– சிவாஜியிடம் சொன்ன நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி
நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமான கொண்டு சென்ற கலைஞர்களாக டி.என்.ராஜரத்தினம் துவங்கி காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் என்று நீள்கிற வரிசையில் முக்கியமான பெயர் எம்.பி.என். சேதுராமன்- பொன்னுசாமி.
‘’தில்லானா மோகனாம்பாள்’’ சகோதரர்கள் என்று பெயர் பெற்ற இந்த நாதஸ்வரச் சகோதரர்களில் பொன்னுசாமி அண்மையில் மறைந்திருக்கிறார்.
மதுரையின் இசை அடையாளங்களில் ஒருவராகத் திகழ்ந்த நாதஸ்வரச் சகோதர்கள் இருவரையும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகாமையில் இருக்கிற வீட்டில் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன்.
தங்களைப் பற்றிப் பேசும்போது சற்றுக் கூச்சத்துடன் குரலைக் கீழிறக்கிப் பேசியிருக்கிறார்கள். ‘தில்லானா மோகனாம்பாள்’ படமாக்கப்பட்ட போது சந்தித்த அனுபவங்களை படு உற்சாகத்துடன் பரிமாறியிருக்கிறார்கள். நாதஸ்வரத்தைச் சீவாளி போட்டுச் சற்றும் தயங்காமல் வாசித்துக்காட்டியிருக்கிறார்கள்.
அதிலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜிக்கு முன்னால் ஜில் ஜில் ரமாமணியாக நடித்த மனோரமா அமர்க்களமாக வாசிக்கும் நாதஸ்வர இசையைப் படத்தில் வாசித்தவர் இளைய சகோதரரான பொன்னுசாமி தான். அந்த இசையை நமக்காக அவர் வீட்டில் வாசித்துக் காட்டிய போதும் அதே அமர்க்களம்.
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் கோவில் மண்டபத்தில் நலந்தானா பாட்டுக்கு பத்மினி பரதநாட்டியம் ஆடுவார். அதைப் போலவே 25 வருடங்களுக்கு முன்பு மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவிலில் உள்ள மண்டபத்தில் சேதுராமன்-பொன்னுச்சாமி சகோதரர்கள் நாதஸ்வரம் வாசிக்க அதற்கேற்றபடி அபிநயம் பிடித்து நாட்டியம் ஆடியவர் தற்போது பிரபலமாக இருக்கிற நடன கலைஞரான நர்த்தகி நடராஜ். அந்த நாதஸ்வரமும் சலங்கை ஒலியும் இழைந்த அபூர்வக் காட்சி இப்போதும் நினைவில் ஒலி எழுப்புகிறது.
மதுரை சோமு, எம்.எஸ். சுப்புலெட்சுமி என்று சக கலைஞர்களைச் சொந்த உறவுகளாய் அழைக்கும் சகோதரர்களில் மூத்தவரான சேதுராமனின் மறைவுக்குப் பிறகு தனியாக பொன்னுசாமியையும் சந்தித்திருக்கிறேன்.
அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக- அப்போது அவர்களைச் சந்தித்த இசை அனுபவப் பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு.
மறைந்த தி.மு.க தலைவர் கலைஞரும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் எத்தனையோ விஷயங்களில் முரண்பட்டிருக்கலாம்.
ரசனையில் அவர்களையும் ஒன்று சேர்த்த படம்- ‘தில்லானா மோகனாம்பாள்’.
இருவருமே தங்களுக்குப் பிடித்தமானதாகச் சொன்ன படம் அது.
தமிழ் சினிமாவின் ‘கிளாசிக்’ வரிசையில் இடம்பெறும் இசை, நாட்டியமயமான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பலரையும் கிறங்க வைத்த நாதஸ்வரத்தை வாசித்தவர்கள் தேர்ச்சி பெற்ற கலைஞர்களான சேதுராமனும், பொன்னுசாமியும்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் வீடு. முழுக்க கேடயங்களும், பரிசுகளும், பிரபலங்களுடன் புகைப்படங்களுமாய் நிறைந்த வீட்டில் சேதுராமன்-பொன்னுசாமி சகோதரர்களை சந்தித்த தருணம் அருமையானது.
எட்டுத் தலைமுறையாக நாதஸ்வரம் வாசிக்கிற குடும்பம். மீனாட்சியம்மன் கோவிலில் வாசிப்பது விசேஷம். இவர்களுடைய தாத்தா அந்தக் காலத்தில் நாதஸ்வரத்தில் மிகவும் பிரபலம்.
அதற்கடுத்து நடேசன், சண்முகம் என்று சகோதரர்கள் இருவருமே நாதஸ்வரத்தில் கெடு கெட்டி. அதே மாதிரி அடுத்த தலைமுறையில் சேதுராமனும், பொன்னுசாமியும்.
இருவருமே ஏழாவது, ஐந்தாவது வகுப்புக்குப் பிறகு படிக்கப் போகவில்லை. ராத்திரியே போய் மீனாட்சியம்மன் கோவிலில் படுத்துவிடுவார்கள். அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து கொலு மேளம் வாசிப்பதில் தொடங்கி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யும் வரை வாசிப்பு.
கோவிலில் இருந்து சம்பளம், சாதம் வரும். மைசூரிலிருந்து காரைக்குடி திருவிழாக்கள் வரை சேதுராமன்-பொன்னுசாமி இரட்டை நாதஸ்வரத்திற்குத் தனி மவுசு.
உச்சபட்சக் குரலில் பாடும் மதுரை சோமு இவர்களுக்குப் பக்கத்துவீடு. “மாமா’’ என்றழைத்திருக்கிறார்கள் அவரை. இன்னும் தள்ளி மேலக்கோபுரத் தெருவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அம்மா சண்முகவடிவின் வீடு.
அப்போது எம்.எஸ். சின்னப் பெண். இவர்களுடைய தாத்தா பொன்னுசாமி கோவிலில் குஞ்சம்மா என்றழைக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரியைக் கேட்டுவிட்டு மடியில் தூக்கி வைத்துப் பாராட்டியிருக்கிறார்.
“குஞ்சு… நீ உலகத்தில் பெரிய ஆளா வருவே’’ – இளம் வயதில் இவர்கள் இணைந்து வாசித்தபோது அருகில் வரவழைத்துப் பாராட்டிக் கொஞ்சியவர் நாதஸ்வர மேதையான டி.என்.ராஜரத்னம் பிள்ளை.
அவருக்கு “ராஜபிரபுக்’’ பட்டம் கிடைத்தபோது நடந்த பாராட்டு விழாவில் நாதஸ்வரம் வாசித்த இன்னொரு மாமேதை யார் தெரியுமா? காருகுறிச்சி அருணாசலம். எல்லோரும் இசையால் ஒன்றுபட்டிருந்தோம்.
எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டூடியோவில் வாசித்திருக்கிறோம். சிவாஜி வீட்டில் வாசித்திருக்கிறோம். கை நிறையப் பணத்தைக் கொடுத்தனுப்பினார் எம்.ஜி.ஆர்.
தமிழிசை மன்றத்தில் எங்களுடைய வாசிப்பைக் கேட்ட திரைப்பட இயக்குநரான ஏ.பி.நாகராஜனுக்கு எங்கள் வாசிப்பு பிடித்துப் போய்விட்டது. ஜெமினி அதிபர் வாசனிடம் ஒருவழியாக “தில்லானா மோகனாம்பாள்’’ கதைக்கான அனுமதியை வாங்கிவிட்டார் ஏ.பி.என்.
எங்களை வரவழைத்து விதவிதமாக வாசிக்கச் சொன்னார்கள் ஏ.பி.என்.னும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும். நிறையச் சங்கதிகளை வாசித்தோம். அவர்களுக்குச் சந்தோஷம்.
மறுநாள் சிவாஜியும், கவிஞர் கண்ணதாசனும் இருக்க-அவர்களுக்கு முன்னால் ஐந்தரை மணி நேரம் வாசித்தோம். அவ்வளவு லயித்துப் பாராட்டினார்கள் இருவரும். கை தட்டிச் சிறு குழந்தையைப் போல ரசித்தார் சிவாஜி.
இந்துஸ்தானி இசையைக் கலந்து வாசித்தோம்… பாருங்கள். கண்ணதாசனின் மடியில் தலை சாய்த்தபடி ‘பிரமாதம்’ என்று தலையாட்டிப் பாராட்டியதை மறக்கமுடியாது. எங்களைப் படத்தில் வாசிக்க வைக்க முடிவு எடுத்துவிட்டார் ஏ.பி.என்.
நாதஸ்வர இசைக்கான ரிக்கார்டிங், ஸ்டூடியோவில் நடக்கும். சிவாஜி சரியாக வந்து எங்களை உற்றுக் கவனித்தபடியே இருப்பார். வாசிக்கும்போது எங்களுடைய முகபாவங்கள், விரலசைவு, காலை இசைக்கேற்றபடி ஆட்டுகிற பாங்கு, எல்லாவற்றையும் கவனித்து மனதில் ஏற்றியிருப்பது, பிறகு படத்தைப் பார்த்தபோது தான் தெரிந்தது.
சென்னையில் நான்கு மாதங்கள் ரிகர்ஸல் நடந்தது. முதலில் ரிகர்ஸல் நடந்து ரிக்கார்டிங். படத்தில் வரும் ‘தில்லானா’ பாட்டுக்கு மட்டும் இருபது நாட்கள் ரிகர்ஸல். ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் தான் நகுமோ, ஆயிரம் கண் போதாது, நலந்தானா என்று பல பாடல்களைப் பதிவு பண்ணினார்கள்.
நலந்தானா பாடல் பதிவின் போது பி.சுசீலா வந்தார். அவர் பாடிக் காண்பித்தார். நாங்கள் வாசித்துக் காண்பித்தோம். இரண்டு மாதங்கள் கழித்து ரிக்கார்டிங்கில் அழகாகப் பாடினார் சுசீலா.
அப்போது சிவாஜிக்குப் பிறந்த நாள் விழா. அவருடைய வீட்டுக்கு வாசிக்க வரச்சொல்லியிருந்தார் சிவாஜி. போய் வாசித்தோம். சில இங்கிலீஷ் நோட்ஸ் எல்லாம் வித்தியாசமாக வாசித்துக் காட்டினோம். கை தட்டி ரசித்தார் சிவாஜி. நாங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது “நீங்க வாசிச்ச இங்கிலீஷ் நோட்ஸ் படத்தில் கண்டிப்பா உண்டு’’ என்று சொன்னார் ஏ.பி.என். அதற்கேற்றபடி காட்சியையும் படத்தில் சேர்த்துவிட்டார்.
ஒரு நாள் ரிகர்ஸலின் போது நாங்கள் ஒருபுறம். எதிரே சிவாஜி, ஏ.வி.எம்.ராஜன், பாலையா, சாரங்கபாணி குழுவினர் எதிர்புறம். நாங்கள் அசலாக நாதஸ்வரத்தை வாசிக்க, எதிரே இருக்கிற அவர்கள் வாசிக்கிற மாதிரி நடிக்க வேண்டும்.
நகுமோ-வை நாங்கள் வாசித்து முடித்தோம்.
எதிரே இருந்த சிவாஜி புருவம் உயர்த்திக் கேட்டார்.
“எப்படி இருக்கு?’’
“நீங்க தான் ஒரிஜினல்… நாங்கள் நகல்னு சொல்ற அளவுக்கு நடிச்சிட்டீங்க’’- நாங்கள் சொன்னோம்.
சிவாஜிக்கு மகிழ்ச்சி. அந்த அளவுக்கு எங்களுடைய முகபாவங்களை அப்படியே பார்வையில் உறிஞ்சிய மாதிரி நடிச்சிருந்தார்.
டி.எஸ்.பாலையா அண்ணன் எங்கள் குழுவில் இருந்த தவில் காரரிடம் வாசிக்கக் கற்றுக் கொண்டு படத்தில் அமர்க்களப் படுத்திவிட்டார். அவ்வளவு அற்புதமான கலைஞர்கள்!
1968 ல் வெளிவந்த ”தில்லானா மோகனாம்பாள்’ படம் எங்களை எங்கேயோ உயர்த்திவிட்டது. நிறைய நிகழ்ச்சிகள். நிறையப் பாராட்டுக்கள்’’ என்று சொல்லிக் கொண்டிருந்த சேதுராமன், பொன்னுசாமி சகோதரகள் மனம் நெகிழ்ந்த சம்பவம்.
“முதல்வராக இருந்த அண்ணா அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு தினத்தந்தி வெள்ளிவிழா நடந்த அரங்கிற்குள் நுழைந்தார்.
நாங்கள் அப்போது வேறு கீர்த்தனையை வாசித்துக் கொண்டிருந்தோம். அதை நிறுத்திவிட்டுச் சட்டென்று ‘நலந்தானா…நலந்தானா?’ பாடலை வாசித்ததும் கண்ணசைத்துத் தலையாட்டினார் அண்ணா. அரங்கில் பலத்த கைதட்டல்’’
– என்று சொல்லிக் கொண்டிருந்த சேதுராமன் தன்னருகில் பட்டுத்துணி போர்த்தியிருந்த நாதஸ்வரத்தை எடுத்துத் துணி விலக்கி குழந்தையைப் போல மென்மையாக எடுத்து வாசித்தார்.
வாசித்த தருணத்தில் நாதஸ்வரத்திலிருந்து இசை பொங்கித் ததும்பி அருவியைப் போலப் பரவி அறையை நிறைக்கிறது ‘நகுமோ’.
ஆண்டுகள் பல கழிந்தாலும் இசை மயமான அந்தத் தருணங்கள் நினைவில் தழும்பைப் போலிருக்கின்றன.
– மணா