‘லியோ’ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார்.
மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் ஹீரோவாக கொடிகட்டி பறந்த பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன் ஆகியோர் விஜயுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.
இவர்கள் தவிர யோகி பாபு, பிரேம்ஜி, சினேகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். வெங்கட் பிரபுவின் நண்பர்களான வைபவ், அரவிந்த் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
’லவ் டுடே’ படத்தின் கதாநாயகி இவானா விஜய்யின் தங்கையாக இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.
விஜயின் 68 வது படம் என்பதால் தற்காலிகமாக ‘விஜய் -68’ என இந்தப் படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
தந்தை – மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிப்பதால், மகன் விஜயை இளைஞனாக காட்ட புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை, இந்தப் படத்தில் பயன்படுத்துகின்றனர்.
இதற்காக வெங்கட் பிரபுவும், விஜயும் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலுக்கு சென்று வந்தனர்.
அங்குள்ள ஸ்டூடியோவில் விஜய், விதம் விதமாக படம் பிடிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது.
மூன்றாம் கட்ட ஷுட்டிங், ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்துள்ளனர்.
வரும் சனிக்கிழமை முதல் 20 நாட்கள் தொடர்ச்சியாக அந்த அரங்குகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
அதை முடித்துவிட்டு விஜய் உள்ளிட்ட படக்குழு துருக்கி செல்கிறது. அங்குள்ள இஸ்தான்புரில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகிறது.
புதியத் தொழில் நுட்ப வேலைக்காக மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் திட்டமும் உண்டு. இந்தப் படத்துக்காக விஜய் பறந்துக் கொண்டே இருக்கிறார்.
- பாப்பாங்குளம் பாரதி.