நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம்
புதிதாக ஓரிடத்துக்குச் செல்லும்போது, கையில் என்னென்ன எடுத்துச் செல்வோம். அத்தியாவசியத் தேவைகளை மட்டும் யோசித்து அவற்றை ‘பேக்’ செய்வோம்.
ஒருநாள் அல்லது ஒரு வார காலப் பயணமாக அல்லாமல், குறிப்பிட்ட காலம் தங்க வேண்டிய அவசியம் வந்தால் என்ன பொருட்களைக் கொண்டு செல்வோம்?
உணவு, உடை, உறைவிடம் மற்றும் அலங்காரத்துக்கானவை தவிர்த்து ஓய்வுக்காகச் சில பொழுதுபோக்கு அம்சங்களைத் தேடுவோம்.
இன்றைய சூழலில் மொபைல் போன் அல்லது லேப்டாப் போன்றவை அதனை ஈடுகட்டிவிடும்.
இருபதாண்டுகளுக்கு முன்னர், அந்த இடத்தைத் தொலைக்காட்சி பிடித்திருந்தது என்பதே உண்மை. கூடவே டிடிஹெச் இணைப்பு அல்லது கேபிள் இணைப்பு கிடைத்தால் வசதியாக இருக்கும் என்று நினைத்திருப்போம்.
ஒருவேளை தொண்ணூறுகளில் இது போன்ற அனுபவத்தை எதிர்கொண்டிருந்தால், கையோடு கொண்டுசெல்ல ஆண்டெனாவையோ அல்லது விசிஆர் போன்ற உபகரணங்களையோ தேடியிருப்போம்.
அந்த அளவுக்குத் தொலைக்காட்சி நம் தினசரி வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. இப்போதும் விடாப்பிடியாக அந்த நிலையைத் தொடர்ந்து வருகிறது.
முதல் தொலைக்காட்சி!
எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் போலவே, தொலைக்காட்சியும் பலகட்ட மேம்பாடுகளுக்குப் பிறகே குறிப்பிட்ட வடிவத்தைப் பெற்றது எனலாம்.
அந்த வகையில் பால் நிப்கோவ் தொடங்கி விளாடிமிர் ஸ்வாரிகின், ஜான் லோகி பெய்ர்டு, டேவிட் சார்னாஃப், பிலோ ஃபேர்ன்ஸ்வொர்த் என்று பலர் அவ்வரிசையில் இடம்பெறுகின்றனர்.
இவர்களில் ஃபேர்ன்ஸ்வொர்த் தான் பிம்பங்களை கோடுகளாக மாற்றி, பின்னர் ஒளிபரப்பின் வழியே கிடைக்கும் கோடுகளைப் பிம்பங்களாக மாற்றும் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். 1927ஆம் ஆண்டு இவர் தனது தொலைக்காட்சியை உலகிற்குக் காண்பித்தார்.
அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் பத்து லட்சம் வீடுகளில் தொலைக்காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதுவே, அதன் மீது மக்கள் கொண்டிருந்த அபிமானம் எத்தகையது என்பதைச் சொல்லும்.
1950ஆம் ஆண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் தொலைக்காட்சியை இயக்கும் நுட்பம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கடுத்த ஆண்டே வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.
அறுபதுகளில் கேபிள் ஒளிபரப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. படிப்படியாகப் பல முன்னேற்றங்களைக் கண்டு, தற்போது தொலைக்காட்சி தனது எடையைக் குறைத்து ‘ஸ்லிம்’ ஆக உலா வருகிறது.
இதன் பின்னணியில் பல நிபுணர்களின் அயராத உழைப்பு இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முக்கியமாக தந்தி மற்றும் தொலைபேசியின் கண்டுபிடிப்பு இவ்வளர்ச்சியின் ஆதாரமாக உள்ளது.
தொலைக்காட்சியின் பயன்கள்!
எண்பதுகளில், தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்குத் தொலைக்காட்சியின் பயன்கள் நன்கு தெரியும்.
‘ஹீமேன்’, ‘பிங்கு’ கார்ட்டூன்களை பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கியது முதல் ‘கண்மணிப்பூங்கா’, ‘வொண்டர் பலூன்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளை வேடிக்கை பார்த்தது வரை, அனைத்தையும் அதிசயமாகப் பார்க்க வைத்தது தொலைக்காட்சி.
சென்னை தொலைக்காட்சியின் தமிழ் அலைவரிசையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களைப் பார்க்கத் தலைசீவி அலங்கரித்து சம்மணமிட்டு அமர்ந்த நாட்கள் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன.
‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்ற எழுத்துகளைக் கூட சலிப்பு தட்டாமல் பார்த்த காலம் அது.
அப்படிப்பட்ட தொலைக்காட்சியால் பேச்சு, நடை, உடை, பாவனைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம்.
ஆங்கிலம் பேசக் கற்றுத் தருவது, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களைப் போதிப்பது என்று ஒருபக்கம் கல்விக்கு உறுதுணையாக இருந்தது என்றால்,
தேசத் தலைவர்கள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த தொலைக்காட்சித் தொடர்கள், சுரபி போன்ற கலாசாரச் செறிவுமிக்க நிகழ்வுகளின் தொகுப்பு போன்றவை மூலமாகத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் வழி காட்டியது.
நமது பேச்சை, செயல்பாட்டைப் பதிவு செய்து நாமே கண்டுணர்வது போல, தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பப் பார்க்கும் விஷயங்கள் நமக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்கும்.
அதனாலேயே கல்வியூட்டல், தகவல் அளித்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகவே பொழுதுபோக்கினைத் தொலைக்காட்சியில் பெறலாம் என்று நிபுணர்கள் வகுத்தனர்.
இன்றோ, அது வெறூமனே பொழுதுபோக்குக்காக மட்டுமே என்றாகிவிட்டது.
அதையும் மீறி, அந்தப் பொழுதுபோக்கின் வழியாகவும் பல படிப்பினைகளைப் பெற்று வருகிறோம் என்பதே உண்மை.
சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ தொடர் வழியாக, சாதாரண மக்கள் மத்தியில் பெண்களை ஆண்கள் நடத்தும் விதம் குறித்த விவாதம் தொடங்கியிருக்கிறது.
இது போன்ற எண்ணற்ற மாற்றங்களைப் பல தளங்களில் தொலைக்காட்சி நிகழ்த்திக் கொண்டுதான் வருகிறது.
ஊறும் எரிச்சல்!
‘ஒரே ஒரு நாள் இந்த டிவி இல்லாம வாழ்ந்தா எப்படியிருக்கும்’ – ஒரு விடுமுறை தினத்தை முழுமையாகத் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து செலவழித்து மண்டை கிறுகிறுக்கும்போது தோன்றும் எண்ணமே அது.
கிட்டத்தட்ட ஒரு போதை மனநிலையில் ஊறும் எரிச்சலாகவும் அது வெளிப்படும். அந்த அளவுக்குத் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி பார்த்தது உடல் மற்றும் மனச்சோர்வை உண்டாக்கியிருக்கும்.
போலவே, நாம் செய்ய வேண்டிய வேலைகளை, அடைய வேண்டிய லட்சியங்களை நிறைவேற்றவிடாமல் தொலைக்காட்சி தடுப்பதாகவும் சிலர் குறை சொல்கின்றனர்.
முக்கியமாக, குழந்தைகள் கல்வி, விளையாட்டு மற்றும் இன்னபிற திறன் வளர்த்தலில் ஆர்வம் காட்டாமல் இருக்க முக்கியக் காரணமாக தொலைக்காட்சியே உள்ளது.
இவற்றில் இருந்து விலகி மிகச் சிலர் மட்டுமே தேவையான அளவுக்குத் தொலைக்காட்சியைப் பயன்படுத்தும் பக்குவத்தைப் பெற்றிருக்கின்றனர்.
ஆதலால், தொலைக்காட்சி இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா? அப்படிப்பட்ட வீடுகள் இந்த பூமியில் இருக்கின்றனவா என்பது போன்ற கேள்விகள் எழுவது இயல்பு.
அந்தக் கேள்விகளுக்குப் பதில்களைத் தேடத் தொடங்கும்போது, தொலைக்காட்சி அவசியமா என்பது தானாகப் பிடிபடும்.
தொலைக்காட்சியைக் கொண்டாடுவோம்!
என்ன பேசினாலும், ‘தொலைக்காட்சி இல்லா உலகு சாத்தியமல்ல’ என்று நமக்கும் தெரியும். செய்திகளை அறிந்துகொள்வதில் தொடங்கி நம்மை ஆசுவாசப்படுத்தி இயல்புக்குத் திருப்புவது வரை முக்கியப் பங்காற்றி வருகிறது அச்சாதனம்.
கோவிட் காலகட்டத்தில் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்தவர்கள் பலர் திகட்டலுக்கு ஆளானார்கள்.
அது இல்லாமல் வாழ முடியுமா என்று பரீட்சித்துப் பார்க்கத் தொடங்கினார்கள். அப்போது, தினமும் எவ்வளவு மணி நேரம் தொலைக்காட்சிக்கு ஒதுக்கலாம் என்பதை அறிந்துகொண்டார்கள்.
இப்போதெல்லாம், ஓயாது விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையைப் போல நம் வீடுகளில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது.
எல்லைகள் தாண்டி, மொழிகளுக்கு அப்பாற்பட்டு, பல்வேறு கருத்துகளை அது நம் வீட்டுக்கே நேரடியாகக் கொண்டு வந்து தருகிறது. பல விஷயங்களில் நமக்கு விழிப்புணர்வூட்டும் பணியையும் செய்து வருகிறது.
வாழ்வின் முக்கியக் கட்டங்களில் முடிவெடுப்பதிலும் கூட, அது ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆகையால் தொலைக்காட்சியினால் விளையும் தீமைகளை விட நன்மைகளைக் கணக்கில்கொண்டு அதனைப் போற்றுவதே சரியானதாக இருக்கும்.
அதற்கேற்ப, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதியன்று ‘உலக தொலைக்காட்சி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா பொதுச்சபை அறிமுகப்படுத்திய இக்கொண்டாட்டம், இன்று உலகம் முழுக்கப் பரவியிருக்கிறது.
தொலைதூரத்தில் தெரியும் காட்சி என்பது நூறாண்டுகளுக்கு முன்னர் நிச்சயம் பேரதிசயமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
அந்த மலைப்பை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு, நமக்கு என்ன தேவையோ அவற்றை மட்டும் தொலைக்காட்சியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த நுட்பம் நம் மனதுக்குள் பூப்பதென்பது, அறிவியல் கண்டுபிடிப்புகளை விடவும் மேம்பாடு மிக்கது;
அந்த அறிவும் ஆற்றலும்தான், இது போன்ற இன்னும் பல சாதனங்களைக் கண்டுபிடிப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமையை என்றும் பெருகச் செய்யும்!
– உதய் பாடகலிங்கம்