பகுத்தறிவை வளர்க்கும் சக்தி கொண்டது வாசிப்பு!

மறைந்த மக்கள் தலைவர் மார்க்சிய தோழர் சங்கரய்யாவின் இறுதி நாட்களில் எடுக்கபட்ட படங்களில் இதுவும் ஒன்று.

முதுமையின் உடலியக்கம் தளர்வுற்றாலும் தொடரும் அறிவின் தாகத்தை உணர்த்தும் ஓர் பாடத்தை இது குறிப்பதாகவே உணர்கிறேன்.

வாசிப்பின் நேசிப்பு என்பது மூளையின் உயிர்சக்தியை புத்துணர்வோடு வைத்திருக்கும் என்பதின் எடுத்துகாட்டு இந்த படம்.

கண் பார்வை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். எனினும் அறிவின் தாகத்தை தணிக்கும் வற்றாத நீருற்று தொடர் வாசிப்பு மட்டுமே!

சமூகத்தின் மாறுதலுக்கான சிந்தனையை வாசிப்பின் மூலம் தக்க வைத்து கொண்டதால் தோழர் என்.எஸ். அவரகள் 102 ஆண்டுகள் உயிர்ப்போடும்
உணர்வோடும் வாழ்ந்துள்ளார்!

தந்தை பெரியாரும் இவரை போல லென்ஸ் உதவியோடு இறுதி வரை படித்து அறிந்தார்!

நீதியரசர் திரு.வி.ஆர். கிருஷணய்யர் அவர்கள் தனது 99-வது வயது வரையிலும் படித்துக் கொண்டும் ஆங்கில பத்திரிகைகளில் அவ்வப்போது அன்றைய பிரச்சினைகள் குறித்த தனது கருத்துகளை சமூக உணர்வோடு அறிவார்ந்த கட்டுரைகளை தனது உதவியாளர்கள் மூலம் தட்டச்சு செய்து அனுப்பி கொண்டிருந்தார்.

கலைஞர் அவர்களும் தனது இறுதி நாட்களில் கூட கணினி மற்றும் நவீன தகவல் தொடர்பு அறிவை வளர்த்து கொண்டு இருந்தார். தனது சிந்தனையின் மூலம் சோர்வின்றி பல்வேறு தளங்களில் இயங்கி கொண்டு இருந்த மாபெரும் ஆளுமை.

வாழ்வின் சோர்வுகள் முதுமையை தாக்கும் போதெல்லாம் அதனை எதிர்கொள்வதற்கு மூளையின் இயக்கம் புத்துணர்வோடும் வற்றாத சிந்தனை ஆற்றலுடன் இருப்பது அவசியம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது தொடர் வாசிப்பு அதனை உறுதி செய்யும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு 

இறுதி வரை இயங்கி கொண்டு இருத்தல் என்பது அவசியம். அதற்கான உந்து விசை பகுத்தறிவாகும். அதனை மேலும் மேலும் வளர்க்கும் சக்தி என்பது வாசிப்பாகும்.

– பாலசுப்பிரமணியம்

You might also like