும் பயன்படுத்துகிற, அனுதினம் நம்முடன் பயணப்படுகிற தொழில்நுட்பங்கள் எல்லாம் நகரத்தை விட்டு தள்ளி இருக்கும் ஒரு கற்பனை கிராமமான ஆதிமங்கலத்து மக்கள் எப்படி எடுத்துகொள்கிறார்கள், எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை சொல்கிறது ஆதிமங்கலத்து விசேஷங்கள் நூல்.
அதாவது அந்த காலத்து மக்கள் புது வரவுக்கு கொடுத்த வரவேற்பை இன்றைக்கு நாம் கற்பனை செய்து சிரிக்கின்ற மாதிரியான ஒரு படைப்பு.
ஆதிமங்கலத்து மக்கள் எல்லாம் வேறு யாருமல்ல. அவர்கள் நம் முன்னோர்கள் தான். அவர்களும் முதல் முறை ஒரு புதுவிஷயத்தைப் பார்க்கும் போதும், பயன்படுத்தும் போதும் இதையெல்லாம் கண்டிப்பாக அனுபவித்திருப்பார்கள் என்பதை எடுத்துரைக்கிறது.
உதாரணத்துக்கு வாகை சூடவா படத்தில் அந்த 2 சின்ன பசங்க “ரேடியோ பெட்டிக்குள்ள ஆளுங்க இருக்காங்கடா”ன்னு சொல்வது போன்றும்,
முதல் முறை ஒரு பேருந்து ஊருக்குள் வரும்போது, கூட்டுவண்டிக் காரன் மனசுல “இதுக்கு எருமைமாட்டை எங்க கட்டி மறைச்சு வச்சிருக்கானுவன்னு தெரியலையே” என்பதும் யோசிக்கூடிய அளவிலாக அமைந்திருக்கும்.
இப்படி அவர்கள் முதன்முதலாக எதிர்கொள்கிற பஸ், லைட், டெலெக்ராம், டெலிபோன், பைக், போட்டோ ஸ்டூடியோ, காலிங் பெல் போன்ற 24 பொருட்களின் ஆதிமங்கலத்து அறிமுகத்தை, ஆதிமங்கலத்து விசேஷமாக ரொம்ப ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
ஊர் மத்தியில் இருக்குற கோவில் மாட விளக்கு போய் தெரு விளக்கு வந்ததும், அந்த கயித்தை (wire) வெட்டின மண்ணெண்ணெய் கிடைக்கும்ணு வெட்டப்போய் உயிரோட விளையாடுறதுலையும் சரி, திருவிழா ஸ்டூடியோல புடிச்ச படத்தை கழுவி தரேன்னு சொல்ற போட்டோக்ராபர் கிட்ட “குடுங்க வீட்டுல போய் நானே கழுவிக்கிறேன்னு” சொல்றவரைக்கும் எல்லா இடமும் நகைச்சுவையுடன் இருக்கும்.
அப்படியாகப்பட்ட நம் மக்களின் ஆரம்ப கால அலப்பறைகளை கற்பனை கிராமமா வடிவமைத்து, சில உண்மைகளையும் கலந்து கூறி இருக்கும் புத்தகம் தான் ஆதிமங்கலத்து விசேஷங்கள்.
புத்தகம் : ஆதிமங்கலத்து விசேஷங்கள்
ஆசிரியர் : கன்னிவாடி சீரங்கம் சிவகுமார் (க. சீ. சிவகுமார்)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 114